மும்பை: இந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ளவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. தொழிற்துறையில் தனக்கென தனி தடம் பதித்தவர் என்றால் அது மிகையாகாது.
பல கோடிகளுக்கு சொந்தக்காரரான அவர் குடியிருக்கும் வீடு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்த்தால் தலை சுற்றிவிடும். ஆம்! முகேஷ் அம்பானி தனக்கென 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வைத்திருக்கிறார். சுமார் 4-லட்சம் சதுர அடி அளவில் அந்த குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளதாம்.
அவரின் அந்த குடியிருப்பின் பெயர் 'ஆன்டிலியா'. மும்பையில் அமைந்துள்ள இந்த கட்டடம், அதன் பிரம்மாண்ட கட்டுமானத்தால் 40-மாடி குடியிருப்பின் அளவு உயர்ந்து காணப்படுகிறதாம். கட்டடம் மற்றும் இடம் ஆகியவற்றை சேர்த்து மதிப்பிட்டால், அந்த குடியிருப்பின் மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது.
பிரம்மிப்பை ஏற்படுத்தும் ஆன்டிலியா குடியிருப்பில் சுமார் 180 கார்களை நிறுத்தும் அளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அங்கு 3-ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளதாம். ஆன்டிலியாவின் 8-வது மாடியில் தியேட்டர் ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த தியேட்டரில் சுமார் 50-பேர் அமர்ந்து படம் பார்க்க முடியுமாம்.
மேலும் செயற்கையாக பனி விழும் வகையில் ஓய்வறையும் உள்ளதாம். கோடை காலத்தை அங்கு குளிர் காலமாகவும் அனுபவிக்க முடியும் போலும்.
முகேஷ் அம்பானி பயன்படுத்தும் காரின் விலை சுமார் ரூ.8.5 கோடியாம். அவரின் கார் பி.எம்.டபிள்யூ 760எல்.ஐ (BMW 760Li). அந்த காரின் உண்மையான விலை ரூ.1.9 கோடி என்ற போதிலும், ரூ.8.5 கோடி எப்படி வந்தது? என நீங்கள் நினைப்பது புரிகிறது. காரில் உள்ளே பயணம் செய்வது முகேஷ் அம்பானி அல்லவா, அவரின் பாதுகாப்பு அம்சங்களுக்காக தான் மீதமுள்ள தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் இது மட்டுமல்லாமல் மேபச் 62(Maybach 62) மற்றும் பென்ஸ் எஸ் கிளாஸ் (Mercedes-Benz S Class) போன்ற பல்வேறு கார்களையும் வைத்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், ஜாம்நகர் எண்ணெய் நிலையம் தான் உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாம்.
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ-வின் வருகை புரட்சி என்றே கூறலாம். இலவசமாக 4ஜி டேட்டா மற்றும் இலவச அழைப்புகள் என அள்ளி வழங்கிய முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம், தற்போது இந்தியாவில் முக்கியமான தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் தனது அதிரடி சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. இதன் மூலம் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட 170 நாட்களில் 100 கோடி வாடிக்கையாளர்களை பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.