ச. மார்ட்டின் ஜெயராஜ்
சென்னையில் புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 50 மில்லி லிட்டர் தாய்ப்பால் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், தாய்ப்பால் நிரப்பப்பட்ட 50 பாட்டில்களை பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்த அதிகாரிகள், அந்த கடைக்கு சீல் வைத்தனர்.
பொதுவாக, அரசு மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வங்கிகளில் கிடைக்கும் தாய்ப்பால், தற்போது ஏதோவொரு தெருமுனையில் இருக்கும் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. தாய்ப்பாலை வணிக ரீதியாக கடைகளிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்யக்கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
“ உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006இன் படி, தாய்ப்பாலை பதப்படுத்துவதும் விற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வணிகரீதியாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்" என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதன் உத்தரவில் கூறியுள்ளது.
ஆனால், இந்த உத்தரவுகளை மீறி தாய்ப்பால் வணிகரீதியாக கடைகளிலும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பாலூட்டும் தாய்மார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தாய்ப்பாலை இது போன்று பதப்படுத்தி வணிகரீதியாக விற்பனை செய்யக்கூடாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜ்.
கடைகளில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கேட்க நாம் அவரை தொடர்பு கொண்டு பேசினோம். இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ப்ரீத்தி ராஜ் பேசுகையில், "புதியதாக பிறந்துள்ள குழந்தைக்கு தேவைப்படும் முக்கிய உணவாக தாய்ப்பால் இருக்கிறது. அதனை வணிகரீதியாக கடைகளில் விற்பனை செய்ய தடை விதித்திருக்கிறது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.
நிறைய அரசு மருத்துவமனைகள், பல அரசு சாரா அமைப்புகள் (என்.ஜி.ஓ) தாய்ப்பாலை தானமாக பெற்றுக் கொள்கிறார்கள். தங்களது குழந்தைக்கு போக, மீதமுள்ள பாலை மற்ற குழந்தைகளின் வாழ்க்கைக்காக கொடுக்க முன்வரும் தாய்மார்கள் இங்கு தானமாக வழங்கலாம். இதனை குழந்தை பெற்று 6 மாதங்களே ஆனா தாய்மார்கள் மட்டுமே செய்யலாம். 6 மாதங்களை கடந்த தாய்மார்கள் தங்களது தாய்ப்பாலை தானமாக கொடுக்கக் கூடாது.
ஏன்னென்றால், குழந்தை பெற்று 6 மாதங்களை கடந்த தாய்மார்களின் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து இருக்காது. ஒரு வயதை கடந்த குழந்தை வைத்துள்ள தாய்மார்கள் கூட தங்களது தாய்ப்பாலை தானம் செய்யக்கூடாது. இதனால், அந்த தாய்மார்களின் ஆரோக்கியம் பாதிப்படையும். அவர்களின் தாய்ப்பாலை உட்க்கொள்ளும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும்.
தாய்ப்பால் வங்கிகள் சிறந்தவை என்பேன். பவுடர் பாலா அல்லது தாய்ப்பாலா என வருகிறபோது, தாய்ப்பால் தான் சிறந்தது. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாய்ப்பாலில் தான் இருக்கிறது. தாய்ப்பாலால் மட்டுமே ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். அதனால், வணிகரீதியாக கடைகளில் விற்பனை செய்யப்படும் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கக் கூடாது.
தாய்ப்பால் வங்கிகளில், பாலை நன்கு பேஸ்டுரைசேஷன் (உணவுப் பாதுகாப்பு செயல்முறை) செய்ய வேண்டும். அதேபோல், அதனை சரியான முறையில் பதப்படுத்த வேண்டும். இதனை அவர்கள் சரியாக செய்யவில்லை என்றால், அந்த தாய்ப்பால் குழந்தைகளுக்கு விஷமாக மாறி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒழுங்கற்ற முறையில் பேஸ்டுரைசேஷன் செய்யப்படும் தாய்ப்பாலை உட்கொள்ளுவதால் சால்மோனெல்லோசிஸ், இ - கோலி, லிஸ்டீரியா, கேம்பிலோபாக்டர் போன்ற உணவு தொடர்புடைய நோய்கள் வருவதற்கும், உணவு விஷமாக மாறுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால், தாய்ப்பாலை முறையாக பேஸ்டுரைசேஷன் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
டாக்டர் ப்ரீத்தி ராஜ் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். அவர் வூட்டு நியூட்ரிஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.