தென்றல் துளசியாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தற்போது தாலாட்டு சீரியலில் இசையாக அசத்தி வருகிறார். ஸ்ருதிராஜ் கேரளாவை சேர்ந்தவர். 7ஆம் வகுப்பு படிக்கும்போது அக்ராஜன் என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் இவரது முதல் படம் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் தான். அந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். தொடர்ந்து அப்பாஸ் நடித்த இனி எல்லாம் சுகமே படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் நடிகர் மம்முட்டி, திலீப் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழில் காதல் டாட்காம், ஜெர்ரி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 20 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சின்னத்திரையில் முதன் முதலில் ஸ்ருதி அறிமுகமானது சன்டிவியில்தான். தென்றல் சீரியலில் துளசி என்ற கேரக்டரில் நடித்தார். தமிழிலும் தெலுங்கிலும் ஆறு வருடங்கள் ஒளிபரப்பான அந்த சீரியல் மிகப் பெரிய ஹிட் ஆனது. அறிமுகமான முதல் சீரியலில் தனது எதார்த்தமான நடிப்பால் இல்லத்தரசிகளை கவர்ந்தார். இந்த தொடரில் நடித்ததற்காக 2012ஆம் ஆண்டு சன் குடும்பம் விருதுகள் வழங்கிய சிறந்த ஜோடிகள் விருதும் மற்றும் 2014ஆம் ஆண்டு வழங்கிய சிறந்த நடிகை, தேவதைகள் விருது மற்றும் சிறந்த ஜோடி போன்ற விருதுகளை வென்றார்.
அதன்பிறகு விஜய் டிவியின் ஆபிஸ் சீரியலில் கார்த்தியுடன் இணைந்து ராஜீ என்ற கேரக்டரில் நடித்தார். இந்த தொடர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகமும் நல்ல ரீச் ஆனது. தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் போன்ற சீரியல்களில் நடித்தார். பின்னர் சன்டிவியின் அழகு சீரியலில் சுதா கேரக்டர் அடுத்த திருப்புமுனையாக அமைந்தது. இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சன்டிவியில் தாலாட்டு சீரியலில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியல் ஆரம்பத்திலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
சின்னத்திரையில் தென்றல் மற்றும் ஆபிஸ் சீரியல் ஸ்ருதிக்கு ஏகப்பட்ட விருதுகளை வாங்கி கொடுத்தது. சீரியல்களில் ஹோம்லியா நடித்தாலும் அவ்வபோது மார்டன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஸ்ருதி சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும்போது நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால் இவர் சீரியலில் நடிப்பதையே விரும்புகிறார். சினிமாவை விட சின்னத்திரையில்தான் நல்ல ரீச் கிடைக்கும் என்கிறார் ஸ்ருதி ராஜ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil