Tamil Nadu government Doctors Strike : சமீபத்தில் நாம் கடந்து வந்த செய்தி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர்களின் வேலைநிறுத்தம். மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், மத்திய அரசின் சம்பளத்திற்கு நிகரான சம்பளம் கொடுத்தல் வேண்டும் போன்றவைகளுக்காக போராடி வருகின்றனர் .
மருத்துவர்களின் போராட்டம் பொது வீதிகளுக்கு வந்துள்ளது .... நல்ல செய்தி ! நல்ல தொடக்கம் !!!!
ஆனால், நவீன மனித இயலாமையின் ஒர் அறிகுறியாகத் தான் இந்த போராட்டத்தை நம்மால் காண முடிகிறது. நவீன அரசியலின் ஓர் அடிப்படையான அடித்தளம் மனித உடம்புகள். மனித உடம்பு என்பது வெறும் ரத்தமும் சதையுமும் மட்டுமல்ல. அது ஒரு கலாச்சாரக் கட்டமைப்பு. அந்த கட்டமைப்பு வெறும் நோயாளி - மருத்துவர் என்ற உறவை மட்டும் மையாமாக வைத்து பயணிக்கின்றதோ? என்றே தோன்றுகிறது.
மருத்துவக்கல்வி முதலில் அறிவியலாக்கப்பட்டதே நமது இயலாமை...ஏன் ? மருத்துவம் கல்வியாகப்பட்டதே ஒரு வகையான மனிதப்பிழை. மனிதர்களின் உடம்பை ஒரு ஆராய்ச்சிக்கூடமாக மாற்றியதே இந்த அறிவியல் பார்வை. இந்த பார்வைக்கு அன்றாட மக்களின் அரசியல் புரியாது. "நோயாளி" என்ற வார்த்தை நவீன மருத்துவத்தின் ஒரு விதமான அபாயக் கண்டுபிடிப்பு .
மனிதர்களின் மகிழ்ச்சி, வெறுமை, பலம், பலவீனம், இயல்பு, பேச்சு, மௌனம், முதிர்ச்சி, வலி, ரத்தம், மரணம் எல்லாம் இன்றைய மருத்துவமனையில் ஒரு எண்ணிக்கை அளவுகோலில் தான் பெறப்படுகிறது . லேப் டெஸ்ட்- ல் (lab test ) ஆராயப்படுகிறது . இந்த தர்க்கத்தில் பார்த்தால் எல்லா நோயும், நோயாளியும் ஒரு வகையான கணிதப் பிரச்சனை .
இந்த மருத்துவக் கணக்கில்தான் எல்லா சமூக அடையாளங்கள் நிரூபிக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு பெண் பெண்ணாக்கப்படுவதும், ஏன் ! அவளையே ஒரு ஆணாக்குவதும் (Caster Semenya விவகாரம்), பெண்மையாக்கப்படுவதும், தாயாக்கப்படுவதும், மலடியாக்கப்படுவதும், கிழவியாக்கப்படுவதும், தோற்கடிக்கப்படுவதும்...... நவீன மருத்துவ கணக்கில்தான்.
சமூகம் பெண்ணை அடிமைப்படுத்திருக்கலாம் . ஆனால் பெண்ணடிமையை நியாயப்படுத்தியது மருத்துவ மொழியில் தான்!
நமக்கான பதில்கள் :
இன்றைய மருத்துவமனை பார்வையாளர்கள் இல்லாத ஓர் அருங்காட்சியமாகவே உள்ளது. மனித வரலாறு மறக்கப்பட்டுள்ளது, மனித மொழி மறைக்கப்பட்டுள்ளது .
என்ன தான் நாட்டுப்புற மருத்துவம், மாற்று மருத்துவத்தில் (spirit communication, telepathy ) வெளிப்படைத்தன்மை இல்லையென்றாலும் அங்கு உணரப்படாத மொழியிருந்தது. அங்கு மக்கள் ஒரு நோயாளியாக இல்லாமல் பார்வையாளர்களாகவே இருந்தனர். எல்லா பார்வையாளரும் தன்னை மறந்து உண்மையோடு ஒன்றிணைந்து புதிய அடையாளத்தைத் தேடினர்.
நவீன அறிவியல் மருத்துவமும் நோயளியை ஒரு பார்வையாளனாய் மாற்ற வேண்டும்.
ஏன் இந்த பிறப்பு ? மரணம் என்றால் என்ன ? கருவிலே இறக்கும் பிறக்காத குழந்தையின் மொழி என்ன? மனித உடம்பின் நோக்கம் தான் என்ன ? பாலினம் தேவைதானா ? தற்கொலையை எவ்வாறு உச்சரிப்பது, பிரம்மன் காலடியில் எப்படி சூத்திரன் பிறக்க முடியும் ? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் ஒரு பொதுமேடையாக மாற வேண்டும்.
மருத்துவமனை ஆராய்ச்சிக்கூடமாக இல்லாமல் ஒரு கலைக்கூடமாக மாறவேண்டும் ... கட்டுக்கடங்காத மனித உண்மைகள் வெள்ளம்போல் ஓட வேண்டும் .... சுருக்கமாக மருத்துவம் கலையாக்கப் படவேண்டும். கவிதையாக்கப் படவேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையும் ஒரு ஞாபகம், வாய்ப்பு, எதிர்காலம், பலதரப்பட்ட உண்மை, பக்குவப்படவேண்டிய கடவுள்.