பயணங்கள் எப்போதுமே இனிமையான அனுபவங்களை தரும் என சொல்ல முடியாது. குறிப்பாக பெண்களுக்கு. குடும்ப சூழ்நிலைகள், பணியிடங்களில் ஏற்படும் மன அழுத்தம் இவற்றிலிருந்து தப்பித்து தனியாக பயணத்திற்கு தயாராகுவதே சிரமம் தான். அப்படி, தனியாக பயணம் மேற்கொள்ளும்போது பெண்கள் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள், பின்பற்ற வேண்டிய சில பாதுகாப்பு வழிமுறைகளாக பயண நிபுணர்கள் கூறும் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
1. பயணத்திற்கு முன்பு நன்றாக திட்டமிடுங்கள். நீங்கள் பயணம் செல்ல தேர்ந்தெடுக்கும் இடங்களில், நீங்கள் எந்த உணவகம்/லாட்ஜில் தங்க திட்டமிட்டிருக்கிறீர்களோ, அங்கு அறையை முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
2. மற்றவர்களுடன் உரையாடுங்கள். நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் நம்பத் தகாதவர்களிடம் நீங்கள் எங்கு தங்குகிறீர்கள் என்பது உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை சொல்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
3. பயணம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். அவற்றை செல்ஃபோனில் படம்பிடித்தும் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், ஆவணங்கள் தவறுதலாக தொலைந்துவிட்டால் அது உங்களுக்கு கைகொடுக்கும்.
4. நீங்கள் தனியாக பயணம் செய்வதுபோல் மற்றவர்களிடம் காண்பித்துக் கொள்ளாதீர்கள். தன்னம்பிக்கையுடன் பயணியுங்கள்.
5. வழக்கம்போல பெப்பர் ஸ்பிரே, பாதுகாப்பு அலாரம் உள்ளிட்ட எளிதாக எடுத்து செல்லக்கூடிய பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருந்தால் கூடுதல் நலம். இவை ஆபத்து காலங்களில் உங்களுக்கு துணைபுரியும்.
6. ஸ்மார்ட்டாக சிந்தியுங்கள். எல்லா பணத்தையும் ஒரே இடத்தில் வைத்திருக்காதீர்கள். மற்றவர்கள் எடுக்க நினைக்காத இடங்களில் பணத்தை பிரித்து வையுங்கள்.
7. நீங்கள் எந்த இடத்திற்கு பயணிக்கிறீர்களோ அவர்கள் அணிவது போன்ற உடைகளை அணியுங்கள். உள்ளூர் மக்களை போல் நடந்துகொள்ளுங்கள். அவர்களது நம்பிக்கைகளை அங்கிருக்கும் வரையாவது ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
8. திட்டமிடாமல் வீட்டை விட்டு கிளம்பாதீர்கள். நீங்கள் எங்கு செல்கிறீர்களோ அந்த இடம் குறித்து ஒரு சிறிய ஆய்வை மேற்கொண்டுவிட்டு கிளம்புங்கள்.
9. உங்களுக்கு ஒருவர் மீது நம்பிக்கை ஏற்படாமலோ அல்லது ஒருவர் மீது நீங்கள் எதிர்மறை எண்ணங்களை உணர்ந்தால் அவருடன் எங்கும் செல்ல வேண்டாம்.