scorecardresearch

வறுமையோடு வாழ்க்கை… நாடகக் கலைஞர் முத்து சிற்பியின் வாழ்க்கையை திசை மாற்றிய விஜய் டி.வி

விருமன் படத்தில் யுவன் இசையில் முத்துசிற்பி பாடிய வானம் கிடுகிடுங்க பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

வறுமையோடு வாழ்க்கை… நாடகக் கலைஞர் முத்து சிற்பியின் வாழ்க்கையை திசை மாற்றிய விஜய் டி.வி
Muthu sirpi

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோ, இன்று வெற்றிகரமாக  அடுத்த சீசனுக்கு அடியெடுத்து வைத்திருக்கிறது. சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் என பல சீசன்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு, இசையில் தங்களின் திறமையை நிருபித்தனர்.

இப்படி சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டவர்கள் வெறும் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல், பிரபல பின்னணி பாடகர்களாவும் ஆகிவிடுகின்றனர். செந்தில், ராஜலட்சுமி, ஆதித்யா, மானசி, ஆஜித், ஸ்ரீநிஷா, பிரகதி, சாம்விஷால், அஜிஷ் என ஏராளமான பாடகர்களை தமிழ் திரையிசைக்கு சூப்பர் சிங்கர் தந்துள்ளது.

அதில் பலரையும் கவர்ந்தது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 8 என்று சொன்னால் மிகையில்லை. மாகாபா, பிரியங்கா தொகுப்பாளராக இருக்க, பென்னி, உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் நடுவர்களாக இருக்க இந்த சீசனின் பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சி முதல் ஃபைனல்ஸ் வரை ஒவ்வொரு எபிசோடும் வேற லெவலில் இருந்தது.

அப்படி இந்த சீசனில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. ஸ்ரீதர் சேனா, பரத், அபிலாஷ், முத்து சிற்பி, அனு, மானசி, கானா சுதாகர், அய்யனார் என இந்த சீசனில், ஒவ்வொரு இசை ஜெனரிலிருந்தும் போட்டியாளர்கள் இருந்தனர். முத்து சிற்பி ஒரு மேடை பாடகர், சுதாகர் ஒரு கானா பாடகர், அய்யனார் சுயாதீன இசைப்பாடகர், அபிலாஷ் கர்நாடக சங்கீத கலைஞர் என இசையின் மொத்த பேக்கேஜையும் இந்த சீசனில் ரசிகர்கள் அனுபவித்தனர்.

அதில் ஆரம்பத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் முத்து சிற்பி. மேடை நாடகக் கலைஞர் மற்றும் பாடகரான முத்து சிற்பி, முதல் பாலில் சிக்ஸர் அடிப்பது போல, அறிமுக சுற்றிலேயே, ”உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது” பாடலை பாடி, நடுவர்கள் மட்டுமல்ல, அதை பார்த்த ரசிகர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தார். முத்து சிற்பிக்கு பல மேடைகளில் பாடி, அனுபவம் இருப்பதால் சரளமாக இந்த பாடலை பாடியிருக்கலாம் என்று கூட சிலர் நினைத்தனர்.

ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் பருத்தி வீரன் படத்தின் அய்யய்யோ பாடல், தாளம் படத்தின் காதல் யோகி பாடல், விடை கொடு எங்கள் நாடே, மணித்துளி மணித்துளி பாடல்களுக்கு, முத்துசிற்பி தன் குரலின் வழியே இன்னொரு உயிர் கொடுத்தார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முத்து சிற்பி ஒருமுறை தன் வாழ்க்கை, வாட்டும் வறுமை, அதிலும் தான் நேசிக்கும் நாடகக் கலையை விடாமல் பிடித்தது குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அப்போது முத்து சிற்பி பேசுகையில்; புதுக்கோட்டை மாவட்டம் கோதைமங்களம் கிராமம் தான் என் ஊரு. நாடகக்கலை மேல எனக்கு அதிகமான பற்று இருக்குது. பக்கத்து ஊருல நாடகம் நடக்கும் போது, நாங்க நண்பர்களாம் சேர்ந்து, டயர் கொளுத்திக்கிட்டு, காட்டுவழியா நடந்து போயி நாடகம் பார்ப்போம். அதுலருந்து நாடகத்துல நம்மளும் நடிக்கணும் ஆசை வந்தது. அந்த ஏக்கம் என் மனசுல இருந்துட்டே இருந்தது. என் மாமா அழகர்சாமி தான் என்னோட முதல் குருநாதர். அவர்கிட்ட இருந்துதான் என்னோட நாடக பயணம் ஆரம்பமானது. அப்போதான் நாடகக் கலையை மறுபடியும் மக்கள்கிட்ட கொண்டு போனும்னு ஆல்பம் பண்ணேன். அதுக்காக 5 லட்சம் செலவு பண்னேன்.

என் அம்மா உடம்பு சரியில்லாம இருந்தாங்க. என் அண்ணன் சிங்கப்பூர்ல வேலை பாத்துட்டு இருந்தாங்க. அம்மாவ பாக்கிறதுக்கு என்கிட்ட காசு இல்ல. எனக்கு கல்யாணம் பண்ணி பாக்கனும்னு என் அம்மாவுக்கு ஆசை. அவங்க ஆசைபடியே கல்யாணம் நடந்தது. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. அப்போதான் லாக்டவுன் வந்தது. எங்களால நாடகம் போட முடியல. மொத்த குடும்பமும் சாப்பிடவே கஷ்டப்பட்டோம். அந்த நேரத்துலதான் சென்னையில சக்தி மணிகண்டன் என்னோட நண்பர், யூடியூப்ல என்னோட வீடியோ பாத்துட்டு, சூப்பர் சிங்கர் ஆடிஷன் நடக்குது. உங்களோட வீடியோ அனுப்புங்க சொன்னாரு. அப்புறம் நான் செலக்ட் ஆயிட்டேனு சொன்னாங்க.

பல வருஷமா பாடிற மாட்டோமா, நாமளும் டிவில வந்துற மாட்டோமானு ஏங்கிட்டு இருக்கும் போதுதான் இப்படி ஒரு வாய்ப்பு விஜய் டிவி மூலமா கிடைச்சது. அப்போவும் என்ன பாடப்போறோம், நம்ம எப்படி வரப்போறாம்னு சந்தேகமா இருந்தது. அப்போதான் நான் எந்த நாடகக் கலையில இருந்து வந்தேனோ, அந்த நாரதர் வேஷத்துல என்னோட அறிமுக சுற்றுல பாடினேன்.

பாடி முடிச்சு ஊருக்கு வந்துட்டேன். நம்ம பாடுனதை எல்லா மக்களும் ஏத்துப்பாங்களானு எனக்குள்ள நிறைய கேள்விகள் வந்தது. ஆனா, நான் பாடுன பாட்டு விஜய் டிவியில ஒளிபரப்பான உடனேயே எனக்கு நிறைய போன் வந்தது. சொல்லப்போனா என் போன் ஹேங் ஆயிடுச்சு. ஒரு சில மாவட்டங்கள்ல இருந்த என்னோட நாடகக் கலை சூப்பர் சிங்கர் மூலமா, இன்னைக்கு எல்லா நாடுகளுக்கும் போயி சேர்ந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த நாடகக் கலை உயிர்பெற்று வரணும், மேலும் இந்த நாடகக் கலைய மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்ப்பேன் என்று ஆனந்தம்பொங்க கூறியிருந்தார்.

அதைப்போலவே இன்று முத்துசிற்பி, ஹிப் ஹாப் ஆதி, யுவன், இமான் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிவிட்டார். அதிலும் விருமன் படத்தில் யுவன் இசையில் இவர் பாடிய வானம் கிடுகிடுங்க பாடல் அதிரிபுதிரி சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அவரது குரலில் சில பாடல்கள்  வெளிவர உள்ளன.

இப்படி விஜய் டிவியில் ஆரம்பித்த முத்து சிற்பி இசை பயணம் இன்று துபாய், ஸ்ரீலங்கா, மலேஷியா என கண்டங்கள் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Muthu sirpi super singer 8 vijay tv

Best of Express