நீங்கள் உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மாரா? அப்படியென்றால் நீங்கள் இதை நிச்சயம் படிக்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்களுக்கு மன அழுத்தம் இருந்தால் அது பாலூட்டுதலில் சிரமத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, தாய்ப்பாலின் அளவை மன அழுத்தம் குறைத்துவிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதாவது, உங்களின் மன அழுத்தம் உங்களுக்கு மட்டும் பிரச்சனையை ஏற்படுத்தாமல், உங்கள் குழந்தையின் நலனையும் கெடுத்துவிடும்.
தாய்ப்பால் உற்பத்தியில் ஒரு பெண்ணின் உடல் மற்றும் மன அழுத்தம் நேரடியான பங்கை வகிக்கின்றது. தாய்ப்பால் தான் குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் முக்கியமான ஒன்று. ஒரு குழந்தைக்கு வளர தேவையான அனைத்து சத்துகளும், நோய் எதிர்ப்பு சக்தி காரணிகளும் நிறைந்திருக்கும். ஆனால், குழந்தையின் தாய் மன அழுத்தத்தில் இருந்தால், தாய்ப்பால் சுரக்கும் அளவு குறைந்துவிடும் எனவும், தாய்ப்பால் சுரக்க தாமதமான நிலை ஏற்படும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
"ஒரு குழந்தை பிறந்த 2-3 நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பது அதிகரித்துவிடும். ஆனால், குழந்தை பிறப்புக்குப் பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரைகளால் அந்த தாய்க்கு மன அழுத்தம் அதிகரிக்கும். அதனால் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.", என பிரபல தனியார் மருத்துவமனையை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ரஞ்சனா ஷர்மா கூறுகிறார்.
ஒரு குடும்பத்தில் உள்ள எல்லா மூத்த பெண்களும், புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு, அவர் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என அறிவுரை புகட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், மரபு ரீதியாக நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், தாய்க்கும் குழந்தைக்கும் எப்போதும் நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்காது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, குழந்தை பேறுக்குப் பின் அதிக கொழுப்புடைய உணவுகளை தாய்மாருக்கு தருவார்கள். ஆனால், அது பிற்காலத்தில், உடல் பருமன், இதய நோய்கள் ஏற்பட வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தாயையும் குழந்தையையும் பிரித்து வைப்பது கூட தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்து. "குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய் அக்குழந்தையுடனேயே இருக்க வேண்டும். அந்த குழந்தைக்கு ஒவ்வொரு 2-3 மணிநேர இடைவேளையிலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். உடல் ரீதியாக தாயும் குழந்தையும் பிணைந்திருப்பதால், தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். குழந்தையின் ஸ்பரிசத்தால் தாயின் உடலில் உள்ள ஹார்மோன்கள் தாய்ப்பால் சுரப்பதை ஊக்குவிக்கிறது. இதற்கு மாறாக, குழந்தைகளுடன் ஒன்றிணைந்து இல்லாத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அதனால் குழந்தைகளுக்கு செயற்கை பால்களை தரவேண்டிய நிலைமை ஏற்படும். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது சிறந்தது. அதன் பின் மற்ற உணவுகளை மெதுவாக கொடுத்து பழக்கலாம்.", என மருத்துவர் ரஞ்சனா ஷர்மா கூறுகிறார்.