Tamil recipe news, thattu idli: தட்டு இட்லி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களில் பலர் ஹோட்டலில் அதை சாப்பிட்டிருக்கக் கூடும். அந்த தட்டு இட்லியை வீட்டிலேயே சுலபமாகச் செய்யலாம். அதுவும் 20 நிமிடங்களில் டேஸ்டியாக செய்து அசத்த முடியும். எப்படி? எனப் பார்க்கலாமா?
இட்லி செய்ய தேவையானவை: உளுந்தம் பருப்பு - அரை கப்,
இட்லி அரிசி - 2 கப், உப்பு - அரை தேக்கரண்டி
இட்லி பொடி செய்ய தேவையானவை: உளுந்தம் பருப்பு - 1/4 கப், கடலைப் பருப்பு - 1/4 கப், வெள்ளை எள்ளு - 2 மேசைக் கரண்டி, காய்ந்த மிளகாய் - 10, கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி, புளி - சிறிதளவு, உப்பு - 1 தேக்கரண்டி
தட்டு இட்லி செய்முறை:
தட்டு இட்லி செய்முறை வருமாறு: இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை தனித்தனியாக, 6 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் உளுந்தம்பருப்பை தண்ணீர் வடித்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவைப்பட்டால் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைக்கலாம். கெட்டியாக அரைக்க வேண்டியது முக்கியம்.
அடுத்து அரிசியை மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும். இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 8 மணி நேரங்களுக்கு புளிக்க வைக்கவும்.
அடுத்து இட்லி பொடி அரைக்க வேண்டும். இதற்கு ஒரு கடாயில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக சிவக்க வறுக்கவும். வெள்ளை எள்ளையும் போட்டு பொரியும் வரை வறுக்கவும். இறுதியாக காய்ந்த மிளகாயை வறுத்து ஆறவிடவும். அனைத்தும் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் போட்டு பெருங்காயம், சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நன்கு புளித்த இட்லி மாவை தட்டில் ஊற்றி 15 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும். இப்படி எடுத்த இட்லி மீது நெய் ஊற்றி, இட்லி பொடியைத் தூவி சூடாக பரிமாறவும் . இதுதான் தட்டு இட்லி செய்முறை.இதற்கு சாம்பார், சட்னி என தனியாக சைட் டிஷ் தேட வேண்டாம். செய்து பார்த்து மகிழுங்கள்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"