பொருளாதாரத்தில் வளரும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் இருந்து, பலரும் வேலை தேடி அரபு மற்றும் வளைகுடா நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் ஒருசிலர் தங்களது உறவினர்கள் மூலம் வீசா வரவைத்து அதன் மூலம் வெளிநாடு சென்று வேலை செய்து வரும் நிலையில், பெரும்பாலானோர் ஏஜெண்ட்கள் மூலமாக பணம் கொடுதது வீசா வாங்கி செல்கின்றனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏஜெண்ட்கள் மூலம் வெளிநாடு செல்லும் இளஞைர்கள் பெண்கள், என அனைவரும் அங்கு சென்றபின் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். பணத்திற்கு ஆசைப்பட்டு போலி ஏஜெண்டகள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி பல பெண்களும் இளைஞர்களும், வெளிநாடு சென்று பல இன்னல்களை சந்தித்துள்ளனர்.
இது குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் மற்றும் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி மறைக்கயர் என்பவரை தொடர்புகொண்டு பேசினோம்.
வெளிநாடு செல்லும் பெண்கள் போலி ஏஜெண்ட்டுகளால் ஏமாற்றப்படுவது குறித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து...
போலி ஏஜெண்ட்டுகளை நம்பி, பலர் வெளிநாடு சென்று பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆர்ப்பட்டம் பேரணி நடத்தினோம். திருவண்ணாமலை மாவட்ட எம்.பி. சி.என்.அண்ணாதுரை இதில் கலந்துகொண்டார். எங்களால் முடிந்த அளவுக்கு மக்களளுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதை செய்தோம்.
போலி ஏஜெண்ட்களால் பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்?
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு வரும் மக்கள் குறிப்பாக பெண்களிடம் ஏஜெண்ட்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கிறார். வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களிடம், வீட்டு வேலை சுலபம் என்பது போன்றும், 8 மணி நேரத்தில் வேலை முடிந்துவிடும் என்றும், நிறைய சம்பளம் கிடைக்கும் என்றும சொல்லி அனுப்பிவைக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டில் நிலைமை அப்படி இல்லை. காலை 4.30 மணிக்கு எழுந்து இரவு 12 மணிக்கு தான் தூங்க வேண்டும். 4 மணி நேரம் தான் தூங்கவே முடியும்.
குறிப்பாக வளைகுடா மற்றும அரபு நாடுகளுக்கு பெண்கள் வீட்டு வேலைக்கு தேவை என்றால், அநத அரேபியர்கள் ஏஜெண்ட்டுகளுக்கு குறைந்தபட்சம் 400 முதல் 1200 தினார் (குவைத் பணம்) வரை கொடுக்கிறார்கள். அதேபோல் அந்த அரேபியரின் வீட்டில், இருக்கும் டிரைவரிடம் சொல்லி, தங்கள் வீட்டுக்கான பணிப்பெண் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிடுகிறார்கள். பணிப்பெண் வேலைக்கு வருபவரிடம் ப்ரீ விசா என்று சொல்லிவிட்டு அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.
அந்த பெண் வெளிநாட்டுக்கு வந்து பிரச்னையை சந்திக்கும்போது. அந்த டிரைவர் உதவிக்கு வரமாட்டார். அப்போது இந்த பெண், தான் ஊருக்கு போக வேண்டும் என்று சொன்னாலும், உனக்காக நான் செலவு செய்த பணத்தை கொடுத்துவிட்டு நீ ஊருக்கு போ இல்லை என்றால் வேலை பார்த்துவிட்டு போ என்று சொல்லிவிடுவார்கள். இதனை ஏற்றுக்கொண்டு அந்த பெண் வேலை செய்தாலும், அவருக்கு அங்கு துன்புறுத்தல்கள் அதிகமாக இருக்கும்.
எந்த பணமும் இல்லாமல், அந்த பெண்ணை ப்ரீயாக வேலைக்கு எடுத்திருந்தால், அவருக்கு விருப்பம் இல்லை என்றால், டிக்கெட் போட்டு ஊருக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் அந்த பெண்ணை வைத்து இங்கு ஏஜெண்ட்கள் பணம் வாங்கிவிட்டதால், தனக்கு பிடிக்காத நிலையிலும் அந்த பெண் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இது குறித்து இந்திய தூதரகத்தில் புகார் அளிக்க முடியுமா?
இதுபோன்று ஏமாற்றப்படும் பெண்கள் மற்றும் இளைஞர்கள், தூரதரகத்தை அனுக வேண்டும். ஆனால் இங்கு நம்பர் ஒன்றாக இருப்பது பிலிப்பைன்ஸ் தூதரகம் தான். அவர்கள் நாட்டு தொழிலாளிக்கு ஒரு பிரச்னை என்றால் உடனடியாக அங்கு வந்து நின்றுவிடுவார்கள். ஆனால் இந்திய தூதரகம் இது குறித்து கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னைகளை யாரும் சந்திக்க கூடாது என்பதால் தான், இதுபோன்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம்.
வெளிநாடு செல்லும் மக்கள் குறிப்பாக பெண்கள் எதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்?
வெளிநாட்டுக்கு செல்பவர்கள், அங்கு என்ன வேலை. எத்தனை மணி நேரம் வேலை இருக்கும், பணிப்பெண் வேலைக்கு சென்றால், குழந்தைகளை கவனிக்க வேண்டுமா? சமையல் செய்ய வேண்டுமா? பாத்திரம் கழுவ வேண்டுமா? என்ன மாதிரியான வேலை, என்ன சம்பளம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இலங்கை நாட்டை பொறுத்தவரை பணிப்பெண் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் 30 வயதை கடந்திருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது என்று நினைக்கிறேன்.
அதேபோல் பணிப்பெண் வேலைக்கு செல்பவர்களுக்கு ஓரளவுக்கு அரபி மொழியை கற்றுக்கொடுக்கிறார்கள். அரபி வீட்டில் என்னென்ன வேலைகள் இருக்கும் என்பதை இங்கேயே சொல்லிவிடுகிறார்கள். இந்த புரிதலை ஏற்படுத்தி 3 மாதங்கள் பயிற்சி கொடுத்து, அதன்பிறகு தான் வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். பணிப்பெண் வேலைக்கு செல்பவர்களுக்கு குழந்தை (3-4 வயது) இருந்தால், அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி இல்லை.
ஒரு பெண் வேலைக்கு சென்று பிரச்னையை சந்தித்தால் அந்த ஏஜெண்ட் தான் பொறுப்பு அரசாங்கம் அவரிடம் தான் கேட்கும். அப்படி அந்த பெண்ணை மீட்டு தரவில்லை என்றால் உன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஏஜெணட் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த மாதிரியான ஒரு சட்டத்தை நமது அரசு கொண்டு வந்தால், வெளிநாடு செல்லும் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
பணிப்பெண் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை நாட்கள் எப்படி?
பொதுவாக வெளிநாட்டில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும்போது, வருடத்திற்கு ஒரு மாதம் விடுமுறை, அந்த விடுமுறை மாதத்திற்கான சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் பணிப்பெண் வேலைக்கு சென்றால், எத்தனை வருடம் வேலை செய்தாலும், உங்கள் சம்பளம் மட்டும் தான் கிடைக்கும் விடுறைக்கான சம்பளம் கிடைக்காது. பணிப்பெண்ணுக்கு அதிகபட்சம் 120 குவைத் தினார் (இந்திய மதிப்பில் ஒரு தினார் ரூ276) தான் சம்பளம். ஆனால் 18-20 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது.
நின்றுகொண்டே தான் இருக்க வேண்டும். சரியான சாப்பாடு இருக்காது. பல கொடுமைகள் இருந்தாலும் குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு பெண்கள் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். அரசாங்கம் புதிய சட்டம் கொண்டு வந்தால் இந்த ஏஜெண்ட்கள் பயப்படுவார்கள். சமீபத்தில் கூட இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தென்காசியை சேர்ந்த ஒருவர் வேலைக்காக குவைத் சென்றுள்ளார். அங்கு வேலை செய்யும் டிரைவர் தான் அவருக்கு விசா எடுத்து கொடுத்துள்ளார். 20 நாட்கள் தான் ஆகிறது. வீட்டு வேலை என்று சொல்லி அழைத்து சென்று, அங்கு ஒட்டகம் மேய்க்க விட்டிருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் அவரை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். அவரிடம் விசாரித்தபோது, இந்த தகவல்களை சொன்னார். இந்திய தூதரகத்தில் ஆண்கள் தங்குவதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கும் விடுதி இந்திய தூதரகம் சார்பில் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது என்ன காரணத்தினாலே அவர்கள் தங்கும் விடுதி கொடுப்பதில்லை. இந்த விடுதியை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.
பணிப்பெண் வேலைக்கு செல்பவர்கள் மட்டும் தான் இந்த சிக்கல்களை சந்திக்கிறர்களா? அல்லது அலுவலக பணிக்காக செல்லும் பெண்களுக்கும் இதே நிலை இருக்கிறதா?
படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லை. ஏஜெண்ட்டை பொருத்தவரை, அவர்கள் சொல்வதை நம்பிவிட கூடாது. சமீபத்தில், திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் பி.ஃபார்ம் படித்திருக்கிறார். அவரிடம் ஏஜெண்ட்கள், இது அந்த நாட்டின் உள்ளே என்ட்ரி ஆவதற்கான விசா தான். நீங்கள் போனவுடன் 10 நாட்களில், விசா மாற்றி கொடுத்துவிடுவார்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். ஆனால் அவரை ஒட்டகம் மேய்கவிட்டுவிட்டார்கள். இறுதியாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
படித்தவர்களாக இருந்தாலும் படிக்காதவர்களாக இருந்தாலும் சரியான முகவர்கள் சரியான வழிகாட்டுதல்கள் இருந்தால் மட்டும் தான் நீங்கள் சரியாக வேலைக்கு சேர முடியும். அதேபோல் திருநெல்வேலி கடையநல்லூர் பகுதியை சேந்த ஒருவர் இஞ்சினியர் வேலைக்கு சென்ற அவரை பாலைவனத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். சாப்பாடு இல்லாமல் இருந்த அவர் வீட்டுக்கு போன் செய்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சொன்னார். அவரை நாங்கள் மீட்டு இந்திய தூதரகத்தின் மூலம் நாட்டுக்கு அனுப்பி வைத்தோம்.
அரசு தரப்பில் நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?
ஏஜெண்ட்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு, இப்படிப்பட்ட செயல்களை செய்கின்றனர். இப்போது புதிதாக, பஞ்சாப், மும்பை, ஆந்திரா இந்த மாதிரியான இடங்களில் இருந்து போன் செய்து, ஏதாவது ஓரு ஏஜெண்ட் செட் செய்து போலியான விசா தயார் செய்து கொடுத்து அங்கு சென்று சித்ரவதை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளிவிடுகின்றனர். தமிழ்நாடு அரசும் இந்திய அரசும், ஏஜெண்ட்களை சரியான முறையில் தேர்வு செய்து கெசட்டில் அவர்களது பெயரை பதிவிட வேண்டும்.
குறைந்தபட்சம் ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்திலும், ஒரு அலுவலகம் அமைத்து, யார் வெளிநாடு செல்ல வேண்டும் என்றாலும், அந்த அலுவலகத்தில் பதிவு செய்த பின் தான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். அங்கு ஒரு பிரச்னை என்றால், இந்திய தூதரகம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, ஒரு இணைதளம் அமைத்து அரசுக்கு தங்களது நிலையை தெரிவிக்க வசதி செய்துகொடுக்க வேண்டும். இப்படி செய்தால், வெளிநாட்டில் இந்தியர்கள் மனநலம் பாதிக்கப்படுவது, தற்கொலைக்கு முயற்சி செய்வது போன்ற நிகழ்வகளை தடுக்க இன்னும் பல மோசமான நிலைக்கு மக்கள் தள்ளப்படுவதை தடுக்க, உதவியாக இருக்கும்.
அரபு நாடுகளுக்கு செல்பவர்கள் மட்டும் தான் இந்த பிரச்னையை சந்திக்கிறார்களா?
அரபு நாடுகளை விட சிங்கப்பூர் மலேசியா எல்லாம் ரொம்ப கொடூரமாக இருக்கு. அந்த நாடுகளில் இருக்கும் முதலாளிகள் அனைவரும் தமிழர்கள் தான். மலேசியாவில் இருக்கும் ஒருவர் கனடாவுக்கு விசா கொடுப்பதாக கூறி 60 பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து நாங்கள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் சிவகங்கை, பெரம்பலுர், ராமநாதபுரம் இநத பகுதிகளில் உள்ள மக்கள் தாக் சிங்கப்பூர் மலேசியாவுக்கு அதிகம் செல்கின்றனர்.
வளைகுடா நாடுகளுக்கு சென்று பெண்கள், இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான். சென்னை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக கணவரை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்ற பெண்கள், குடும்பத்தின் ஆதரவு இல்லாத பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு பிரச்னையில் சிக்கிக்கொண்டால், இங்கு இருக்கும் ஏஜெண்ட்கள் அவரை காப்பாற்ற அந்த பெண்ணின் உறவினர்களிடம் பணம் வசூலிக்கிறார்கள்.
கோவையை சேர்ந்த கவிதா என்பவர், எம்.பி.ஏ படித்துவிட்டு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்றபின் இதை தெரிந்துகொண்ட அவர், நான் இந்த வேலைக்கு வரவில்லை. என்னை ஊருக்கு அனுப்பிவிடுங்கள் என்று சொல்ல, நான் உனக்காக இவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறேன். அதை கொடுத்துவிட்டு நீ போ என்று கூறியுள்ளனர். அவரை அனுப்பி வைத்த ஏஜெண்டும் 2 லட்சம் பணம் கொடுத்தால் உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதன்பிறகு நாங்கள் அவரை மருத்துவமனையில் சந்தித்து அவரை மீட்டு ஊருக்கு அனுப்பி வைத்தோம். அந்நிய தேசம் என்பதால் அங்கு சென்று சட்டம் பேசவும் முடியாது. அந்த நாட்டு சட்டத்திட்டங்களும் நமக்கு தெரியாது. இங்கிருந்து போகும்போது முறையாக சென்றிருந்தால், இது பற்றி கேட்கலாம். இந்திய தூதரகமும் நீ முறையாக விசா பெற்று வரவில்லை என்று தான் சொல்கிறது.
முறையான விசா பதிவு செய்வது எப்படி?
இந்தியாவில் இருந்து அலுவலக பணிக்கோ அல்லது பணிப்பெண் வேலைக்கோ சென்றால், முதலில் இந்திய தூதரகத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி விசாவை பதிவு செய்துகொள்ள வேண்டும். நாம் இங்கிருக்கும்போது விசா வந்துவிட்டால், இங்குள்ள தூதரகத்தில் விசாவை பதிவு செய்ய வேண்டும். இப்படி முறைப்படி பதிவு செய்த விசா மூலம் வெளிநாடு சென்றால், நாம் எங்கு வேலை செய்கிறோமோ அங்கு ஏதேனும் பிரச்னை என்றால், இந்திய தூதரகம் அங்கு வந்து கேள்வி கேட்க உரிமை உண்டு. ஆனால் பலரும் ஏஜெண்ட் பேச்சை நம்பி இந்த முறையான பதிவை செய்ய தவறிவிடுகின்றனர்.
மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்காக யார் வெளிநாடு சென்றாலும், சரியாக விசாவில் செல்ல வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும். விசா முறைப்படி எமிக்ரேஷன் செய்து இந்திய தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த மாதிரி பதிவு செய்யப்பட்ட விசாவில் தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால், இந்த பாதிப்புகள் வராது. ஆனால் இது சாத்தியமாகுமா என்பது தான் கேள்வி.
புதிதாக வெளிநாடு செல்பவர்கள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்க வேண்டும்?
ஒரு விசா வருகிறது என்றால், அது ஒரிஜினலா அல்லது டூபிளிக்கெட்டா என்பதை கண்டுபிடிக்க முடியாது. அப்படி வந்த விசாவை வெளிநாட்டில் இருப்பவரிடம் அனுப்பி சரிபார்க்க சொன்னாலும் பார்க்க முடியாது. விசா தொடர்புடைய நிறுவனத்திடம் விசாரித்தாலும் சரியான பதில் தர மாட்டார்கள். வருவதற்கு முன்பே அவனுக்கு ஆதரவாக ஒருவன் வந்து விசாரிக்கிறான். அவன் இங்கு வந்தால் என்ன நடக்கும் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இதற்கு இந்திய அரசு தான் ஒரு தீர்வை கொடுக்க வேண்டும்.
இந்திய அரசு இதற்காக ஒரு இணையதளத்தை தொடங்கி, அதில் விசா ஒரிஜினலா அல்லது டூபிளிக்கெட்டா என்பதை கண்டறிய வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி சரிபார்க்கும் வகையில் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது வெளிநாடு சென்று பிரச்னைகளை சந்திக்கும் நிலை தவிர்க்கப்படும். தொடக்கத்திலேயே இதை செய்தால், இன்னல்களை சந்திக்கும் பலரையும் காப்பற்றலாம். பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இதை செய்கிறது. ஒரு நாடு செய்யும்போது இந்திய அரசால் முடியாதா?
போலி விசாக்களும் அதிகமாக வருகிறது. ஒரு நிறுவனத்தின் பெயரில், வேலை பற்றிய விபரங்கள், மற்றும் சம்பள விபரங்கள் கையெழுத்துடன் வருகிறது. இதை வைத்துக்கொண்டு சென்றால், அங்கு அந்த நிறுவனம் இது எங்களுடையதே அல்ல என்று சொல்கிறார்கள். அந்த அக்ரிமெண்ட் பேப்பர் உண்மையா என்பதை வைத்தே இங்கு ஏமாற்றம் தொடங்கி விடுகிறது. ஒரு சமயம் அக்ரிமெண்ட் அந்த நிறுவனத்தின் மூலம் தான் வந்திருக்கிறது என்றாலும், சம்பளத்தில் கை வைத்துவிடுகிறார்கள். இதை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலராக நாங்கள் வைக்கும் கோரிக்கை.
இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் ஏஜெண்ட்கள் மட்டும தானா?
ஏஜெண்ட்கள் தான் முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது. அனால் ஏஜெண்ட்களும் ஒரு காரணம். அங்குள்ள முதலாளிகள், நிறுவனத்தில் உள்ளவர்களாலும் பிரச்னைகள் இருக்கிறது. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சில முதலாளிகள் கொடூரமாக இருப்பார்கள். அடிப்பார்கள் துன்புறுத்தவார்கள். தவறான விஷயங்கள் கூட நடக்கும். இங்கிருந்து போகும்போது இதை சரி செய்துகொண்டு போனால் அங்கிருக்கும் பிரச்னைகளை சமாளித்துவிடலாம் என்பது எங்கள் நம்பிக்கை.
குறிப்பாக வெளிநாடு வந்த பெண்கள், வேலை பிடிக்காமல். அல்லது தொந்தரவு தாங்காமல், அங்கிருந்து வெளியில் வந்துவிட்டால், ஆதரவற்ற நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள். சமூக சேகவர்கள் என்ற போர்வையில் பலர் இந்த பெண்களை அபகரிக்க நினைக்கிறார்கள். இதனால் வெளியில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இருக்கிறது.
எல்லா அரபு நாடுகளும், காதிங் விசா என்பதை சிறப்பாக செய்கிறார்கள். ஆனால் சூன் விசாவில் வந்து எனக்கு பிரச்னை என்று இந்திய தூதரகத்தில் புகார் அளித்தால், புகாரை வாங்கிக்கொண்டு கோர்ட்டுக்கு போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். அனைத்து தகவல்களையும் வாங்கிக்கொண்டு கடைசியில் கோர்ட்டுக்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள. மொழி தெரியாதவர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்?
சூன் விசா பிரச்னையில் யார் வந்தாலும், அதை கவனிக்க இந்திய அரசு தனியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னையில் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளது. அதேபோல் வீட்டு பணிப்பெண் வேலை, அலுவலக பணிகள், என அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள். டோர்டெலிவரி வேலைக்கு மட்டும் யாரும் போய்விட கூடாது. இது மிகவும் சித்ரவதையான வேலை. அரபு நாடுகளில் அதிகம் பாதிககப்படுவது யார் என்றால், அது டோர்டெலிவரி வேலை செய்பவர்கள் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.