உலகின் மிகவும் பணக்கார பிச்சைக்காரர் மும்பையில் வசிக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அவரது சொத்து மதிப்பு மட்டும் 7.5 கோடி ரூபாய்…
என்ன கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்.. உலகின் பணக்கார பிச்சைக்காரர் ஆன பரத் ஜெயின், மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த சாலைகளில் இப்போதும் கூட பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஆசாத் மைதானம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் பிச்சை எடுக்கிறார். தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை பிச்சை எடுப்பதன் மூலம், ஒரு நாளில் பாரத் ரூ.2000 முதல் ரூ.2500 வரை சம்பாதிக்கிறார்…
குடும்ப வறுமை காரணமாக, படிக்க முடியாமல் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பரத் ஜெயின், இன்று தன் குழந்தைகள் இரண்டு பேரையும் கான்வென்ட் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்.
அதுமட்டுமில்லை… மும்பையில் மிகவும் பணக்காரர்கள் வசிக்கக்கூடிய பரேல் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பரத் ஜெயின் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பில் பரத்துக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன. இதன் ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய் ஆகும்..
மேலும் மும்பைக்கு அருகிலுள்ள தானே பகுதியில், இரண்டு கடைகளை விலைக்கு வாங்கி, வாடகைக்கு விட்டிருக்கிறார். இதில் மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை கிடைக்கிறது.
பரத்துக்கு இப்போது மும்பையில் 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. குடும்பம் இப்போது நல்ல வசதியுடன் வாழ்வதால், பிச்சை எடுப்பதை விட்டுவிடும்படி அவரது குடும்பத்தினர் கேட்டுள்ளனர். ஆனால், அதை மட்டும் விட முடியாது என்று பரத் ஜெயின் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“