Pollachi Papryus faraway orginals Kadar explains life of Kadar tribesmen : ஆனைமலை காடுகளில் மலசர், மலை மலசர், எரவாளர், புலையர், காடர் என பலதரப்பட்ட மலைவாழ் பழங்குடிகள் வசித்துவருகின்றனர். காட்டின் வழி அறிந்தவர்கள், காடுகளில் வாழும் மக்கள், காட்டின் காதலன் என எல்லா பொருளும் ஒரு காடருக்கு சொந்தமாகும்.
மேலும் படிக்க : காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள்… கல்லாறு மக்களின் நிலை என்ன?
சமீபத்தில் காடர்கள், இடம் பெயர்தல், காடுகளில் இருந்து வெளியேற்றப்படுதல், மழை வெள்ளங்களில் சிக்கித் தவித்து வாழும் நிலமற்று வெளியேறுதல், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாகுதல் என்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி பப்பைரஸ் மற்றும் ஃபாரவவே ஒரிஜினஸ் இரண்டும் இணைந்து 6 நிமிட குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளனர். காடுகளின் ஓசையும், விலங்குகள், கோட்டான்களின் கூவல்களும், பெருவிலங்கின் மூச்செறியும் ஓசையும் பின்னணியில் இசைக்க காடர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த குறும்படம்.
“நாங்கள் இங்கு தான் இருக்கின்றோம். நான், என் மனைவி, என் குழந்தை என அனைவரும் இங்கு தான் இருக்கின்றோம். நீ எங்களை நன்றாக அறிவாய். எங்களின் வாழ்வை நீ நன்றாக அறிந்திருக்கிறாய். இருந்தும் ஏன் என் அருகே வருகிறாய்” என்று வீட்டைத்தாக்க வந்த அந்த ஒற்றைக் கொம்பன் யானையிடம் பேசுகிறார் அந்த காடர் லோகநாதன். ஆம் அப்படித்தான் ஆரம்பமாகிறது அந்த 6 நிமிட குறும்படம்.
”நீ உன்னை அறிந்ததைப் போல் இந்த காடுகளின் பாதையையும் நீ அறிவாய். உன் பாதையில் ஒரு காட்டு விலங்கினை காண நேரிட்டால், வேறு பாதையை தேர்வு செய்து தொடரு, அல்லது அந்த விலங்கு செல்வதற்கு ஒரு பாதையை உருவாக்கு”, “முன்னோர் காடுகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் கொடுத்த மரியாதையை நீயும் உன் தலைமுறையையும் இன்று இக்காட்டுக்கு தர வேண்டும்” என்று தலைமுறை தலைமுறையாக காடர்கள் தங்களின் வம்சாவளிகளுக்கு காடுகளின் மர்மமாக இதைத்தான் சொல்லிச் செல்கிறார்கள்.
”இந்த பாதையில் பல்வேறு காட்டு விலங்குகள் மத்தியில் நான் அமைதியாக வாழ்கின்றேன். அவைகளிடத்தில் எனக்கும் அச்சம் உண்டு. ஆனால் பேருந்துகளில் நடத்துனர் என்னிடம் பயணச்சீட்டு வாங்க சொல்லும் போது ஏற்படும் அச்சத்தை விட அது குறைவு தான்” என்று முடிகிறது அந்த படம்.
விலங்குகளுக்கு மனிதர்களின் இடமோ, மனிதர்களின் பயமோ தேவையில்லை. அதன் தேவையெல்லாம் உணவும் தனக்கான பாதையும் தான். யானைகளுக்கும் மழைவாழ் மனிதர்களுக்கும் இடையேயான பந்தம் நேற்று இன்று உருவானது இல்லை. காலம் காலமாய் இந்த பந்தம் விளங்கிக் கொள்ள முடியாதவாறு, விளக்கிக் கொள்ளும் வகையில்லாது ஒன்றோடு ஒன்று பிண்ணிப் படர்ந்தது. நமக்கோ அது வெறும் காட்டு விலங்கு. அவர்களுக்கோ அது காட்டின் ஓர் அங்கம்.
மேலும் படிக்க : யானைகள் ஏன் கும்கிகள் ஆக்கப்படுகிறது? தமிழக பாகன்களின் கதை தெரியுமா உங்களுக்கு?
இந்த படத்தின் முடிவு தான் ஏதோ செய்ய வலியை உணர செய்கிறது. காடுகளை நாம் தான் அழித்தோம். கோவில்கள் கட்டினோம். அணைகள் கட்டி பழங்குடிகளை இடம் மாற்றி அமர்த்தினோம். தேயிலை தோட்டங்கள் உருவாக்கினோம். சமவெளி மனிதர்களாக அவர்களை மாற்ற பெரும் முயற்சி செய்தோம். அவர்களின் இயல்புகளோடு அவர்களை நாம் வாழ விடவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. அதனால் தான் சமவெளி மனிதர்களை கண்டு அவர்கள் என்றும் அஞ்சுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.