பொங்கல் என்பது சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு தமிழர் பண்டிகை. இது அடிப்படையில் ஒரு அறுவடைத் திருவிழா. பொதுவாக தமிழ் சூரிய நாட்காட்டியின்படி தை மாதத் தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் வீடுகளுக்கு சுத்தம் செய்து, புது வர்ணம் பூசி, அரிசி கோலங்களால் மக்கள் வீடுகளை அலங்கரிப்பார்கள்.
Advertisment
நம் முன்னோர்கள் காலத்தை கணிக்கும் போது, ஒரு வருடத்தை இரண்டு பகுதிகளாக உத்தராயணம் மற்றும் தக்ஷிணாயணம் என்று பிரித்தனர். உத்தராயணத்தில் சூரியன் உதிக்கும் திசை முதலில் கிழக்கில் தோன்றி படிப்படியாக வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும்.
தக்ஷிணாயணம் என்பது சூரியன் உதிக்கும் கிழக்கில் தொடங்கி படிப்படியாக தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து பின் மீண்டும் கிழக்கு திசைக்கே திரும்பும். உத்தராயணம் வெயில் காலத்தையும், தக்ஷிணாயணம் குளிர் காலத்தையும் குறிக்கும். இந்த தை மாதம் உத்தராயணம் தொடங்குவதன் முதல் நாளாகும். இந்த காலகட்டத்தில் படிப்படியாக குளிர் குறைய தொடங்கி சூரிய வெப்பம் அதிகரிக்க தொடங்குகிறது. சூரியனின் தெற்கு இயக்கத்திற்கு மாறாக இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ஆகையினால் தான் இந்த தை மாதத்தில் சூரியனின் வெப்ப காலத்தை வரவேற்க, மேன்மேலும் விவசாயம் மேலோங்க, அறுவடை செய்யப்பட்ட புதிய அரிசி மற்றும் வெல்லம் சேர்த்து பொங்கல் படைத்து சூரியனை விவசாயிகள் வழிபடுகின்றனர்.
Advertisment
Advertisements
மேலும் இது சூரியன் மகர ராசியில் (மகர்) நுழைவதையும் குறிக்கிறது, நாட்டின் பல வடக்கு பகுதிகளில் இதை மக்கள் “மகர சங்கராந்தி” பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
பொங்கல் பண்டிகை வரலாறு
புராணத்தின் படி, சிவபெருமான் ஒருமுறை தனது காளையான பசவாவை பூமியில் இறங்கி மக்களை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடச் சொன்னார், தினமும் எண்ணெய் மசாஜ் செய்து குளிக்கச் சொன்னார்.
ஆனால் பசவா தவறுதலாக, அனைவரும் மாதத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்து, தினமும் சாப்பிட வேண்டும் என்று அறிவித்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான்’ பசவத்தை பூமியில் என்றென்றும் வாழும்படி சபித்தார். பூமியில், பசவா மக்களுக்கு அதிக உணவை உற்பத்தி செய்ய உதவ வேண்டும் என்று பணிக்கப்பட்டது., இதுவே இன்று வரை கால்நடைகள் விவசாயத்துக்கு பயன்படுவதற்கு காரணம் என புராணம் கூறுகிறது.
தமிழகத்தில் பொங்கல்
தமிழகத்தில் பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான மார்கழியின் கடைசி நாள், போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது மக்கள் தங்கள் பழைய உடைமைகளை அகற்றி புதிய விஷயங்களைக் கொண்டாடும் நாள். இந்நாளில் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணங்கள் பூசப்படுகின்றன.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்
தை மாதம் முதல் நாள் சூரிய பொங்கல். இது நல்ல அறுவடை வழங்கியதற்காக சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், இந்நாளில் புதிதாக அறுவடை செய்த அரிசியுடன், வெல்லம், காய்ச்சிய பாலைக் கொண்டு சமைத்த பொங்கலை, மக்கள் சூரிய பகவானுக்கு படைத்து நன்றி தெரிவிப்பார்கள். அன்று விவசாயிகள் தங்கள் கலப்பை மற்றும் அரிவாள்களில் சந்தனம் தடவி சூரியனையும், பூமியையும் வணங்குவார்கள்.
இரண்டாவது நாள் மாட்டுப் பொங்கல். அன்று தங்களுக்கு பால், உரங்களை வழங்குவதுடன், விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, அவற்றின் கொம்புகளுக்கு பளபளப்பான வண்ணங்கள் பூசி, மலர்களால் மாலை அணிவிக்கப்படுகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட பொங்கல் பின்னர் கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.
இறுதியாக காணும் பொங்கல் அன்று, மக்கள் தங்கள் சொந்தங்களுடன் ஒன்றுகூடி ஒன்றாக உணவருந்தி கொண்டாடுகிறார்கள்.
இந்த தைப் பொங்கல், உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் சேர்க்க, தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“