Pepper Chutney recipe Tamil : நம் அன்றாட வாழ்வில் பல நேரங்களில் உணவே மருந்தாகச் செயல்படுகிறது. அப்படிப்பட்ட மருந்து வகைகளில் தவிர்க்க முடியாத மற்றும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருள், மிளகு. தினசரி ஒரு ஸ்பூன் அளவு மிளகு சேர்த்துக்கொண்டால்கூட நோய்களிடமிருந்து விலகி இருக்கமுடியும். அப்படிப்பட்ட சக்திவாய்ந்த மிளகை வைத்து சுவையான இந்த சட்னியை செய்து பாருங்கள், நிச்சயம் மறுமுறை கேட்கத் தூண்டும். இந்த சுலபமான, அருமையான சட்னியை எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருள்கள்
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பெரிய பழுத்த தக்காளி - 3
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1 சிட்டிகை
சீரகம் - 1 சிட்டிகை
தேங்காய்த் துருவல் - 1 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை
பெருங்காயம்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானதும் அதில் மிளகு, காய்ந்த மிளகாய், வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும். இந்தக் கலவையை ஆறவிடவும்.
அதே கடாயில், 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை முழுமையாகப் போகும் வரை வதக்கவேண்டும். தக்காளி தொக்கு பதத்துக்கு வந்தவுடன் அதில் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
தக்காளி தொக்கு நன்கு ஆறியபிறகு, அதனோடு ஏற்கெனவே வறுத்து வைத்திருந்த பொருள்கள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் பதத்தில் இந்த சட்னி இருந்தால் சுவையாக இருக்காது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
பிறகு இந்த கலவையோடு, எண்ணெய்யில் தாளித்த கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிப்பைச் சேர்த்தால் சுவையான காரசாரமான மிளகு சட்னி தயார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"