அறுவை சிகிச்சையில் கித்தார் வாசித்த இசைக்கலைஞர்

“நானும் மருத்துவர்களும் சிறப்பாக உணர்கிறோம். அறுவை சிகிச்சை செய்யும்போதே அதன் வெற்றியை நாங்கள் உணர்ந்தோம். இனிமேல் நான் என் கனவை நோக்கி நகர்வேன்.”

பெங்களூரில் டிஸ்டோனியா எனப்படும் நரம்பியல் இயக்கக் கோளாறால் பாதிக்கப்பட்ட கித்தார் இசைக்கலைஞர் அதற்கான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டபோது அவர் கித்தார் வாசித்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்த அபிஷேக் பிரசாத் (37) கித்தார் இசைக்கலைஞர். இவர் டிஸ்டோனியா எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். டிஸ்டோனியா என்பது ஒருவகை நரம்பியல் இயக்கக் கோளாறு நோய். இது இசைக்கலைஞர்களை குறிப்பாக கித்தார் வாசிப்பவர்களை பாதிக்கக்கூடியது. இதனால், கிட்டார் வாசிக்கும்போது அபிஷேக்கின் கை விரல்களில் மிகுந்த வலி ஏற்படும். இதனால், அவருடைய இடது கையிலுள்ள மூன்று விரல்கள் செயலற்றுபோனது. இதன் காரணமாக அபிஷேக் கித்தார் வாசிப்பதையே நிறுத்திவிட்டார்.

இதையடுத்து, பல மருத்துவர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்தார் அபிஷேக் பிரசாத். இந்நிலையில், பெங்களூரிலுள்ள பி.ஜே.எம். மருத்துவமனையில் மூளையில் செய்யப்படும் கடினமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இவ்வகை அறுவை சிகிச்சை இந்தியாவில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி அபிஷேக் சித்தாத்திற்கு அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை முழுவதும் அபிஷேக் பிரசாத் கித்தார் வாசித்துக்கொண்டே இருந்தார். கித்தார் வாசிக்கும்போதுதான் மூளையில் எந்த இடத்தில் அவருக்கு பிரச்சனை என்பது தெரியும். அதனால், கித்தார் வாசிக்கும்போது தனக்கு எங்கு வலி இருப்பதை உணர்கிறாரோ அதனை அபிஷேக் மருத்துவர்களிடம் சொல்ல சொல்ல மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

“நானும் மருத்துவர்களும் இத்தருணத்தில் சிறப்பாக உணர்கிறோம். அறுவை சிகிச்சை செய்யும்போதே அதன் வெற்றியை 100 சதவீதம் நாங்கள் உணர்ந்தோம். இனிமேல் நான் என் கனவை நோக்கி நகர்வேன். ஒரு மாத பூரண சிகிச்சைக்குப் பின் மீண்டும் நான் வாசிக்கிறேன். என் விரல்கள் இப்போது நான் சொல்வதைக் கேட்கின்றன.”, என மகிழ்ச்சி தெரிவிக்கிறார் அபிஷேக் பிரசாத்.

×Close
×Close