சென்னைப் போக்குவரத்து காவல்துறை சென்னை அண்ணாசாலயில் உள்ள நந்தனம் - வெங்கடநாராயணா சாலை ஜங்ஷன் சிக்னலில் போக்குவரத்து மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின் போது போக்குவரத்து காவல்துறை செய்த மாற்றங்களை மீண்டும் கொண்டு வருவதால், சென்னை வெங்கடநாராயண சாலையில் இருந்து அண்ணா சலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் புதன்கிழமை இன்று முதல் மீண்டும் ஒரு சுற்று பாதையில் செல்ல வேண்டும். நந்தனம் சிக்னல் ஜங்க்ஷனில் போக்குவரத்து நெரிசல் குறித்து போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் நடத்தப்படுகிறது.
2012 - 2019 ஆண்டுகளுக்கு இடையே, சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானம் காரணமாக நந்தனம் சிக்னல் ஜங்ஷனுக்கு செல்லும் அனைத்து அணுகு சாலைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
தி.நகரில் உள்ள வெங்கடநாராயண சாலையில் இருந்து வாகனங்கள் அண்ணா சாலையை அடைவதற்கு முன்பு தெற்கு போக் சாலை மற்றும் பாண்டி பஜார் நோக்கி திரும்ப வேண்டும் அல்லது அண்ணா சாலையில் சேருவதற்கு முன்பு புர்கிட் சாலை மற்றும் மூப்பரப்பன் தெருவில் செல்ல வேண்டியிருந்தது.
ஜூலை 2019 இல், காவல்துறையினர் பழையபடி 2012-ம் ஆண்டுக்கு முன்னர் இருந்தது போல, ஜங்ஷனில் நான்கு வழி போக்குவரத்தை அனுமதித்தது. ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, வாகன ஓட்டிகள் எல்லா பக்கங்களிலிருந்தும் மீண்டும் இந்த வழியாக செல்ல முடிந்தது.
இந்த நிலையில், பழையபடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட பின்னர், வாகன ஓட்டிகள் நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து விதிமீறல்களைப் பற்றி புகார் செய்யத் தொடங்கினர். அதோடு, பலரும் பழைய ஏற்பாட்டை மீண்டும் கொண்டு வருமாறு போலீசாரைக் கேட்டுக்கொண்டனர்.
மேலும், போக்குவரத்து காவல்துறையினரும் குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த அலுவலக நேரங்களில் நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிரமப்பட்டதால், நந்தனம் மெட்ரோ நிலையம் மற்றும் சுரங்கப்பாதைகளின் கட்டுமானத்தின் போது அவர்கள் போக்குவரத்து மாற்றங்களை மீண்டும் கொண்டு வர முடிவு செய்தனர்.