Recipes In Tamil, Coconut Thogayal Making Tamil Video: சாப்பாடுக்கும், டிபனுக்கும் எத்தனை சைட் டிஷ் வந்தாலும், கிராமத்தில் நாம் சாப்பிட்டு வளர்ந்த துவையலை மறந்துவிட முடியாது. அந்தக் கால அம்மாக்கள் அம்மியில் அரைத்து கைமணத்துடன் தந்த துவையலை நம்மால் தயார் செய்ய முடியாவிட்டாலும், மிக்சியில் சுவையான துவையல் தயார் செய்ய முடியும்.
Advertisment
தேங்காய் துவையல்தான் பாரம்பரியமாக நம் வீட்டின் பிரதான சைட் டிஷ். பேச்சிலர்களும்கூட எளிதில் தயார் இதை தயார் செய்ய முடியும். தேங்காய், உடல் நலத்திற்கு நல்லது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சுவையான தேங்காய் துவையல் எப்படி தயார் செய்வது? எனப் பார்க்கலாம்.
Coconut Thogayal Making Tamil Video: தேங்காய்த் துவையல்
தேங்காய்த் துவையல் செய்யத் தேவையான பொருட்கள்: துருவி வைத்த தேங்காய் (தேங்காய் துருவலை வறுத்தும் வைத்துக் கொள்ளலாம்), ஊறவைத்த புளி, மிளகாய் வத்தல், கடுகு, உளுந்தப் பருப்பு, உப்பு, பெருங்காயத் தூள், எண்ணெய்.
நாம் தேங்காய் எடுக்கிற அளவுக்கு தக்க, மற்ற பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய்த் துவையல் செய்வது எப்படி?
ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும், முதலில் கடுகு போடவும். கடுகு வெடித்துப் பொரிந்ததும் காய்ந்த மிளகாய் வத்தல் துண்டுகளை தேவைக்கு ஏற்ப துண்டாக்கி போடவும். இதனுடன் இரண்டு ஸ்பூன் உளுந்தம் பருப்பு சேர்க்கவும். இதனை கிண்டிவிட்டு, வதக்கவும். இதனுடன் பெருங்காயத் தூள் தேவையான அளவு சேர்க்க வேண்டும். சிறிது நேரம் வதக்கினால், நல்ல மணம் கிடைக்கும்.
பிறகு துருவி வைத்த தேங்காயை மிக்சியில் போடவும். அதனுடன் ஊறவைத்த புளியை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊறவைத்த புளி என்பதால், தேங்காயுடன் சேர்ந்து எளிதில் அரைபடும். தேவைக்கு உப்பு சேர்க்கவும். வதக்கி வைத்தப் பொருட்களில் தேங்காய் வத்தலை மட்டும் எடுத்து இதனுடன் சேர்க்கவும். அரைக்க வசதியாக சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
ஓரளவு அரைபட்டதும், தாளித்தவற்றில் மீதம் உள்ள உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள் கலவையையும் இதனுடன் சேர்த்து மீண்டும் அரைக்கவும். துவையல் பதம் வந்ததும், அரைப்பதை நிறுத்துங்கள். இப்போது சுவையான தேங்காய் துவையல் ரெடி.
எளிதாகவும், விரைவாகவும் தயார் செய்யக்கூடிய சைட் டிஷ் என்பதால், இதை அனைவரும் பயன்படுத்தலாம், சாப்பாடு, இட்லி, தோசை என அனைத்திற்கும் இதை சைட் டிஷ்ஷாக பயன்படுத்த முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"