சராசரியாக ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் அவசியமானது உணவு, உடை, இருப்பிடம் ஆகிய 3 தேவைகள் தான். இந்த 3 தேவைகளும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் என்றால் அவன்தான் முதல் பணக்காரன் என்று சொல்வார்கள். ஆனால் இதில் தற்போது முதல் இரண்டுமே மனிதனுக்கு கிடைப்பதில் கேள்விக்குறியாக இருக்கிறது. விவசாயம் செய்தால் தான் உணவு என்ற நிலை இருக்கும்போது விவசாயிகள் விவசாயம் செய்ய போதுமான வசதிகள் இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது.
உணவு உடை இருப்பிடம் இந்த மூன்றுக்குமே விவசாயம் முக்கியமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக உணவுக்கும் உடைக்கும் அவசியம். பருத்தி விவசாயம் செய்தால் தான் அதில் இருந்து பஞ்சு கிடைக்கும். பஞ்சில் இருந்து நூல் எடுத்து அதை தான் ஆடை நெய்ய பயன்படுத்துவார்கள். பண்டைய காலக்கட்டங்களில் கைத்தறியில் நெய்த ஆடைகள் மக்கள் மத்தயியில் பெரிதான பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மின் இயந்திரத்தில் நெசவு தொழில் நடைபெறுகிறது.
இதன் காரணமாக கைத்தறி நெசவு தொழில் அழிந்து வரும் தொழில்களின் பட்டியலில் இணைந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இந்த தொழிலை கைவிட்டு வேறு வேலைகளை பார்க்க சென்றுவிட்டார்கள். அதே சமயம் ஒரு சில இடங்களில் பாரம்பரியமான கைத்தறி தொழிலை செய்து வருகின்றனர். அந்த கைத்தறி நெசவாளர்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ந் தேதி கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கைத்தறி தினம் அறிவிக்கப்பட்டது எப்போது?
கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திரமோடி ஆகஸ்ட் 7-ந் தேதி கைத்தறி தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி முதல் கைத்தறி தினத்தை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைத்தார். கடந்த 1905-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கொல்கத்தாவில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 7-ந் தேதியை போற்றும் வகையில் அதே நாளில் கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் 10-வது கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில், பாரம்பரியமாக கைத்தறி தொழில் செய்து வரும் முருகேசன் என்பவரை தொடர்பு கொண்டு தற்போதைய காலக்கட்டத்தில் கைத்தறி நெசவாளர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டோம்.
கைத்தறி நெசவு தொழிலின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது?
கைத்தறி தொழில் இன்றைய நிலையில், அழிந்து வரும் ஒரு தொழிலாக உள்ளது. கைத்தறி பொருட்களுக்கு உரிய சந்தை மதிப்பீடு இல்லை. நெசவு செய்யும் ஊழியர்களுக்கு அதற்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக பலரும் கைத்தறி தொழிலை கைவிட்டுவிட்டார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தலைமுறையே இந்த தொழிலை கைவிட்டுவிட்டது. இதனால் கைத்தறி தற்போது அழியும் நிலையில் உள்ளது. இந்த தொழிலை ஊக்குவிப்பது தொடர்பான அரசு தரப்பிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.
100யூனிட் இலவச மின்சாரம், வேட்டி சேலைகள் அரசு தரப்பில் கொடுக்கப்படுகிறது. மற்றபடி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கைத்தறி நெசவு தொழில் 90 சதவீதம் அழிந்துவிட்டது. 10 சதவீதம் மட்டுமே இப்போது பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். இப்போது நாங்கள் கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறோம். எனக்கு வயது 56 ஆகிறது. ஆனால் எனக்கு அடுத்து வரும் தலைமுறையினருக்கு கைத்தறி என்றால் என்ன என்றே தெரியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
காஞ்சிபுரம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் தான் கைத்தறியில் பட்டுப்புடவை நெய்து இந்த தொழிலை பாதுகாத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில் கைத்தறி சுத்தமாக அழிந்துவிட்டது. கைத்தறிக்கு என்று கூட்டுறவு சங்கம் இருக்கிறது. ஆனால் அது சரியாக செயல்படவில்லை. இந்த தொழிலை ஊக்குவிப்பதற்கு, முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வதற்கும் யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியவில்லை.
உணவுக்கு விவசாயம் முக்கியம் எப்படியோ அப்படித்தான் உடைக்கு நெசவு தொழில் மிகவும் முக்கியம். இன்றைக்கு எந்திரத்தில் ஆடைகள் தயாரித்தாலும், ஆரம்ப காலத்தில் இருந்து இருக்கும் கைத்தறி தொழிலையும் பாதுகாக்க வேண்டும்.
கைத்தறி தொழிலை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
கைத்தறி தொழில் ஊதியம் மிகவும் குறைவாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு சதாரண குடிமகன் ஒரு நாளைக்கு ரூ700-750 சம்பாதித்தால் தான் வாழ்க்கையை நடத்த முடியும். ஆனால் நெசவு தொழிலில் ஒரு வேட்டி நெய்வதற்கு ரூ60 கொடுக்கிறார்கள். ஒரு நாளில் 3 அல்லது ரொம்பவும் கஷ்டப்பட்டால் 4 வேட்டி நெய்யலாம். இப்படி பார்த்தால், அவரது ஒருநாள் சம்பளம் ரூ240 தான் கிடைக்கும். இதை வைத்து எப்படி அவர் வாழ்க்கையை நடத்த முடியும்.
வருமானம் பெரியதான இல்லை என்பதே முக்கிய காரணமாக உள்ளது. அதேபோல் மூலப்பொருட்களின் விலை உயர்வால் வேட்டி சேலையின் விலை உயர்கிறது. ஆனால் நெசவாளரின் ஊதியம் உயரவில்லை. எப்படி ஒரு விவசாயி தனது பொருளுக்கு விலை நிர்ணையம் செய்ய முடியாமல் இருக்கிறாரோ அதே நிலை தான் தற்போது நெசவாளர்களும் அனுபவித்து வருகிறார்கள். வேலை செய்வதற்காக கூலி தான் வருகிறது. ஆனால் வருமானம் (லாபம்) என்பது கொஞ்சம் கூட இல்லை.
10 வருடத்திற்கு முன்பு ஒரு வேட்டி ரூ250 என்றால் இப்போது அந்த வேட்டி ரூ350-ஆக இருக்கிறது. ஆனால் அதை நெய்த நெசவாளரின் சம்பளம் உயரவில்லை. அந்த வேட்டியை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் தான் பொருளின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. நெவாளர்களின் சம்பளம் காரணமாக விலை ஏற்றமாகவில்லை. இந்த தொழிலை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தரப்பில், இன்சூரன், மெடிக்கல் க்ளைம், 100 யூனிட் மின்சாரம் என சலுகைகள் கொடுத்தாலும் தொழிலை முன்னேற்றத்தில் கொண்டு செல்வதற்காக வேலை வாய்ப்பினை அவர்கள் தரவில்லை. அதனால் நெசவாளர்களுக்கு அதற்கு உண்டான வருமானமும் கிடைக்கவில்லை. ஒரு கம்பி கட்டும் தொழிலாளி போனால் ரூ1000 சம்பாதிக்கிறார். கட்டிட சித்தாள் வேலைக்கு ரூ700, மேஸ்திரி ரூ1100 சம்பாதிக்கிறார்கள்.. அதேபோல் அரசாங்கத்தின் ஏரி வேலை திட்டத்தில் சென்றால் கூட ரூ300 சம்பளம் கிடைக்கிறது, ஆனால் நாள் முழுவதும் நெய்தாலும் நெசவாளர்களுக்கு அந்த சம்பளம் இல்லை.
இதை அரசு தரப்பில் யாரும் கண்டுகொள்ளவில்லை. எப்படியாவது இவர்கள் வாழ்ந்து வந்துவிடுவார்கள் என்பது போன்றே இருக்கிறார்கள். அதனால் எங்களை கருத்தில் எடுத்துக்கொண்டு நெசவு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
பாவடி நிலம் இப்போது இருக்கிறதா?
கைத்தறி நெசவாளர்களுக்கு பாவடி (நூல் பதப்படுத்தும் இடம்) என்ற நிலம் இருக்கும். ஆனால் இந்த நிலம் தற்போது சும்மா இருக்கிறது என்று நினைத்து பலரும் ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள். அரசு தரப்பிலே ரேஷன் கடை, நூலகம் கட்டுவதற்கும் இந்த இடத்தை தேர்வு செய்கிறார்கள். விவசாயிகளுக்கு நிலம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் நெசவாளர்களுக்கு பாவடி மிகவும் முக்கியமான ஒன்று. இன்றைக்கு நவீன எந்திரங்கள் வந்துவிட்டதால் பாவடி நிலம் சும்மா இருக்கிறது.
அதே சமயம் பிற்காலத்தில் நவீனம் இல்லாதபோது நெசவாளர்களுக்கு பாவடி தேவை என்றால், சாலையில் போய் அதை செய்ய முடியுமா? அதனால் இந்த பாவடி நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாதபடி தமிழ்நாடு முழுவதும நெசவு தொழில் செய்பவர்களுக்கு அந்த நிலத்தின் மீது பட்டா கொடுக்க வேண்டும். இது அரசாங்கதிடம் நாங்கள் வைக்கும் முக்கிய வேண்டுகோள். பாவடி நிலத்தில் தான் நூலை பதப்படுத்தி அதன்பிறகு அதை வேட்டி சேலை, துண்டு என நெய்து விற்பனைக்கு கொடுக்போம்.
இப்போது நவீன இயந்திரத்தில். இந்த வசதிகள் வந்துவிட்டதால், பாவடி நிலத்தை இழக்க முடியாது அல்லவா. பாவடி நிலம் இருந்தால் தான் நெசவு தொழில் இருக்கும். ஆனால் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள். சூளைமேடு என்று ஒன்று இருந்தால் அது குயவருக்கு சொந்தமானது. மேச்சல் புரம்போக்கு நிலம் இருந்தால் அது விவசாயிகளுக்கு சொந்தமானது. அதேபோல் பாவடி என்ற இடம் செங்குந்தருக்கு சொந்தமானது. அதனால் இந்த பாவடி நிலத்தை பாதுகாக்க, அரசு நெசவாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.