விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 76 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் மைனா, விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் கார்த்தியின் விருமன் படத்திலும் கார்த்தியின் அண்ணியாக நடித்து அசத்தினார்.
இந்நிலையில் இப்போது மைனா விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வீட்டில் நுழைந்திருக்கிறார். ஏற்கெனவே இந்த சீசன் ஆரம்பிக்கும் போது, மைனாவும் வீட்டுக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
மேலும் வீட்டுக்குள் 20 போட்டியாளர்கள் இருக்கும் போது, ஒருவேளை தாமதமாக வைல்ட் கார்ட் எண்ட்ரீ இருக்கலாம் என ரசிகர்கள் கணித்தனர்.
இப்போது யாரும் எதிர்பாராத விதமாக, மைனா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
பிக்பாஸ் ஆரம்பித்து முதல் வாரத்திலேயே ஜிபி முத்து- தனலெட்சுமி சண்டை, சமையல் கிளப்பில் மகேஷ்வரி, சாந்தி மாஸ்டர், ஷிவின் இடையே சச்சரவுகள் என புயல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த சனிக்கிழமை எபிசோடில், கமல்ஹாசனே இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், 40 நாட்களுக்கு பிறகு நடக்க வேண்டிய சர்ச்சை எல்லாம் முதல் வாரத்திலேயே தொடங்கி விட்டதாக கூறினார்.
இது ஒருபுறமிருக்க, ஜிபி முத்து, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர் என கலகலவென இருக்கும் பிக்பாஸ் வீடு, இப்போது நந்தினி வருகையால் மேலும் அலப்பறையாக போகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் மைனாவும், ரச்சிதாவும் ஏற்கெனவே சரவணன் மீனாட்சி சீரியலில் இணைந்து நடித்திருப்பதால், வீட்டில் இருவரும் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் உள்ளது.
இதனிடையே, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன் யோகேஷ், மைனாவுடன் சேர்ந்து எடுத்த படங்களையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து, மக்களின் ஆதரவும் அன்பும் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“