எங்கும் பனிமூட்டம், பச்சை காடுகள்: மூணாறுல பார்க்க நிறைய இருக்கு
எங்கு திரும்பினாலும் பனிமூட்டம், பச்சை பசேலென்ற காடுகள், ரம்மியமாய் ஆர்ப்பரிக்கும் அருவிகள், அழகிய காபி, தேயிலை தோட்டங்கள் என கண்ணுக்குக் குளிர்ச்சி தரும் மூணாறு, உங்களுக்கு நீங்கா நினைவுகளை தரும்.
மூணாறு, மலையேற்றப் பாதைகள், பரந்த தேயிலைத் தோட்டங்கள், கன்னி காடுகள், உருளும் மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏராளமான இயற்கை அழகுக்காக சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் சொர்க்க மலை வாசஸ்தலம் ஆகும்.
Advertisment
இடுக்கி மாவட்டம் மூணாறில் ஆண்டின் பல மாதங்கள் குளிர், பனி போன்றவற்றுடன் சாரல் மழையும் பெய்வதால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்தியது போல இருக்கிறது. மூணாறைச் சுற்றிலும் உள்ள அணைகளில் படகுசவாரி, பசுமையான பள்ளத்தாக்கு, பூங்கா, மலையேற்றம், நீர்வீழ்ச்சி போன்ற பொழுது அம்சங்களும் அதிகம் உள்ளன.
மழைக்காலங்களில் இப்பகுதி மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. ஒரு காலத்தில் ஆங்கிலேய அரசின் கோடை வாசஸ்தலமாக விளங்கிய மலைவாசஸ்தலம், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ தாவரமான நீலக்குறிஞ்சிக்கு பெயர் பெற்றது.
மூணாறில் அதிகமாக நம் கண்களைக் கொள்ளைகொள்வது தேயிலைத் தோட்டங்கள்தான். அதனிடையே வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளைக் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். இங்கு திடீர் திடீரென கிளைமேட் மாறி விடுவது அதன் அதிசயத்தக்க அம்சம்.
மூணாறில், இறவிக்குளம் தேசிய பூங்கா, அட்டுக்காடு நீர்வீழ்ச்சிகள் மாட்டுப்பட்டி அணை, நியமக்கடா எஸ்டேட், எக்கோ பாயிண்ட் ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். மூணாறு யானைச் சவாரி மிகவும் பிரபலம். சின்னாறு ட்ரெக்கிங் பாயிண்ட், சந்தன மரக்காடு, செங்குளம் போட்டிங், குந்தளா, லக்கோம் நீர்வீழ்ச்சி போன்றவை மூணாறில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்.
இந்த பரந்து விரிந்த அற்புதமான தேயிலைத் தோட்டங்கள் உங்களுக்கு நீங்கா நினைவுகளை தரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“