தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என பல்வேறு மொழிகளில் பல ஆயிரகணக்கான பாடல்களை பாடியுள்ளார். ஆறுமுறை தேசிய விருதுகளையும், ஆறு முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் விருதையும் சித்ரா பெற்றுள்ளார்.
கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் பிறந்த சித்ரா, முறைப்படி கர்னாடக சங்கீதம் பயின்றவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் இசையில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்றவர்.
மலையாள படங்கள் தான் சித்ராவின் அறிமுகம் என்றாலும், அவருக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுத்தது தமிழ் இசையுலகம் தான்.
இந்தியாவில் மிக அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்குரியவர். இந்திய சினிமாவில் இன்றளவும் வெற்றிகரமாகத் திகழ்ந்துவரும் பாடகி சித்ரா..
சித்ராவின் குரல் குயில்போல் இருப்பதாலும் அவர் குரலுக்கு வயதாவதேயில்லை என்பதாலும் இன்றுவரை தமிழ் ரசிகர்கள் 'சின்னக்குயில்' சித்ரா என்றே அவரை அன்புடன் அழைக்கிறார்கள்.
ஆனால் சித்ராவின் தனிப்பட்ட வாழ்க்கை வலிகள் நிறைந்தது.
சித்ரா, கடந்த 1988-ம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு பல ஆண்டுகள் கழித்து, 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆட்டிசம் பாதித்த தனது மகளை, சித்ரா எந்தவொரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வார். 2011-ம் ஆண்டு துபாயில் இசை நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தபோது நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா உயிரிழந்தார்.
இப்போது வயது மூப்பால் ஓய்வு பெற்றுவிட்ட இசைக் கலைஞர்கள் பாடகர்களின் மருத்துவம் மற்றும் இதர முக்கிய செலவுகளுக்கு நிதி திரட்டுவதற்காக கேரளத்தைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் பாடல்களும் பாடி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“