நடித்த திரைப்படங்கள் ஒன்றிரண்டாக இருந்தாலும், அந்த திரைப்படங்கள் முழுவதிலும் பார்வையாளர்களின் கண்கள் அவரைவிட்டு அகலாத வண்ணம், தேர்ந்தெடுத்து நடிக்கும் வழக்கம் கொண்டவர் நடிகை அனுயா. திரைப்படங்கள் அதிகம் இல்லாமல் இருந்தபோது, சமீபத்தில் ‘சுசிலீக்ஸ்’ சர்ச்சையில் அவருடைய அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால், கடந்த பல மாதங்களாக திரையுலகைவிட்டு கொஞ்சம் ஒதுங்கியிருந்த நடிகை அனுயா, மீண்டும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில்தான் முகம் காட்டினார். ஆனால், அந்த நிகழ்ச்சியிலும் கடந்த வாரத்தில் 2-வது போட்டியாளராக வெளியேறினார்.
இந்நிலையில், ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் தான் ஏன் கலந்துகொண்டேன், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது குறித்து அவருடைய எண்ணம் குறித்து செய்தித்தாள் ஒன்றிற்கு அவர் பேட்டியளிட்தார்.
அதில் அவர் பேசும்போது, “’சிவா மனசுல சக்தி’, ‘மதுரை சம்பவம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் திருமணத்திற்கு முன்பு பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் பெண்ணாக நடித்தேன். அதனால், நான் உண்மையிலேயே அப்படிப்பட்ட பெண் தான் என மக்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால், நான் அந்த மாதிரியான பெண் இல்லை. அவர்களுக்கு உண்மையில் நான் என்ன மாதிரியான பெண் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணினேன். அதனால், பெரும்பாலான மக்கள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’-ல் கலந்துகொண்டேன்”, என கூறினார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னென்ன நிகழ்வுகள் எல்லாம் ஒளிபரப்பப்படுகிறதோ அவை எல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்தவைதான் எனவும் அனுயா தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தவறானவற்றை சொல்லித் தருகிறது எனக்கூறிய அனுயா, அவை தவறான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து பேசிய அனுயா, “நான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து 1 அல்லது 2 வாரங்களில் வெளியேறி விடுவேன் என தெரியும், ஏனென்றால் நிகழ்ச்சியின் முதல் விதியே போட்டியாளர்கள் தமிழில் பேச வேண்டும் என்பதுதான். ஆனால், தமிழ் எனக்கு வராது. நிகழ்ச்சிக்கு சென்ற உடன் தமிழ் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். அதனால், நான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது எனக்கு அழுகை வரவில்லை.”, என கூறினார்.
மேலும், ”நிகழ்ச்சியில் தான் வெளியேற வேண்டும் என வாக்களித்தவர்கள் மீது தனக்கு எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை, என்னை வெறுத்தவர்களுக்கு நான் அன்பை வழங்குவேன்”, என கூறினார்.நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை தனக்கு பிடிக்கும் என அனுயா கூறினார்.
’சுசிலீக்ஸ்’ சர்ச்சை தொடர்பான கேள்விக்கு, “இப்போதைக்கு இருக்கும் தொழில்நுட்பம் மூலம் எல்லாவற்றையும் செய்து விடலாம். எனக்கு உண்மை என்னவென தெரியும். நான் நேர்மையாக இருக்கும்வரை அவற்றைபற்றி கவலைப்பட வேண்டியதில்லை”, என கூறினார்.