ராஜஸ்தானில் உள்ள ஒரு கடைக்கோடி கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக பாலியல் தொழில் செய்து வருகின்றனர்.
என்ன! கேட்கவே திகைப்பாக இருக்கிறது.
இது உண்மைதான். கடந்த 4 தசாப்தங்களாக இந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ
என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் உணர்ந்தபோது எனக்கு 15 வயது. அதேநேரம் நாங்கள் மிகவும் ஏழ்மையில் இருந்தோம். அதனால் தான் இந்த தொழிலுக்கு வந்தேன் என்கிறார் பாலியல் தொழிலாளி ரச்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
இந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்களை போலவே ரச்சனாவும் இந்திய சாதி அமைப்பில் கீழ் மட்டத்தில் இருக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்.
இங்குள்ள பலரை போலவே இவர்களும் அதிக கடனில் இருந்துள்ளனர். இந்த சூழல் தான் இதற்கு முன்பும் இவரது குடும்ப உறுப்பினர்களை பாலியல் தொழிலில் தள்ளியது.
ரச்சனா தன் 15வது வயதில் தன் குடும்பத்திற்காக, தன் தாயிடமிருந்து அந்த தொழிலை ஏற்றுக் கொண்டார்.
ரச்சனா தொடர்ந்து கூறுகையில், ‘என் தம்பிகளும், தங்கைகளும் அடிக்கடி உணவுக்காக பிச்சையெடுக்க வேண்டிய சூழல் இருந்தது. எங்களுக்கு நிலம், வீடு, சொத்து என எதுவுமே இல்லை. உண்மையில் எங்களிடம் ஒன்றுமே இல்லை.
அப்போது தான் பணம் சம்பாதிப்பதற்கான ஒரே வழி இதுதான், முக்கியமாக இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் தான் எங்களால் வாழமுடியும் என்பதும் எனக்கு தெளிவானது.
ஒரு நாள் என் தாயிடம் இனிமேல் இதை நீ செய்வதே நான் விரும்பவில்லை, இனி நான் பார்த்துக் கொள்கிறேன், இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு நான் தான் பொறுப்பு என்று சொன்னேன்.
நான் மிகவும் சிறுமியாக இருந்த போது மும்பையில் ஒரு வாடிக்கையாளர் என்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். எனக்கு பணம் கொடுக்கவில்லை, என்னை காட்டுமிராண்டித் தனமாக தாக்கி ஆடைகளையும் பறித்துக் கொண்டார். நான் அவரை பின்தொடர்ந்து சென்றேன், ஆனால் என் ஆடைகளை என்னால் திரும்ப பெற முடியவில்லை. அப்போது மிகவும் அவமானமாக உணர்ந்தேன்’, என்று ரச்சனா வருத்தத்துடன் கூறினார்.
கிராமங்களில் பணம் சம்பாதிப்பது ஒரு சமூக அந்தஸ்து, இங்குள்ள ஆண்கள் இதை வரவேற்கிறார்கள்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் கூறுகையில், ’பணம் சம்பாதிப்பவர்கள் சக்திவாய்ந்தவர்கள், அந்தவகையில் எங்கள் பெண்கள் வலிமையானவர்கள். அவர்கள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு, முடிவுகளையும் எடுக்கிறார்கள், என்றார்.
இங்குள்ள பெண்களின் கணவர்கள், தந்தைகள் மற்றும் சகோதரர்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தரகர்களாக செயல்படுகிறார்கள், அதேநேரம் குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறார்கள்.
காலம் காலமாக இங்கு இப்படித்தான் வழக்கம் இருக்கிறது..
இதுபோன்ற கிராமங்கள் இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் முழுவதும் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் இந்த மக்கள் நாடோடிகளாக இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் நடனக் கலைஞர்களாகவும், வித்தைக்காரர்களாகவும் இருந்து வந்தனர். ஆனால் பிரிட்டிஷ் காலணி ஆட்சியின் போது இந்த மக்களின் வாழ்க்கை முறையை தடை செய்தது.
இன்றும் இந்த மக்களின் மீதான கண்ணோட்டத்தில் பெரிய மாற்றம் ஏதுவும் இல்லை.
இங்கு ஒரு முறையான வேலை என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதிலும் குறிப்பாக ரச்சனா போன்ற பெண்களுக்கு இது ஒரு முடிவில்லாத சுழற்சி…
ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் மாறி வருகிறது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த குட்டு நாகர், இந்த வழக்கத்தை உடைக்க விரும்புகிறார். கடினமாக உழைத்து அவர் இன்று ஆசிரியராக உள்ளார்.
ஆசிரியர் குட்டு கூறுகையில், ‘இது ஏற்கெனவே ஒரு சில குடும்பங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இங்குள்ள சிறுமிகளில் ஒருவர் அருகிலுள்ள பெரிய நகரமான ஜெய்ப்பூரில் காவல்துறையில் சேர்ந்துள்ளார். மருத்துவத் துறையிலும் பல குழந்தைகள் பணியாற்றுகின்றனர். என்னிடம் பயிலும் சிறுமிகளில் ஒருவர் மருத்துவராக போகிறார்.
இந்த குடும்பங்களில் எந்த பெண்ணும் பாலியல் தொழிலாளியாக வேலை செய்வதில்லை’, என்றார்.
குட்டுவும் இதே பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், அவரது உறவினர்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சில குடும்பங்கள் மட்டும் தான் இங்கு இன்னும் விதிவிலக்காக இருக்கின்றனர். இருப்பினும் இவை நம்பிக்கை அளிக்கின்றன…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.