தூக்கம் என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பராமரிக்க இன்றியமையாத உடலியல் செயல்முறையாகும்.
மனிதர்கள் உறங்காமல் இருப்பதை விட உணவு இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியும் என்று அடிக்கடி கூறப்படுகிறது. சரியான கால அளவு ஓவ்வொரு நபருக்கும் மாறுபடும் போது, தூக்கமின்மை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
உணவு மற்றும் தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து நிபுணர்கள் கூறியது இங்கே..
உணவியல் நிபுணரும் மருத்துவ ஊட்டச்சத்து நிபுணருமான உஷாகிரண் சிசோடியா, ஆம், மனிதர்கள் உறக்கமின்றி வாழுவதை விட உணவு இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியும் என்பது உண்மைதான் என்றார்.
பல தேசிய மற்றும் சர்வதேச ஆய்வுகள் பட்டினியை விட தூக்கமின்மை மிகவும் முக்கியமான சுகாதார சவால் என்பதை நிரூபித்துள்ளன.
முக்கியமாக, பட்டினி கிடக்கும் போது, உடல் அதன் சேமித்த குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது, கொழுப்பு அமிலங்களை உடைக்கிறது, இறுதியில், தசை புரதம் நமது வழக்கமான செயல்பாடுகளுக்குத் தேவையான ஆற்றலை உருவாக்குகிறது.
சுருக்கமாக சொல்வதானால், ஒருவருக்கு ஆற்றல் குறைவாக இருக்கலாம், ஆனால் போதுமான நீரேற்றம் இருந்தால், உணவு இல்லாமல் வாரக்கணக்கில் உயிர்வாழ முடியும், என்று சிசோடியா கூறினார்.
மாறாக, தூக்கத்திற்கு மாற்று இல்லை என்று சிசோடியா வலியுறுத்தினார். தூக்கமின்மை அடிப்படை உடல் செயல்பாடுகளையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கடுமையாக பாதிக்கிறது.
ஒருவர் நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால், அறிவாற்றல் சீர்குலைவு, மனநிலை குறைபாடு, பிரமை மற்றும் மரணம் கூட ஏற்படலாம். எனவே, நல்ல தூக்க சுகாதாரம் நமது நல்வாழ்வுக்கு மிக முக்கியமானது, என்று சிசோடியா கூறினார்.
தூக்கத்தைப் பற்றி மேலும் புரிந்து கொள்வோம்
தூக்கம் என்பது ஓய்வு மட்டுமல்ல; உடலைச் சரிசெய்யவும், மீளுருவாக்கம் செய்யவும், தன்னைத்தானே மீட்டெடுக்கவும் அனுமதிக்கும் செயலில் உள்ள நிலை இது என்று டாக்டர் ஜே ஹரிகிஷன் எடுத்துரைத்தார்.
தூக்கத்தின் போது, திசு வளர்ச்சி மற்றும் பழுது, ஹார்மோன் கட்டுப்பாடு, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல் மற்றும் நினைவாற்றல் மற்றும் கற்றலை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு உயிரியல் செயல்முறைகள் நிகழ்கின்றன. உடல் சிறப்பாக செயல்பட இந்த செயல்பாடுகள் அவசியம்.
மனிதர்கள் உறங்காமல் இருப்பதை விட உணவு இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியும் என்ற கூற்று சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், அடிப்படைக் கருத்தில் உண்மை இருக்கிறது என்று டாக்டர் ஹரிகிஷன் சுட்டிக்காட்டினார்.
தூக்கமின்மையுடன் ஒப்பிடும்போது மனித உடல் உணவு உட்கொள்ளாமல் நீண்ட காலம் தாங்கும் என்று கூறும் டாக்டர் ஹரிகிஷன் சாத்தியமான காரணங்களை பட்டியலிட்டார்:
ஆற்றல் சேமிப்பு: உடலுக்கு உணவு கிடைக்காமல் போனால், அது தன்னைத் தக்கவைத்துக் கொள்ள கிளைக்கோஜன் மற்றும் கொழுப்பு போன்ற சேமிக்கப்பட்ட ஆற்றல் இருப்புக்களை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், நீடித்த தூக்கமின்மையை ஆற்றல் இருப்புகளால் மட்டும் ஈடுசெய்ய முடியாது.
உயிர்ச்சக்தி மறுசீரமைப்பு: தூக்கம் உடலை மீட்டெடுக்கவும், முக்கிய வளங்களை நிரப்பவும் அனுமதிக்கிறது. போதுமான தூக்கம் இல்லாமல், திறமையாக செயல்படுவதற்கும், ஹோமியோஸ்டாசிஸை பராமரிப்பதற்கும் உடலின் திறன் பாதிக்கப்படுகிறது.
மனநல குறைபாடு: தூக்கமின்மை, கவனம், செறிவு, நினைவாற்றல் மற்றும் முடிவெடுத்தல் உள்ளிட்ட அறிவாற்றல் செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கிறது. நீண்ட காலம் தூக்கமின்மை அறிவாற்றல் திறன்களைக் குறைக்கலாம், அவை விபத்துக்கள், பிழைகள் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனைக் குறைக்கும்.
உளவியல் நல்வாழ்வு: உணர்ச்சிகள் மற்றும் மன ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துவதில் தூக்கம் முக்கியமானது. நாள்பட்ட தூக்கமின்மை மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநல கோளாறுகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், உகந்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஹரிகிஷன் கூறினார்.
போதுமான தூக்கம்: பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு 7-9 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது, அதே சமயம் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் அதிகமாகத் தேவை. உங்களின் தனிப்பட்ட உறக்கத் தேவைகளைத் தீர்மானித்து, அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதை நோக்கமாகக் கொள்ளுங்கள்.
தரமான தூக்கம்: இது நேரம் மட்டுமல்ல, தூக்கத்தின் தரமும் கூட. தூக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்கவும், வழக்கமான தூக்க நேரத்தை பராமரிக்கவும். உங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்க தளர்வு நுட்பங்களைப் (relaxation techniques) பயிற்சி செய்யவும்.
தூக்கமின்மையைத் தவிர்க்கவும்: தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உங்களின் தினசரி வழக்கத்தில் அதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல், ஒழுங்கற்ற தூக்க நேரம் மற்றும் உறங்குவதற்கு முன் மின்னணு சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துதல் போன்ற தூக்கத்தில் குறுக்கிடும் பழக்கங்களைத் தவிர்க்கவும்.
நீங்கள் தொடர்ந்து தூங்குவதில் சிரமம், அதிக பகல்நேர தூக்கம் அல்லது தூக்கம் தொடர்பான பிற நிலைகளை அனுபவித்தால், வழிகாட்டுதலுக்கு ஒரு சுகாதார நிபுணரை அணுகவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.