உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்கிறீர்களா? நல்லதுதான், ஏன்?

மூன்றாவது நபரின் இடத்திலிருந்து உங்களுக்காக நீங்கள் பேசிக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கும் என ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

நீங்கள் உங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்கிறீர்களா? மற்றவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்கள் என கவலை கொள்ள வேண்டாம். மூன்றாவது நபரின் இடத்திலிருந்து உங்களுக்காக நீங்கள் பேசிக்கொண்டால், முக்கியமாக மன அழுத்தம் மிக்க, சோர்வான காலங்களில் அவ்வாறு பேசிக்கொள்வது, மன அழுத்தத்தைக் குறைக்கும் என ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் இது தெரியவந்தது. “அவ்வாறு நாமே மூன்றாவது நபரின் இடத்திலிருந்து நமக்காக பேசும்போது, மற்றவர்கள் குறித்து நாம் எப்படி யோசிப்போமோ, அதேபோலத்தான் நம்மை பற்றியும் யோசிப்போம். இதற்கான சாட்சியங்கள் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.”, என ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேசன் மோசர் தெரிவித்தார். ஏற்கனவே இதுபோன்ற ஆராய்ச்சியில் நமக்கு நாமே பேசிக்கொள்வது மன அழுத்தமான காலங்களில் உணர்ச்சிவயப்பட்டு, விபரீத முடிவுகளை எடுக்காமல் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுகிறது என தெரியவந்தது.

மன அழுத்தமான காலங்களில் நமக்கு நாமே பேசிக்கொள்வது அந்த பிரச்சனையால் நாம் பாதிக்கப்படாத வகையில் பிரச்சனையை விட்டு வெகு தூரம் செல்ல துணைபுரிகிறது.

இந்த ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் இரு பிரிவுகளாக மேற்கொண்டனர். முதலாவது சிலருக்கு கூட்டாக, நம்மை மன அழுத்தத்திற்கும், நம் மனதை தொந்தரவு செய்யும் புகைப்படங்களும் காண்பிக்கப்பட்டன. உதாரணமாக, ஒருவர் துப்பாக்கியை மற்றொருவரது தலையை நோக்கி பிடித்திருப்பது போன்ற புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. அப்போது அதனைப்பார்த்தவர்கள் மற்றவர்களுக்குள் பேசிக்கொண்டனர். இரண்டாவது, தனியாக அவர்களிடம் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. இதில், தனியாக அந்த புகைப்படங்களை பார்த்து தமக்குத் தாமே பேசிக்கொள்ளும்போது, அவர்களுக்கு உணர்ச்சி வயப்படும் நிலைமை அதிகமாக குறைவதை அறிய முடிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

×Close
×Close