உள்ளூரில் இருக்கும் கைவினைப் பொருட்கள் கொண்ட சிறு தொழில்களை, ஊக்குவிற்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடங்கப்பட்ட "ஒரே நிலையம் - ஒரே தயாரிப்பு" திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் விற்பனை செய்யும் பிரத்யேக விற்பனையகம், எம்ஜிஆர் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மத்திய ரயில்வே நிலையத்தின் இரண்டாவது நுழைவு வாயில் அருகே, பட்டு கைத்தறி நெசவாளர் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களுக்கு 15 நாட்களுக்கு தெற்கு ரயில்வே விற்பனையகம் ஒதுக்கியுள்ளது.
பட்டுப் புடவைகள், அழகியல் கொண்ட தங்கப் புடவைகள் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்ட புடவைகள் ஆகியவை விற்பனையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
"ஒரே நிலையம் - ஒரு தயாரிப்பு" என்பது 2022-23 யூனியன் பட்ஜெட்டில் உள்ளூர் கைவினைஞர்கள், தயாரிப்புகள் மற்றும் தொழில்களை ஊக்குவிக்கும் முயற்சியில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழிலாளர்களுக்கான விற்பனையகத்தை கொண்டுவருவதன் மூலமாக உள்ளூர் கைவினை தயாரிப்புகளை மேம்படுத்த முடியும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். முதல் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள 16 முக்கிய ரயில் நிலையங்களில் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.
இதைப்பற்றி தமிழ் இந்தியன் எஸ்பிரஸிற்கு, பட்டு விற்பனையகத்தின் மேலாளர் பாலாஜி கூறியதாவது:
இத்திட்டத்தை முதல்முறையாக சென்னை மத்திய ரயில்வே நிலையத்தில் கொண்டுவந்துள்ளதால் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. இந்த ரயில்வே நிலையத்தில் விற்பனையகத்தை வைப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இங்கு பல ஊர்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகைபுரிவதனால், இக்கடை அதிக பிரபலமடைகிறது.
கடந்த இரண்டு நாட்கள், ஊரடங்கு காரணத்தினால் எங்கள் வியாபாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. அதன் பிறகு பல இடங்களில் இது போன்ற விற்பனையகம் வைத்தோம், இத்திட்டத்தின் கீழ், விற்பனையகம் வைப்பதனால் எங்கள் தொழிலில் முன்னேற்றம் காண முடிகிறது." என்று கூறினார்.
தென்னக ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவர் உமா அகர்வால் இந்த விற்பனையகத்தை திறந்து வைத்தார். 100க்கும் மேற்பட்ட வகைகளைக்கொண்ட பட்டுப் புடவைகள் அங்கு வாடிக்கையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையகம் ஏப்ரல் 8, 2022 வரை திறந்திருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.