முண்டாசு கவிஞனின் 3 காதல்கள்!

காதலுக்கு மட்டும் தான் பாரதியா?

பாரதி பிறந்த நாள்
பாரதி பிறந்த நாள்

கவி காதலர்களின் ஒரே ஆசைக்காதலான முண்டாசு கவிஞனின் 137 வது பிறந்த நாள் இன்று. இவரை பெண்களின் ரகசிய காதலன் என்று கூட சொல்லலாம். கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்த பாரதிக்கு காதல் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

காதலுக்கு மட்டும் தான் பாரதியா? சுதந்திரம், பாரதம், தமிழ், தவம், ஜாதி என பலவற்றிற்குமான அடையாளமாகவும் பாரதியே இருக்கிறார். ஆனால் இன்று நாம் எடுத்துக் கொண்டது அவரின் 3 காதல்களை தான். கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

கவியிட்டு தமிழை வளர்த்தாய்
தேடிச்சோறு நிதம் தின்ன மறுத்தாயோ…
காலனையும் புல்லென மதித்தாயே
செல்லமாவை எண்ணி காலங்கழித்தாயே

பிறமொழி இலக்கியம், உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்த கவிஞர் தனது முதல் காதலைசொல்லிய இடம் மிக மிக அழகு.

“மூன்று காதல்” என்ற தலைப்பின் கீழே பாரதி பாடியிருக்கும் பாடலில் முதலாவது ‘சரஸ்வதி காதல்’; இரண்டாவது ‘லக்ஷ்மி காதல்’; மூன்றாவது ‘காளி காதல்’. இந்த மூன்று விதமான காதல் பாட்டுகளும் பாரதியாரின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிந்தது என்பதைக் காட்டுகின்றன.

பிள்ளைப் பிராயத்திலே — அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்
பள்ளிப் படிப்பினிலே — மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல் — அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும் — கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேனம்மா!

ஆடிவரு கையிலே — அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்; கையில்
ஏடு தரித்திருப்பாள், — அதில்
இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை
நாடி யருகணைந்தால், — பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்; ?இன்று
கூடி மகிழ்வ? மென்றால், — விழிக்
கோணத்தி லேநகை காட்டிச்செல் வாளம்மா!

1. ஆற்றங் கரைதனிலே — தனி்
யானதோர் மண்டப மீதினிலே, தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன், — அங்குக்
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்; அதை
ஏற்று மனமகிழ்ந்தே ?அடி
என்னோ டிணங்கி மணம்புரிவாய்? என்று
போற்றிய போதினிலே, — இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட் டாளம்மா! 3

சித்தந் தளர்ந்ததுண்டோ? — கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல் — பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால் — பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும் — வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேனம்மா! 4

2. லக்ஷ்மி காதல்

இந்த நிலையினிலே — அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள் — அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன்
சிந்தை திறைகொடுத்தேன் — அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்
அந்தத் தின முதலா — நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேனம்மா! 5

புன்னகை செய்திடுவாள், — அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்; சறறென்
முன்னின்று பார்த்திடுவாள், — அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்; பின்னர்
என்ன பிழைகள் கண்டோ — அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள் அங்கு
சின்னமும் பின்னமுமா — மனஞ்
சிந்தியுளமிக நொந்திடு வேனம்மா! 6

காட்டு வழிகளிலே, — மலைக்
காட்சியிலே, புனல் வீழ்ச்சி யிலே
நாட்டுப் புறங்களிலே, நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில
வேட்டுவர் சார்பினிலே, — சில
வீரரிடத்திலும், வேந்தரிடத்திலும்,
மீட்டு மவள் வருவாள் — கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போமம்மா!

3. காளி காதல்

பின்னொர் இராவினிலே — கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே — களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்,
அன்னை வடிவமடா! — இவள்
ஆதி பராசக்தி தேவியடா! இவள்
இன்னருள் வேண்டுமடா! — பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 8

செல்வங்கள் பொங்கிவரும்; — நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே — இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளை — இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை — நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா

– மகாகவி பாரதி.

பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை அவ்வப்போது செவிக்கு இன்பம் தந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இப்படியொரு கவிஞனை இந்த நூற்றாண்டு இழந்து விட்டதே என்ற கவலை எல்லோருக்குமே இருக்கிறது.

ஆனால் அவர் விடுச்சென்றிருக்கும் விலைமதிப்பில்லாத சொத்துகள் நம்மை மேலும் மேலும் செம்மைப்படுத்தும், மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தொடர்ந்து காதலிப்போம் பாரதியை..

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Subramanya bharathi 137th birthday special

Next Story
பிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா?அம்பானி வீட்டு திருமணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express