Sundari Serial Actress Gabriells Sellus Lifestyle : டிக்டாக் பிரபலம், மைம் கலைஞர், நடிகை, ஸ்கிரிப்ட் ரைட்டர் என பல முகங்களை கொண்ட சுந்தரி சீரியல் நடிகை கேப்ரிலா செலஸ் நிறத்தை உடைத்து தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.
கேப்ரிலா செலஸ் திருச்சி மாவட்டம் அல்லித்துறையை சேர்ந்தவர். இவருடைய அப்பா அம்மா இருவருமே பள்ளி தலைமை ஆசிரியர்கள் . கேபிக்கு சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே விருப்பம். சீரியல் பார்க்கும்போது அந்த கதாபாத்திரமாகவே தன்னை நினைத்துக்கொள்வாராம். அதேபோல் சிவாஜி சாவித்ரி என பழம்பெரும் நடிகர்களின் படங்களை அதிகம் விரும்பி பார்க்கும் கேப்ரிலாவுக்கு அதுபோன்று நடிக்க வேண்டும் என்பது ஆசை. கேபிக்கு நடிகை மனோரமா மற்றும் காமெடி நடிகர் வடிவேல் தான் இன்ஸ்பிரேஷன். தனது திரைத்துறை மீதான விருப்பத்தை பெற்றோரிடம் கூறினால் ஒப்புக்கொள்வார்களா என பயந்து வீட்டில் கூறாமல் சென்னை வந்துள்ளார். பிறகு அவரை தேடி சென்னை வந்த பெற்றோர் உனது கனவுக்கு துணை நிற்பதாக கூறியதும் கேபிக்கு ஒரே சந்தோஷம்.

பிறகு சென்னையிலேயே விடுதியில் தங்கி வாய்ப்பு தேட துவங்கி உள்ளார். அதற்காக அவர் முதலில் கையில் எடுத்தது டிக்டாக் தான். அதில் அவர் கடிதம் படிக்கும் வீடியோக்கள் அதிக அளவு பிரபலமாகியது. நம்பிக்கையுடன் வாய்ப்பு தேடினார். ஆனால் பல ஆடிஷனில் நன்றாக நடித்திருந்தாலும் நிறத்திற்காக ரிஜக்ட் ஆனார் கேபி. அதை மைனஸ் ஆக பார்க்காமல் தனக்கு என்று ஒரு இடம் பிடிக்க வேண்டும் வாழ்க்கையில் என தனது கனவை நோக்கி தொடர்ந்து போராடி வந்துள்ளார்.ஒவ்வொறு முறை ரிஜக்ட் ஆகும்போதும் கண்ணாடி முன் நின்று தனக்குதானே தைரியம் சொல்லிக்கொள்வாராம்.அப்போது தான் அவருக்கு விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு வந்ததுள்ளது. தொடர்ந்து பல குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பல குறும் படங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. நம்பிக்கையுடன் தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு கபாலி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, காஞ்சனா 3 போன்ற படங்களில் சிறிய ரோல்கள் கிடைத்துள்ளது.அதிலும் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

பிறகு படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மீண்டும் குறும்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன் பிறகு நயன்தாரா கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஐரா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தில் கேப்ரிலா நடித்திருந்தது நல்ல விமர்சனங்களை பெற்றது. பலரது பாராட்டை பெற்றவருக்கு மீண்டும் ஒரு நம்பிக்கை வந்ததால் அடுத்தடுத்த வாய்ப்பை தேடி கொண்டிருந்தார். ஐரா படத்திற்கு பின்னர் இவர் ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பிறகு தனது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் திரைத்துறையை சேர்ந்தவர்தான். சில மாதங்கள் சினிமா வாய்ப்பு ஏதும் இல்லாததால் யூடியூப்பில் சமூக விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிடுவது, ஆக்ட்டிங் கிளாஸ், குறும்படம், மைம் கலைஞர் என ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருந்துள்ளார். பிறகு திருச்சிக்கே சென்று கடுதாசி எழுதி டிராமா பணியை தொடங்கலாம் என்று அதில் இறங்கியுள்ளார்.
அப்போது தான் அவருக்கு சன்டிவியின் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பற்றியும், அவள் தனது கனவை அடைய எப்படி போராடுகிறாள் என்பதை மையப்படுத்தியும் சீரியலின் கதை அமைந்துள்ளது.இந்த சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே தாய்குலங்களின் மனங்களை கொள்ளையடித்தது. இதனால் இந்த தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஒரு கலைஞன் தன்னை அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்றுதான் உழைத்துக்கொண்டிருப்பான். அப்படி 8 வருடங்கள் ஓடிய தனக்கு கிடைத்த வெற்றி தான் சுந்தரி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு என கேப்ரிலா நெகிழ்ச்சிடன் பகிர்ந்துள்ளார்.

கறுப்பு நிறம் மத்தவங்களுக்கு வேணும்னா வெறுப்பா இருக்கலாம்… ஆனா, எப்போதுமே நிறம் எனக்கொரு தடையில்லை. ஏனென்றால், என் அடையாளமே கறுப்புதான்” என நம்பிக்கை ததும்ப பேசுகிறார் மாடல் கேப்ரிலா செலஸ். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கேபிர்லா இன்ஸ்டாவில் மார்டன் உடையில் கலக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஆடைக்கும் நிறத்திற்கும் குணத்திற்கு சம்பந்தம் இல்லை மாற கூடாதது குணம் மட்டுமே என தெளிவாக இருக்கும் கேப்ரிலா திரைத்துறையில் இன்னும் சாதிக்க வேண்டும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“