தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பிஹைண்ட்வுட்ஸ் 02 யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தொகுப்பாளர் கோபிநாத் உடன் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.
கோபிநாத் கேள்விகளும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில்களும்
நீங்க மனசுக்குள் முனுமுனுக்கும் பாடல் என்ன?
கலைஞர் வசனத்தில் மறக்க முடியுமா திரைப்படம், அதில் ‘காகித ஓடம் கடலலை மீது’ பாட்டு என்னைக்கும் மறக்க முடியாது. அந்த படம், அதை எடுத்திருக்கும் விதம், அதன் கருத்துகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
உதயநிதி, செந்தாமரை.. உங்களுக்கு யாரு செல்லப்பிள்ளை?
நான் அந்த வேறுபாடே பாக்கிறதில்ல. ரெண்டு பேருமே என்மேல ரொம்ப அன்பு வச்சுருக்காங்க. என்கிட்ட கேட்காம எதுவும் செய்றதில்ல. ரெண்டு பேருக்குமே காதல் திருமணம் தான். எங்க வீட்டுல பெரும்பாலும் மாறன் குடும்பத்துல, அமிர்தம், செல்வம் குடும்பத்துல எல்லாரும் காதல் திருமணம் தான். உதயாவும், செந்தாமரையும் என்கிட்டதான் வந்து முதல்ல காதல்ல சொன்னாங்க. நான் ஒத்துக்கிட்டேன். மனைவிகிட்ட பேசுனேன். முதல்ல எமோஷனலா இருந்தாங்க. அப்புறம் அவங்களை சமாதானம் பண்ணி கல்யாணாம் பண்ணி வச்சோம். இப்போ நல்ல இருக்காங்க, இப்பவும் எங்களை கேட்காம எதுவும் செய்றதில்ல. நாங்களும் அவுங்ககிட்ட கலந்து பேசாம எதுவும் பண்றதில்ல.
நீங்க தனிமையில இருக்கும் போது உங்க மனசுல என்ன ஓடும்?
இதெல்லாம் தலைவர் பாக்கலையே நினைப்பேன். அவரோட எண்ணங்கள் எல்லாம் நிறைவேறிட்டு வர்றோம். ஆனா அவர் இதெல்லாம் பார்க்கலை என்ற எண்ணம் மனசுல ஓடிட்டே இருக்கும். அதனால தான் நான் அடிக்கடி தலைவரோட நினைவு அரங்கத்துக்கு போயி கொஞ்ச நேரம் உட்காந்துட்டு வரதுண்டு..
உங்க சின்ன வயசுல கலைஞர் எந்த விஷயத்துல உங்களை ரொம்ப ஈர்த்தாங்க?
அவரோட உழைப்புதான். எப்போ வீட்டுக்கு வருவாங்க, சாப்பிடுவாங்க, தூங்குவாங்கன்னே எங்களுக்கு தெரியாது. எப்போதும் பிஸியா இருப்பாங்க. என்னை ஸ்டாலின் பெயர் சொல்லிதான் கூப்பிடுவாங்க. ஆனா வீட்டுல இருக்க பெரியவங்களுக்கு அந்த பேரு கூப்பிட வராது. சாலி, தாலி-ன்னு கூப்பிடுவாங்க.
அதுமட்டுமில்லாம வெளிநாட்டுல இருந்து யாராவது தூதுவர்கள் வந்தா, குறிப்பா ரஷ்யாவுல இருந்து வந்தாங்கன்னா என்ன கூப்பிட்டு அறிமுகப்படுத்தி வைப்பாங்க. ஸ்டாலின் பெயர் இருக்கிறதுனால, அதை அவுங்க ஆச்சரியமா பார்ப்பாங்க..
என்னை ஸ்கூல்ல சேர்க்கும் போது முரசொலி மாறன் பொறுப்பெடுத்து அட்மிஷன் வாங்கிட்டாரு. அட்மிஷன் அப்போ ஸ்கூல்ல, ஸ்டாலின் பெயர் இருக்கு. ரஷ்யாவுல வேற பெரிய பிரச்சனை போயிட்டு இருக்கு. அதனால பெயரை மட்டும் மாத்துனா எங்களுக்கு வசதியா இருக்கும் சொன்னாங்க.. உடனே முரசொலி மாறன் தலைவர்கிட்ட கேட்டாங்க. அதற்கு தலைவர், ஸ்கூல்ல வேணா மாத்துவோமே தவிர, பெயரை மாத்தமாட்டேன் சொல்லிட்டாரு. அதனால அந்த ஸ்கூல்ல சேர்க்காம பக்கத்து தெருவுல இருக்கிற மாண்டிசோரி எலிமெண்ட்ரி ஸ்கூல்ல கொண்டு சேர்த்தாங்க…
பள்ளி படிக்கும் போது உங்களுக்கு யாரு பெஸ்ட் ஃபிரென்ட்?
மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்ல தான் 6ல இருந்து 11 வரை படிச்சேன். அங்க ஒரு 4,5 ஃபிரென்ட்ஸ் எப்போவும் ஒன்னா இருப்போம். ஸ்கூல்ல கட் அடிச்சுட்டு அடிக்கடி சினிமா போவோம். அப்போ சைக்கிள்ல டபுள்ஸ் போகக் கூடாது.
ஒருநாள் மதியம் மேட்னி ஷோக்கு ’புதிய பூமி’ எம்.ஜி.ஆர் படம் பார்க்க சைக்கிள்ல டபுள்ஸ் போயிட்டு இருந்தோம். அப்போ போலீஸ் எங்களை பிடிச்சு ஸ்டேஷன்ல கொண்டு வச்சுட்டாங்க.. என் நண்பர்கள் பெயர், அட்ரஸ் எல்லாம் கேட்டு குறிச்சு வச்சுட்டாங்க.. என்னோட பெயர், அப்பா பெயர், அட்ரஸ் எல்லாம் கேட்டாங்க.. எல்லாம் சொன்னேன்.
அப்பா எங்க வேலை செய்றாரு கேட்டாங்க. கோட்டையில வேலை செய்யுறாரு சொன்னேன். அங்க என்ன வேலை செய்றாருன்னு கேட்டாங்க. பொதுப்பணித் துறை அமைச்சரா இருக்காரு சொன்னேன். உடனே அவுங்க இதை முதல்ல சொல்லக்கூடாதான்னு கேட்டாங்க. நான், அதெல்லாம் நான் சொல்ல விரும்புல. நீங்க என்ன தண்டனை கொடுக்கணுமோ கொடுங்க சொன்னேன். அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் வச்சு அனுப்பிட்டாங்க..
இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பிஹைண்ட்வுட்ஸ் 02 யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
அந்த முழு வீடியோவைக் காண
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.