பாகிஸ்தான் நாட்டில் பல்லியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், ஆண்மை விருத்தி மருந்தாக பயன்படுகிறது.
Advertisment
என்ன கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் இது உண்மைதான்.
பாகிஸ்தானின் கள்ளச்சந்தையில் விற்கப்படும் இந்த தைலம், பல்லியின் கொழுப்பை தேள் எண்ணெய்யில் ஊறவைத்து அதனுடன் சில காரமான மசாலாக்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டு, சட்ட விரோதமாக விற்கப்படுகிறது.
இது சண்டா எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது.
அரியவகை செதில்வாழ் பல்லிகளில் இருந்து இந்த எண்ணெய் தயாரிக்கப்படுவதால் இதற்கு இந்த பெயர் கிடைத்துள்ளது. இந்த தைலத்தின் 5 சொட்டுகள் உடலுறவில் அதிக நேரம் ஈடுபடுவதை தூண்டும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து DW Tamil யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ
விறைப்புத்தன்மை குறைபாட்டால் அவதிப்படுவோருக்கு இந்த எண்ணெய் தங்கம் போன்றது. இதுவே அனைத்து எண்ணெய்களுக்கும் ராஜா. ஆண்களின் உடல்வலி, பலவீனம் போன்றவற்றை நீக்குவதற்காகவே இது தயாரிக்கப்பட்டது. தங்களின் வசதிக்கேற்ப அனைவரும் இதை வாங்குகிறார்கள் என்கிறார், பல்லி எண்ணெய் விற்பனை செய்யும் யாசிர் அலி.
பாகிஸ்தானில் வயாக்ரா போன்ற உடலுறவு தொடர்பான மருந்துகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சில கள்ளச்சந்தைகளில் விற்கப்படும் பாலுணர்வு மருந்துகள் அங்கு பிரபலமாக இருக்கின்றன.
அதேசமயம் இந்த எண்ணெய் தயாரிப்பவர்களும், அதை பயன்படுத்துபவர்களும் அது மனித உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பை கண்டுகொள்வதில்லை.
மேலும் செதில்வாழ் பல்லிகள் அதிகமாக சுரண்டப்படும் போது, அவை அழியும் நிலைக்கு ஆளாகலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர் அஹமது ஷஹாப் கூறுகையில், இது முற்றிலும் முட்டாள்தனமானது. இதில் எந்த உண்மையும் ஆராய்ச்சியும் இல்லை. இது பயனுள்ளதாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டவோ அல்லது நிரூபிக்கவோ எதுவும் இல்லை என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“