மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய பழம்பெரும் செவ்ரோலெட் கார், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு, இப்போது புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கிறது.
Advertisment
காமராஜர் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, டிவிஎஸ் குழும தொழிலதிபர் டி.வி.சுந்தரம், 1952-ல் அறிமுகமான ‘செவ்ரோலெட் ஸ்டைல்லைன் டீலக்ஸ்’ கருப்பு நிற காரை (எம்டிடி 2727) அவருக்கு வழங்கினார்.
எம்.டி.டி. 2727' என்ற எண் கொண்ட இந்த காரில்தான் காமராஜர், தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சிப் பணியாற்றினார். 1954ல் தமிழக முதல்வரான பிறகும், அரசால் வழங்கப்படும் காரை பயன்படுத்தாமல், செவ்ரோலெட் காரிலேயே தமிழகம் முழுவதும் பயணித்தார்.
1963 ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகிய காமராஜர். பின்பு இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்தாபன காங்கிரஸ் நிறுவினார், அதை வலுப்படுத்த அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின்போதும் இந்தக் காரில்தான் தமிழகம் முழுவதும் பயணம் செய்தார்.
Advertisment
Advertisements
அவருக்கு பிறகு பி. ராமச்சந்திரன் தலைமையில் குமரி அனந்தன் உள்ளிட்டோர் ஸ்தாபன காங்கிரஸ் நிர்வகித்தனர்.
அப்போது கட்சியை நடத்த பணம் இல்லாமல் காமராஜர் பயன்படுத்திய காரை, சென்னையைச் சேர்ந்த காப்பித் தூள் வியாபாரி சோமசுந்தர நாடாரிடம் விலை பேசி, ரூ.2 ஆயிரத்தை முன் பணமாக பெற்றனர்.
காமராஜர் கார் விற்கப்பட்டதைக் கேள்விப்பட்டு மனம் தாங்காத கவிஞர் கண்ணதாசன், "கார்முகில் வண்ணன் கண்ணபிரான் ஏறிய தேரில், காப்பித் தூள் கடைக்காரரா..!' என்று தான் நடத்தி வந்த தென்றல் பத்திரிகையில் கவிதை எழுதினார்.
சேலத்தில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் கண்ணதாசனின் கவிதையை பத்திரிகையில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே, சோமசுந்தர நாடாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "காரை சத்தியமூர்த்தி பவனில் கொண்டுபோய் நிறுத்திவிடுங்கள்; நாங்கள் சென்னை வந்ததும் நீங்கள் கொடுத்த முன்பணத்தை திருப்பி தந்துவிடுகிறோம்' என்று தெரிவித்தனர்.
காமராஜ் திரைப்படத்தின் ஸ்டில்
சோமசுந்தர நாடாரும், அவர்கள் கூறியபடியே காரை சத்தியமூர்த்தி பவனில் ஒப்படைத்தார்.
சில காலம் கழித்து, இந்த கார் சென்னை காமராஜர் அரங்கத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இந்த கார் வைக்கப்பட்டது.
பல தசாப்தங்களாக நின்ற கார் பயன்படுத்தாமல் அப்படியே பாழடைந்து போனது.
பொலிவிழந்த கார், தற்போது கிருஷ்ணகிரியில் உள்ள பிரபல கார் பழுது நீக்கும் நிறுவனத்தின் மூலம் கார் புதுப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கார் பழுது நீக்கும் நிறுவன உரிமையாளர் அஸ்வின் ராஜ்வர்மா கூறுகையில், என் தாத்தா பி.கே.பி.எம். முனுசாமி, காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரியில் எம்எல்ஏ-வாக இருந்தார். நாங்கள் பாரம்பரியமாகக் காங்கிரஸ் குடும்பத்தினர் என்கிற அடிப்படையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி என்னிடம், காரை புதுப்பித்துத் தருமாறு கேட்டார்.
அதன்படி கடந்த ஜூன் 1-ம் தேதி காரை சென்னை காமராஜர் அரங்கத்திலிருந்து எடுத்து வந்து புதுப்பித்துள்ளோம். கார் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதால் அதன் உதிரிப் பாகங்களான கார் கண்ணாடி, ரப்பர் ஆகியவற்றை அமெரிக்காவிலிருந்து வாங்கினோம்.
காரின் சில்வர் பாகங்கள் ஜோத்பூர் அரண்மனையில் பழைய கார்களைப் புனரமைக்கும் நிபுணர் அர்ஜூன் தலைமையிலான குழுவினர் மூலம் புதுப்பித்தோம்.
புதுப்பொலிவு பெற்றுள்ள கார், வரும் 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாளையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் மீண்டும் மக்கள் பார்வைக்கு நிறுத்தப்படும் என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“