மலை பிரதேசம் என்பதே அழகுக்கும் வனப்பிற்கும் குறைவில்லாத இடம்தான். அதை மலை ரயில் வழியாக கண்டுகளிப்பது பேரானந்த அனுபவமாக இருக்கும். ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எல்லோரும் நிச்சயம் சுற்றிப்பார்க்க வேண்டும் என ஆசைப்படுவது, மலை ரயில் வழியாக மலைகளின் பச்சைப்பசேல் அழகை. தொழில்நுட்ப கோளாறு, வானிலை என பல காரணங்களால், மலை ரயில் இயக்கப்படாதபோது சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றமடைந்துவிடுவர். அப்படிப்பட்ட மலை ரயிலின் சிறப்பம்சங்கள் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
Advertisment
1. நீலகிரி மலை ரயில் கடந்த 1899-ஆம் ஆண்டு, ஜூன் 15-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டைக் கடந்தும் மவுசு குறையாத மலை ரயில், போக்குவரத்து நடைமுறையில் புதிய முயற்சியை புகுத்தியுள்ளது.
2. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை செம்மையாக வெளிப்படுத்தும் நீலகிரி மலை ரயில், மேட்டுப்பாளையம் - ஊட்டி வரை 46.61 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது.
3. மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கிடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
4. உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமல்லாமல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் இந்த மலை ரயில், கடந்த 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
5. 250 பாலங்கள், 16 சுரங்கங்கள், 208 வளைவுகள், 24 மலை சிகரங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை ரயிலில் பயணிப்பதன் மூலம் பச்சைப்பசேல் காட்சிகள், குறிஞ்சி மலர்களின் அழகு, மலைப்பிரதேச விலங்குகள் ஆகியவற்றை 6,600 அடிக்கு மேலே நாம் கண்டு ரசிக்க முடியும். நீலகிரியிலேயே உயரமான சிகரமான தொட்டபெட்டாவின் அழகையும் முழுமையாக நீங்கள் உணரலாம்.