"ஒரு ரூபாய் கூட இல்லாமல் சென்னையில் வாழ்ந்திருக்கேன்" - செய்தி வாசிப்பாளர் கண்மணி ஃபிளாஷ்பேக்!
News Reader Kanmani Sekar Lifestyle சரி இனிமேல் அப்பாவுக்கு பிடித்தது போல கல்யாணம் பணிக்கலாம் என்கிற முடிவுக்கு சென்றபிறகுதான், எனக்கு சன் டிவி வாய்ப்பு கிடைத்தது
News Reader Kanmani Sekar Lifestyle Tamil News : இப்பொழுதெல்லாம் சின்னதிரை நாயகிகளுக்கே அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் செய்தி வாசிப்பாளர்கள் என்றால் ஒரு தனி பிரியம் வரத்தான் செய்கிறது. படிந்த ஹேர்ஸ்டைல் முதல் அவர்களின் தமிழ் உச்சரிப்பு வரை அனைத்திலும் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்திய வைரல் நாயகி, கண்மணி.
Advertisment
என்னதான் இப்போது அனைவரின் பாராட்டுகளையும் அள்ளிக் குவித்துக்கொண்டிருந்தாலும், அவருடைய ஆரம்பக்கால பயணம் அவ்வளவு சாதாரணமானது அல்ல. எவ்வளவு தடைகளை மீறி இடத்திற்கு வந்திருக்கிறார் என்பதை சமீபத்தில் அவரே பகிர்ந்துகொண்டார்.
"சிறு வயதிலிருந்தே செய்தி வாசிப்பாளராக ஆகவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதற்காக வீட்டின் எதிர்ப்புகளை மீறித்தான் சென்னைக்கு வந்தேன். சன் டிவிக்கு முன்பு நான்கு சேனல்களில் நான் பணியாற்றி உள்ளேன். இப்போது இருப்பது போல என் குரல் முன்பு இருக்காது. 'கீச் கீச்' என்று இருக்கிறது என்று பலர் கிண்டல் செய்ததுண்டு.
அடிவயிற்றிலிருந்து கணீரென்று குரல் இருக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். ஏராளமான நெகட்டிவ் கமென்ட்டுகளை கேட்டிருக்கிறேன். அவ்வளவு ஏன், செய்யாத தப்பிற்கு என்னை வேலையை விட்டுக் கூட போகச்சொல்லியிருக்கிறார்கள். யாரோ செய்த தவறுக்காக நான் பலிகடா ஆகியிருக்கிறேன். ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தேன். அப்போது நான் எதிர்கொண்ட மன உளைச்சலுக்கு அளவே இல்லை.
வேலைக்காக நான் ஏறி இறங்காத சேனல்களே இல்லை. வேலை இல்லையென வீட்டில் சொன்னதுக்கு, 'உடனே வீட்டிற்கு வா' என்றுதான் அழைத்தார்கள். ஆனால், என்னால் எனக்குப் பிடித்த வேலையை விட்டுவிட்டுப் போக முடியவில்லை. ஒரு ரூபாய் கூட இல்லாமல் சென்னையில் வாழ்ந்திருக்கிறேன். வீட்டில் பணம் கேட்கலாம் என்று நினைத்தால், நிச்சயம் வீட்டிற்கே வரச்சொல்லிக் கட்டாயப்படுத்துவார்கள் என்பதால் அவர்களின் உதவியையும் நான் கேட்கவில்லை.
இந்த நேரத்தில்தான் அப்பாவுக்கு ப்ரெயின் ஸ்ட்ரோக் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். பிறகு, அப்பாவுக்காக நான் திரும்ப ஊருக்கே சென்றுவிட்டேன். எனக்குப் பிடித்த வேலையை செய்யவேண்டும் என்பதற்காக நான் எடுத்த எல்லா முயற்சிகளிலும் தோல்வியைப் பெற்று முழுமையாக நம்பிக்கையை இழந்தேன். சரி இனிமேல் அப்பாவுக்கு பிடித்தது போல கல்யாணம் பணிக்கலாம் என்கிற முடிவுக்கு சென்றபிறகுதான், எனக்கு சன் டிவி வாய்ப்பு கிடைத்தது.
அந்த நொடிதான் நான் உயிர் பிழைத்ததைப் போல உணர்ந்தேன். உடனே கிளம்பி சென்னை வந்துவிட்டேன். இப்போது எனக்குப் பிடித்த வேலையை மகிழ்ச்சியாக செய்துகொண்டிருக்கிறேன். எப்போதுமே ஒரு விஷயம் நமக்கு மிகவும் எளிதாய் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு நமக்குத் தெரியாமலேயே போய்விடும். நான் இந்த இடத்திற்கு வருவதற்கு முன்பு ஏராளமான கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். அதனால், என் வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன் மதிக்கிறேன்" என்கிறார் உருக்கமாக.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil