உலகமெங்கும் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் பண்டிகை காலத்தின் போது தான் தாய் நாட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். பிளைட் இந்தியாவில் லேண்ட் ஆகும் போதும், சொந்த ஊரில் கால் வைக்கும் போதும் மனதுக்குள் ஒரு அதிர்வு ஏற்படும் பாருங்க... அந்த அதிர்வு இதயம் வழியாக தலைக்கு ஏறி, கண்ணுக்குள் நுழைந்து கண்ணீராக வெளிவந்து நிற்கும். நாம கண்ணு வேர்க்குது மோடில் சைடாப்புல துடச்சிட்டு போவோம்... அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
ஆனால், சோகம் என்னென்னா, சிலருக்கு அந்த வாய்ப்பு கூட கிடைப்பதில்லை என்பது தான். வேலை பார்க்கும் நாட்டிலேயே பண்டிகைகளை கடந்து செல்வது கொடுமையிலும் கொடுமை. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு குடும்பத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு வாழும் தமிழ் நண்பர்களின் நெஞ்சம் உண்மையில் இரும்பை விஞ்சும்.
சிலரோ, இந்த எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, தாங்கள் வாழும் நாட்டிலேயே மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடி விடுவார்கள். இதனால், வெளிநாடுகளில் தமிழ் பண்டிகைகளின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியது.
குறிப்பாக சிங்கப்பூரில்....
தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. சாங்கி விமான நிலையத்தில் இறங்கினால், அமுது தமிழ் உங்களை வரவேற்கும். ஆங்கிலம், சைனீஷ், மலேயாவுடன் தமிழும் (அங்கு தேசிய மொழி.) தமிழர்களை கெளரவமாகவும், சுபிட்சமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் நாடுகளில் சிங்கப்பூர் எப்போதுமே முதலிடம். சிங்கப்பூரை கட்டமைத்ததில் தமிழர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அந்த நாட்டின் நீண்ட காலம் அதிபராக இருந்த எஸ். ஆர். நாதனும் தமிழர்தான். இப்படி சிங்கப்பூரின் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் பங்கேற்ற தமிழர்களை இன்றளவும் கெளரவித்து வருகிறது அந்த நாட்டு அரசு. தமிழர்களின் பொங்கல் பண்டிகையை அரசே ஏற்று நடத்துவதும் அந்த நாட்டில் வழக்கம்.
இந்நிலையில், சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. லிட்டில். பொங்கலின் பாரம்பரியத்தையும் தமிழர்களின் கலாசாரத்தையும் புரிந்து கொள்ளும் வகையில், பொங்கல் பாரம்பரிய சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது போல் தமிழர்களின் கலாசார நடனங்கள், கூத்து நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்ற செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவியும் பாடகியுமான ராஜலட்சுமியையும் சிங்கப்பூருக்கே அழைத்து வந்து ஸ்பெஷல் பொங்கல் பாடல் பாட வைத்து கொண்டாடி இருக்கின்றனர்.
டுலெட் பட நாயகன் நடித்து இயக்கிய பாடல் தான் ‘நாளு நாளு தமிழர் திருநாளு’ பாடல். சிங்காவுட் ப்ரோடைக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் திரு.லோகன், திருமதி. சரஸ், திரு.சந்தோஷ் நம்பிராஜன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த பாடலின் சிறப்பம்சமே, தமிழர் மற்றும் பொங்கல் பற்றிய சிறப்பம்சத்தை எடுத்துரைத்ததுதான். பல மான்டேஜ்களும் பல நேரடி காட்சிகளும் பாடலுக்கான எடுக்கபட்ட காட்சிகளும் இணைக்கபட்டு இந்த பாடலை தயாரித்து உள்ளனர்.
மேலும், இந்த பாடலுக்கான படப்பிடிப்புகள் சிங்கப்பூர், மலேசியா, மதுரை ஆகிய இடங்களில் நடந்துள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் நடன கலைஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த வருட பொங்கலில் இந்த தமிழர் திருநாள் பாடல் கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் என்று நம்பப்படுகிறது.
துபாய் பொங்கல்:
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மற்றொரு நாடு துபாய். இங்கு இந்தாண்டு சிறப்பாக பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக நடந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில், நடிகர் சதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கனடா பொங்கல்:
கனடாவில் வான்கோவர் தீவில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக களைக்கட்டியுள்ளது. அங்கு VITS என்று அழைக்கப்படும் வேன்கோவர் தீவு தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா நடைபெற உள்ளது.
ஞாயிறு , 19 ஜனவரி 2020
11:00 - வரவேற்பு
12:30 - மதிய உணவு
14:30 - கலாச்சார நிகழ்வுகள்
16:00 - தேநீர் நேரம்
16:30 - இறுதி கொண்டாட்டம்
என்று டைம் டேபிள் போட்டு கொண்டாட்டத்தை துவக்கியுள்ளனர்.
கனடாவில் டொரோண்டோவில் நடைபெற்ற இளம் சிறார்களின் பொங்கல் அரங்கேற்ற நிகழ்வு.
அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகையை அங்கீகரித்த முதல் கனடா நகராட்சி மார்க்கம் தான் இங்கு, ஜனவரி 13, 14 மற்றும் 15 தேதிகளை தமிழ் பாரம்பரிய நாட்கள் / தமிழ் புத்தாண்டு / தை பொங்கல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
மார்க்கம் தை பொங்கல் விழா, கனடாவில் மிகப்பெரிய தமிழ் பாரம்பரிய கொண்டாட்டமாக இன்றும். தொடர்கிறது.
இப்படி உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் சொந்த ஊரில் கொண்டாட முடியாத தங்கள் பண்டிகைகளை வாழும் நாட்டிலேயே முடிந்தளவு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வெளிநாட்டில் வசிக்கிறோம்... எதற்கு தமிழ் பண்டிகையை இங்கு கொண்டாடிக்கிட்டு என்ற எண்ணம் இல்லாமல், எப்பாடுபட்டாவது சம்பந்தப்பட்ட அரசின் அனுமதியோடு தமிழர்களின் கலாச்சாரத்தை அங்கும் நிலைநாட்டி வருவது நமக்கு பெருமை தானே!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.