கர்நாடக சங்கீதத்தை பாமர மக்களிடம் கொண்டு செல்வதைப்பற்றி பாடகர்களான ரஞ்சனி மற்றும் காயத்ரி சமீபத்தில் ‘வாவ் தமிழா’ என்கின்ற யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.
கர்நாடக இசையை பாமர மக்களிடையே கொண்டு செல்வது வேண்டும் என்று டி.எம்.கிருஷ்ணாவினுடைய கருத்திற்கு ரஞ்சனி மற்றும் காயத்ரி கூறியதாவது, “அவர் கூறும் வார்த்தைக்கு பின் இருக்கும் நோக்கம் சரியானது. ஆனால் கர்நாடக இசையை நடைமுறைக்கு கொண்டுவருவது சுலபமானது அல்ல.
சங்கீதத்தை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதற்கு முன்பு ஒரு வில்லன் உருவாக்கி தெரிவிக்கக்கூடாது.
ஒரு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவேண்டும் என்றால், அதற்கு வில்லன் தேவை. அதுபோல, ஊடகத்தில் கிளர்ச்சி கிளப்ப வேண்டும் என்பதற்காக இதுபோன்ற கருத்துக்களை டி.எம்.கிருஷ்ணன் பகிர்கிறார்”, என்கின்றனர்.
மேலும், “சினிமா மூலமாக பல ஆண்டு காலமாக கர்நாடக சங்கீதம் மக்களின் முன் அரங்கேறி இருக்கிறது. இது போதவில்லையா”, என்று கேள்வி எழுப்பினர்.
“அனைவருக்கும் தங்களது கலைப்படைப்பு மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்று மட்டுமே ஆசை இருக்கிறது. நானாக இருந்தாலும் சரி, எங்களுக்கு முன்பு இருந்த இசை கலைஞர்களாக இருந்தாலும் சரி, அனைத்து விதமான மக்களும் தங்களது கச்சேரிக்கு வந்து அரங்கத்தை நிரப்ப வேண்டும் என்றே விரும்புகிறோம்.
டி.எம்.கிருஷ்ணா வைக்கும் குற்றசாட்டு போல, இங்கு கர்நாடக இசையை ரசிப்பதில் தடை விதிப்பதில்லை”, என்றனர்.
“இங்கு யாருக்கும் தடையில்லை; இதுபோன்ற உயர்ந்த இசையை தெரிந்துகொள்ள மக்களுக்கு நாங்கள் தடை விதிப்பதில்லை. அதை நன்றாக புரிந்துகொள்பவர்கள் மத்தியில் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
யாரும் ஒரு மாணவரின் சமூகத்தையோ சாதியையோ பார்த்து கர்நாடக இசையை கற்பிப்பதில்லை. டி.எம்.கிருஷ்ணாவின் கலைக்குழுவில் மாணவர்கள் அல்லது டீம் ஏன் மாறவில்லை”, என்று கேள்வி எழுப்பினர்.
சமூக ஆர்வலருக்கும் கலைஞருக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு கலைப்படைப்பின் மூலம் தனது நல்ல நோக்கத்தை வெளிப்படுத்தினால் 1000 பேர் உடன் நிற்பார்கள். அதே, ஒரு பக்கம் நிற்பவர்களை வில்லனாக கூறினார், மக்கள் தயங்குவார்கள். அப்படி செய்வது நேர்மையான வழியும் கிடையாது”, என்றனர்.
மேலும், கர்நாடக இசையை பல்வேறு தரப்பு மக்கள் ரசித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறோம். மற்றபடி இந்த டி.எம்.கிருஷ்ணாவினுடைய கருத்து வரவேற்கத்தக்கது”, என்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil