முதல்வர் ஸ்டாலின் மண்டல வாரியாக மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக, ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு நிர்வாக செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சேலம் கள ஆய்வின்போது வழியில் மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலைப் பார்த்த ஸ்டாலின் காரில் இருந்து இறங்கு, அதன் நுழைவுவாயில் முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த ஸ்டாலின் அதில், “சேலம் கள ஆய்வின்போது வழியில் மார்டன் தியேட்டர்ஸ் நுழைவு வாயிலைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்தச் சொன்னேன். T.R.சுந்தரம் அவர்கள் உருவாக்கிய நாற்றங்கால்; திராவிட இயக்கக் கலைஞர்களின் தொட்டில், முத்தமிழறிஞர் கலைஞரின் பேனா முனை தீட்டிய கூர்மிகு வசனங்களின் பிறப்பிடமான அந்த சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவு வாயிலைப் படம் பிடித்தேன்.
9 மொழிகளில் 118 படங்களைத் தயாரித்து அழியாக் கலைப்படங்களை உருவாக்கிய அந்நிறுவனத்தின் இந்த நுழைவு வாயில், பல நினைவுகளைச் சுமந்து நிற்கும் பெருஞ்சுவர்” என்று பதிவிட்டுள்ளார்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்
சேலம் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த முதல் நிறுவனம் என்ற பெருமைக்கு சொந்தமானது.
1935ம் ஆண்டு சேலம் ஏற்காடு செல்லும் பாதையில் மலை அடிவாரத்தில் திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (T.R.சுந்தரம்) என்பவரால் இது தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய திரைப்படக் கூடம் இது.
படப்பிடிப்பு தளம், ரெகார்டிங் தியேட்டர், பிரிவியூ தியேட்டர் என அனைத்து வசதிகளும் இங்கு இருந்தது. இந்த நிறுவனத்தில் முதலில் தயாரிக்கப்பட்ட படம் ‘சதி அகல்யா’.

முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, தமிழ் சினிமாவின் முதன் இரட்டை வேட படமான ’உத்தமபுத்திரன்’ (1940), மலையாளத்தில் முதல் பேசும் படமான ’பாலம்’ (1938), படங்களை தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு.
இந்தியாவில் முதன்முதலாக ’ஜங்கிள்’,என்ற ஆங்கிலப் படத்தை ஹாலிவுட் டைரக்டர் எல்லிஸ்.R.டங்கன் கொண்டு தயாரித்த பெருமைக்குரியது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பு அரங்கில் 1982 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் தயாரிக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி, ஜானகி எம்.ஜி.ஆர் என நான்கு முதல்வர்களின் முதல் படங்களை உருவாக்கிய பெருமை இதற்குண்டு. இந்த தயாரிப்பு நிறுவனத்தில் தான், கருணாநிதி முதன்முதலாக மாத சம்பளத்துக்கு வசனம் எழுதி கொடுத்தார்.
கண்ணதாசன், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் போன்ற பிரபல பாடலாசிரியர்கள் இங்கு பாடல் எழுதி உள்ளனர். 1936-ல் நேருவும், வல்லபாய் படேலும் மாடர்ன் தியேட்டருக்கு சென்று படப்பிடிப்பைக் கண்டு ரசித்துள்ளனர்.
1963ல் T.R. சுந்தரம் மறைந்தார். 60 களின் இறுதியில் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முழுவதுமாக சென்னை ஸ்டுடியோக்களுக்கு இடம்பெயர்ந்து, பின்னர் ஸ்டுடியோக்களிலிருந்து கிராமங்களுக்கு இடம்பெயர, மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில், படப்பிடிப்பு மட்டுமல்லாது பட தயாரிப்பும் நின்றுபோனது.
ஸ்டூடியோ இருந்த இடத்தில் புதிதாக வீடுகள் வந்துவிட்டன.

இன்று மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், அதன் அனைத்து சுவடுகளையும் இழந்து, சுந்தரம் கார்டன்ஸ் என்ற குடியிருப்புப் பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது. நுழைவு வாயில் பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இதனை புதுப்பொலிவாக மாற்றும் வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் சேலத்திற்கு கள ஆய்விற்காக வந்த ஸ்டாலின், வழியில் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை கண்டு, உடனே காரை நிறுத்த சொல்லி செல்பி எடுத்துக் கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“