ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத தேவைகளில் முக்கியமான ஒன்று கல்வி. பெற்றோர் தங்களது குழந்தைக்கு முக்கியமாக கொடுக்க வேண்டிய சொத்தே கல்விதான் என்று அரசர் காலத்திலேயே சொல்லிவிட்டார். அதேபோல் ஆண் பெண் என இரு பாலருக்கும் கல்வி என்பது பொதுவானது. ஆனால் ஒரு ஆண் கல்வி கற்பதை விடவும் ஒரு பெண் கல்வி கற்பது நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒரு தேவை.
ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே முன்னேறுவான். அதே ஒரு பெண் கல்வி கற்கால் தனது குடும்பத்தையே முன்னேற்றுவார் என்று சொல்வார்கள். அதனால் பெண் கல்வி என்பது ஒரு நாட்டின் இன்றியமையான தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் கடந்த காலங்களில் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழமொழியை பெண்களுக்கு எதிராக சிலர் பேசியுள்ளனர்.
ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில், தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலதுறைகளில் தங்களது திறமையை நிரூபித்து சாதனை படைத்து வருகின்றனர். குறிப்பாக பெண்களின் இந்த முன்னேற்றம் கல்வியிலும் தொடர்ந்து வருகிறது. ஆண்டு தோறும் வெளியாகும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தேர்வு முடிவுகளில் மாணவர்களை விடவும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று வருவதே இதற்கு சான்றாக சொல்லலாம்.
ஒரு பக்கம் ஆண்களுக்க நிகராக பெண்கள் கல்வி வேலை வாய்ப்பு என அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வந்தாலும், பெண் அடிமைத்தனம் என்பது இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கும் ஒரு பெரும் கொடூரமான நிகழ்வாக உள்ளது. பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல கூடாது என்று சொல்லும் ஒரு கூட்டமும் இங்கே சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. இந்த கூட்டத்திடம் சிக்கிவிடாமல் பல பெண்கள் தங்களை படிப்பில் ஒரு அறிவாளியாக வளர்த்துக்கொள்ள போராடி வருகிறார்கள்.
இந்த மாதிரியான பெண்களையும், பெண் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் பல தன்னார்வ தொண்டர்கள் பெண் கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில், பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வப்போது இந்த பயணம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் ஒருவர் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சென்னையில் இருந்து இரு சக்கரவாகனத்தில் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி சென்னையில் இருந்து தனது பயணத்தை தொடங்கியுள்ளார். 700- கிலோமீட்டர் தொலைவை கடந்து 19-ந் தேதி கன்னியாகுமரியை அடைந்துள்ளார். இந்த 700 கி.மீ பயணத்தின் இடையில் பேருந்து நிலையங்கள், கோயில்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண் கல்வியை வலியுறுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து மணிகண்டன் கூறுகையில்,''
சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இரு சக்கரவாகனத்தில் பயணிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். ஆனால் இது வெறும் இருசக்கர வாகன பயணமாக இருக்க கூடாது சமூக நலன் சார்ந்த பயணமாக இருக்க வேண்டும் என்று யோசித்தேன். அப்போதுதான் பெண் கல்வியை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமாக இந்த பயணத்தை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தேன்.
இந்தியாவில் இன்றும் பல கிராமங்களில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது ஒரு தேச விரோத செயல் என்பது போல் நடந்துகொள்கிறார்கள். இந்த நிலை தமிழகத்திலும் இருகிறது. அப்படியோ பெண் படித்தாலும் பள்ளிகல்வி முடிந்தவுடனே அவர்களுக்கு திருமணத்தை முடித்துவிடுகிறார்கள். இப்படி திருமணம் செய்துகொள்ளும் பெண்களின் கல்வி என்பது அவர்கள் வாழ்வில் எட்டாக்கனியாகவே மாறிவிடுகிறது. இந்த நிலை சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு பெண் கல்வி கற்றும்போது அவரது குடும்பம் மட்டும்மல்ல இவர் வசிக்கும் சமூகமும் முன்னேற்றம் அடையும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பல பெண் ஆளுமைகள் கொண்ட மாநிலமாக திகழும் நமது தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்வோம். உயர்கல்வி கற்கவும் ஊக்குவிப்போம். என்பதை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தேன். சிலர் வாழ்த்தினர். ஆகஸ்ட் 18ம் சென்னையில் தொடங்கிய எனது பயணம், ஆகஸ்ட் 23-ம் தேதி நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்ய உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நான் பணிபுரியும் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
பள்ளி மாணவ-மாணவிகள் பாலியல் ரீதியிலான தொல்லைகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அடுத்த பயணம் மேற்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்'' என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.