Serial Actress Sharanya Turadi Garden Tour Tamil News : செய்தி வாசிப்பாளராக தன் திரைப்பயணத்தைத் தொடங்கி, பிறகு சின்னதிரையில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் ஷரண்யா துராடி. இவர், சமீபத்தில் தன்னுடைய பெயரிலேயே தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். லாக்டவுன் என்பதால், வீட்டிலிருந்தபடியே பல சமையல் காணொளிகளைப் பதிவேற்றியவர், தன் அழகிய மொட்டைமாடி தோட்டத்தையும் படம்பிடித்துப் பதிவேற்றினார்.

பொதுவாகவே செடிகள் வளர்ப்பது என்றால் ஷரண்யாவிற்கு மிகவும் பிடிக்கும். ‘அந்த செடி, இந்த செடி, அது, இது’ என்று செடிகளை சொன்னால் இவருக்கு கோவம் வந்துவிடும். அவர்களுக்கும் உயிர் இருக்கிறது. எனவே, மரியாதையாகத்தான் சொல்லவேண்டும் என்று அந்த காணொளி முழுக்கவே அவர்கள், இவர்கள் என்றுதான் செடிகளை வர்ணித்திருப்பார்.

“நீங்கள் நினைப்பதுபோல பெரிய தோட்டமெல்லாம் இங்கு இல்லை. ஆனால், என்னால் முடிந்த அளவிற்கு வீட்டைச் சுற்றி செடிகள் வைத்திருக்கிறேன். நான் வளர்க்கும் செடிகள் எல்லாமே நாட்டுச்செடிகள்தான். எந்தவிதமான ஹைபிரிட் வகைகளும் இல்லை. அதில் முதலாவதாக மங்களகரமான, பாசிட்டிவிட்டி தரும் மஞ்சள் நிற செடியில் இருந்து ஆரம்பிக்கலாம்” என்றுகூறி வரிசையாகத் தான் வளர்க்கும் எளிமையான செடி வகைகளைப் பற்றி விரிவாகக் கூறினார்.

“பொதுவாக எல்லோர் வீட்டிலும் பெயின்ட் டபபாக்களில்தான் செடிகளை வளர்ப்பார்கள். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை. சமீபத்தில் என் அப்பா அப்படி வைத்தார். நல்லாதான் இருக்கிறது. இனிமேல் நானும் இதையே பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்” என்றுகூறி அந்த பெயின்ட் டபபாவில் இருந்த பச்சை மிளகாய் செடியைக் காட்டினார். ஆனால், சீக்கிரம் அவர்கள் வாடிப்போய்விடுகிறார்களாம். “இவர்கள் வாடாமல் இருக்க ஐடியா இருக்கா மக்களே?” என்றும் கேட்டுக்கொண்டார்.

“என் வீட்டின் அடையாளமே பெரிய மூங்கில் மரம்தான். ஆனால், எனக்கு சிறியதாகத் தொட்டியில் மூங்கில் செடி வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டு, இந்த தாய்லாந்து மூங்கில் செடியை வாங்கினேன். மிகவும் அழகாக இருக்கிறது. அதேபோல தினமும் இரவு வேளையில், செரிமானத்திற்காக என் அப்பா வெற்றிலை சாப்பிடுவது வழக்கம். அதனால், இந்த வெற்றிலை செடி வளர்க்கும் எண்ணம் வந்தது. குட்டி குட்டி இலைகள்தான் இருக்கின்றன. விரைவில் சாமிக்குப் படைக்கிற அளவிற்குப் பெரிய பெரிய இலைகள் வரும் என்று நம்புகிறேன்” என்றுகூறிப் பூரித்தார்.
“அடுத்ததாகப் புதினா செடி. நிறையப் பேருக்குப் புதினா எப்படி வளர்ப்பது என்பதில் சந்தேகம் வரும். நாம் வாங்கும் புதினாவின் தண்டுகளை சிறிதளவு நட்டு வைத்தாலே போதும். ஆனால், அதற்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும். எப்போதும் ஈரப்பதமாக இருக்கவேண்டும். இதைப் பின்பற்றினாலே போதும். நிச்சயம் புதினா ஃப்ரெஷாக இருக்கும்” என்றார்.

மேலும், விதவிதமான க்ரோட்டன்ஸ், ஆறு வருடமாக வளராமல் அப்படியே இருக்கும் போகன்வில்லா, கீரைபோல் இருக்கும் பால்ஸம், மஞ்சள்காமாலை நோய்க்குச் சிறந்த மருந்தான கீழாநெல்லி, கனகாம்பரம், புதினாவுக்கும் துளசிக்கு இடையில் இருக்கும் மின்ட் துளசி, நான்கு நிற மிளகாய், துளசி, ஸ்நேக் பிளான்ட், கீரை, ஓமவல்லி, ஜாதிமல்லி, பைனாப்பிள் போலிருக்கும் குரோட்டன்ஸ், பிரண்டை, கற்றாழை, க்ரீடக்கள்ளி, லெமன் க்ராஸ், சப்பாத்திக்கள்ளி, செம்பருத்தி, ராமர் மல்லி, வெள்ளை செம்பருத்தி, எலுமிச்சை, சாமந்தி, சங்கு வடிவில் இருக்கும் வைஷாலி செம்பருத்தி என ஷரண்யாவின் மாடித்தோட்டத்தில் அத்தனை அழகான வெரைட்டி செடிகள்.

“குட்டியாக ஒரு செடி வாங்கி, அதன் காய், பூ, பழம் போன்றவற்றைப் பார்க்கும் அளவிற்கு வளர்ப்பதே தனி சந்தோஷம்தான். நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் மாற்றத்தை உணர்வீர்கள்” என்பதோடு அந்த காணொளி முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil