Advertisment

இப்போது சுயமாக சம்பாதிக்கிறேன்; நான் காதலிக்கலாமா?

காதலின் எல்லையாக கருதப்படும் 'செக்ஸ்' என்பது அனைவரது வாழ்க்கையிலும் முக்கியமாக கிடைக்கப்பெறும் ஒரு 'கவுரவம்'

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இப்போது சுயமாக சம்பாதிக்கிறேன்; நான் காதலிக்கலாமா?

ANBARASAN GNANAMANI

Advertisment

இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல்.

அந்தக் காலத்து காதல், இந்தக் காலத்துக் காதல் என பிரித்துப் பார்க்க நான் விரும்பவில்லை. எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதா? என்பதே முக்கியம். இருந்தாலும், 2018-ல் இந்த கருத்துக்களை உணர்வுடன் இங்கே பகிர்வதால், இந்தக் காலத்துக் காதலைப் பற்றியே பேச விரும்புகிறேன்.

தினம் தினம் நாம் பல பெண்களை நம் வாழ்வில் கடந்து செல்கிறோம். அவர்களில் அழகாக இருப்போர், அனைவரும் நம்மை திரும்பிப் பார்க்க வைப்பார்கள். திரும்பி இரண்டு நொடி பார்ப்பதோடு நமது பணி முடிந்துவிடும். முடிந்து விட வேண்டும். சிலர் மட்டும் அன்றைய சில மணி நேரங்களுக்கு அவர்களைப் பற்றி நம்மை சிந்திக்க வைப்பர். அந்தளவிற்கு நம்மை கவர்ந்திருப்பர்.

இங்கே அழகைப் பற்றி நான் ஏன் பேசுகிறேன் என்றால், பெரும்பாலான இன்றைய காதல் அழகை நோக்கித் தான் செல்கிறது. 'நான் ஏன் அந்தப் பெண்ணை காதலிக்கிறேன்?' என விட்டத்தைப் பார்த்து கேள்விக் கேட்டால், பல ஆண்களின் மனசாட்சி சொல்லும் பதில், ‘அவள் அழகாக இருக்கிறாள்’ என்பதுதான். ஆனால், அதனை ஒப்புக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. உங்களில் எத்தனை பேர் உங்கள் காதலியின் அழகைப் பார்த்து விரும்பியிருக்கிறீர்கள்? ஒப்புக் கொள்வீர்களா? முடியாது. ஏனெனில், அதை ஒப்புக் கொண்டால், அங்கே காதல் பிரிந்துவிடும்.

அழகு என்பது என்ன? அழகின் எல்லை என்பது என்ன? இப்போ ஒரு பூ அழகாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோமே.. சிலர் அந்தப் பூவை ரசித்துப் பார்த்துவிட்டுச் செல்வார்கள். சிலர், பறித்துச் சூடிக் கொள்வார்கள். பலர், அதைப் பறித்து நுகர்ந்துவிட்டு தூக்கி எறிந்து விடுவார்கள். இதில் மூன்றாவது ரகம் தான் இன்றைய நவநாகரீக இளசுகளின் பெரும்பாலான காதலின் நிலைமை. அவர்களுக்கு அழகை அனுபவிக்க வேண்டும். அதனை அனுபவித்துவிட்டால், இயற்கையாகவே அதன் அழகு சலித்துவிடும். இதைத்தான் காதலென்ற பெயரில் பலர் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே யாரையும் குறை சொல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில், நானும் அந்த வயதைக் கடந்து வந்தவனே. நான் இங்கு சொல்ல விரும்புவது, ‘காதல் என்றால் என்ன?’ என்று என் இளைஞர்களுக்கு புரிய வேண்டும். அவ்வளவுதான்.

காதல் என்றால் என்ன?

இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மை பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத்தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல… இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான். ஆனால், ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல…ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

இந்த வேறுபாட்டைத் தான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கடைசி வரை ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என நினைத்துப் பாருங்கள். இந்த இடத்தில் அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அந்த காதல் நிலைக்குமா? அவர்கள் உங்களுடன் கடைசிவரை கூட வருவார்களா?

எப்போது காதல் வருவது நல்லது?

இது ஒரு முக்கியமான கேள்வி. “நான் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை. 20 வயதிலேயே வேலைக்கு சேர்ந்துவிட்டேன். இப்போது நான் சுயமாக சம்பாதிக்கிறேன். நான் தாராளமாக காதலிக்கலாம்” என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு ஆண் 25 வயதில் காதல் வயப்பட்டான் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில், சம்பாதித்தால் மட்டும் போதாது. குடும்பம் என்றால் என்ன? அதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது? திருமணம் செய்தால் மனைவியின் குடும்பம் மற்றும் தமது பெற்றோரை எப்படி அனுசரித்து செல்வது என்பது போன்ற எண்ணற்ற உறவு சிக்கல்கள் குறித்து அந்த காலக்கட்டத்தில் தான் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

எனவே, அப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துணை… அதாவது காதல், நிச்சயம் உங்கள் வாழ்வில் உண்மையாக சங்கமிக்கும். உங்கள் உடலுக்கும், மனதுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும்.

குறிப்பாக, காதலின் எல்லையாக கருதப்படும் 'செக்ஸ்' என்பது அனைவரது வாழ்க்கையிலும் முக்கியமாக கிடைக்கப்பெறும் ஒரு 'கவுரவம்'. இந்த கவுரவத்தை உரிய நேரத்தில் மட்டுமே நாம் பெற வேண்டும்.

இதைவிடுத்து, காதலியை பின்னால் உட்காரவைத்து துப்பட்டாவை தலையில் சுற்றி மறைத்து அழைத்துச் செல்வது, ஓடாத படத்திற்கு கார்னர் சீட்டில் சென்று காதலியுடன் உட்காருவது, அடிக்கிற வெயிலில் பீச்சில் சென்று மறைந்து கொள்வது போன்றவற்றிற்கு பதில், தைரியமாக விபச்சார விடுதிக்கு சென்றுவிடலாம். இதனால், நமது நேரம், பணம், உழைப்பு போன்ற அனைத்தும் மிச்சமாகும் பாருங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment