அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் போல, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் 'தேசிய மருத்துவர் தினம்' கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல் அமைச்சராக பதவி வகித்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்). 1882-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த இவர், நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவராக இருந்துள்ளார்.
1948-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 1962 ஜூலை 1-ஆம் தேதி வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநில முதல்வராக திறம்பட இவர் பணியாற்றி இருக்கிறார். மருத்துவத்துறையில் திறம்பட பணியாற்றி பல்வேறு சாதனைகளை படைத்ததுடன், தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவைகள் பல செய்ததால், மத்திய அரசு 1961-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி பிடன் சந்திர ராய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது.
இந்திய மருத்துவத்துறைக்கு பெருமை தேடி தந்த பிடன் சந்திர ராய், 1962-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தன்னுடைய 80-ஆவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் செய்த மருத்துவ தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வகையில், இந்திய மருத்துவக்கழகம் அவருடைய பிறந்த நாளும், இறந்த நாளும் ஜூலை 1-ஆம் தேதி வருவதால், அன்றைய தினத்தை `தேசிய மருத்துவர் தினமாக' அனுசரித்து வருகிறது. தொடர்ந்து மருத்துவத் துறையில் சிறப்பாக சேவையாற்றி வருபவர்களுக்கு `டாக்டர் பி.சி.ராய்' விருது வழங்கப்பட்டு வருகிறது.
மனிதர்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர் காப்பவர்கள் தான் மருத்துவர்கள். ஆனால், அவர்களின் ஆயுள் சராசரி மக்களை விட குறைவாக இருக்கிறது என்கிறது இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ) ஆய்வு முடிவு.
இந்தியாவில் மருத்துவர்களின் சராசரி வயது 55 முதல் 59 ஆண்டுகளாகவே உள்ளதாம். இது பொது மக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் (சாதாரண மக்களின் ஆயுள் 69 முதல் 72 ஆண்டுகள்) குறைவாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/a688-300x217.jpg)
அதிக மன அழுத்தம், சொகுசு வாழ்க்கை காரணமாக உடல் செயல்பாடு குறைதல், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவை மருத்துவர்களின் ஆயுளைக் குறைத்து வருகிறதாம்.
எனவே, தங்களுக்காக மட்டுமல்லாது, மற்ற உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற பொது நலனும் அடங்கி இருப்பதால், மருத்துவர்கள் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை ஆழமாக வலியுறுத்தி மருத்துவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.
மருத்துவர் தினம் மற்ற நாடுகளுக்கிடையே மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.