இன்றைய காலக்கட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் பயன்படுத்தும் முக்கிய சமையல் எண்ணெயில் பாமாயில் முக்கிய இடம் பிடித்துள்ளது. பொதுவாக இந்த பாமாயில் மளிகை கடைகளில் கிடைக்கும் என்றாலும் ரேஷன் கடைகளில் அரசாங்கத்தின் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisment
செம்பனை அல்லது எண்ணெய் பனை என்ற மரத்தில் இருந்து கிடைக்கும் விதைகளில் இருந்து பாமாயில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த எண்ணெய் மரங்கள் இந்தோனேசியா, மலேசியா, நைஜீரியாக உள்ளிட்ட பல நாடுகளில் பெருமளவு பயிரிடப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த மரம் நடவு செய்து 4 ஆண்டுகள் கழித்து பயன் பெறலாம். பொதுவாக 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த செம்பனை மரங்களில் பேரீச்சம் மரத்தில் இருப்பது போன்ற ஓலைகள் காணப்படும். இந்த மரங்களில் ஆண் பெண் பூக்கள் தனித்தனி பாளைகளில் தோன்றும். இவை ஒன்றினைந்து 5-6 மாதங்களில் காய்கள் உருவாகும். ஒரு குலையில் சுமார் 150-200 காய்கள் வரை இருக்கும்.
இந்த காய்கள் கனிந்து சிவப்பு நிற பழங்களாக மாறிவிடுவதால் இவற்றை செம்பனை என்று சொல்வார்கள். ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய இந்த செம்பனை மரங்கள் 80-100 ஆண்டுகள் தொடர்ச்சியாக வளரும். தொடர்ந்து 25 ஆண்டுகள் அதிக பழங்களை கொடுக்கும். இந்த பழங்களின் கொட்டைகளில் இருந்து பாமாயில் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
பாமாயில் எண்ணெய் நன்மை தீமைகள்
பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களுக்கு ஆரோக்கியம் தரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கண்பார்வை மேம்படுத்துவதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ (ரெட்டினோல்) உருவாவதற்கு பீட்டா கரோட்டின் முன்னோடியாக இருப்பதால், வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.
அதே சமயம், பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு வளர்சிதை நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. பாமாயிலில் உள்ள பால்மிடிக் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடும் என்பதால், பாமாயில் ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். சமைத்த பாமாயில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனாலும் சமைக்காத பாமாயில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
செம்பனை பயிரிட அரசு மானியம்
இந்த செம்பனை மரங்களை பயிரிடுவதற்கு அரசின் சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர் கிராமத்தில் எண்ணெய் பனை அல்லது செம்பனை நடவு மெகா இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 3.5 ஹெக்டேர் பரப்பளவில் எண்ணெய் பனை செடிகள் நடப்பட்டன.
மேலும் தோட்டக்கலை-தோட்டப் பயிர்கள் துறை மூலம் விவசாயிக்கு சுமார் ரூ.1,01,500 மதிப்பிலான நடவுப் பொருள் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை மூலம் எண்ணெய் பனை தோட்டத்திற்கு ரூ.87,626 மதிப்பில் சொட்டு நீர் பாசன முறையும் அமைக்கப்பட்டது. இந்த செடிகள் கொறித்துண்ணிகள் மூலம் சேதமடைவதைத் தவிர்க்க ஒவ்வொரு எண்ணெய் பனை செடியின் கீழும் கம்பி வலை போடப்பட்டுள்ளது. இதற்காக தோட்டக்கலை-தோட்டப் பயிர்கள் துறை மூலம் விவசாயிகள் ரூ.70,000 உட்பட மொத்தம் ரூ.2,59,126 மானியம் விவசாயிகள் பெறலாம்.
இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை இயக்குனர், விவசாயத்துறை இயக்குனர், விவசாயம் இணை இயக்குனர், விவசாயம் உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர், ஆகியோருடன், சின்னசேலம், தியாகதுருகம் போன்ற பிற பகுதிகளைச் சேர்ந்த எண்ணெய் பனை சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் என தோட்டக்கலைத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“