scorecardresearch

பகலில் மேள சத்தம், புதையலை பாதுகாக்கும் ஆவி… மர்மங்கள் நிறைந்த தியாகதுருகம் மலைக்கோட்டை

பொக்கிஷங்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோட்டைக்கு சென்ற சிலர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்

thiyagadurugam
தியாகதுருகம் மலைக்கோட்டை

இளையராஜா தண்டபாணி

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும், அதற்கு முன்பாக இருந்த மன்னர் காலத்திலும் நிறுவப்பட்ட பல கோட்டைகள் மற்றும் ராணுவதளங்கள் இன்றைய மக்கள் பார்க்கும் வகையில் அழியாமல் அப்படியே இருந்து வருகிறது. இதற்கு மிகப்பெரிய உதாரணம் தஞ்சை பெரிய கோயிலும், திருச்சி கல்லணையும் சொல்லலாம்.

கோட்டை வரலாறு

அதேபோல் தமிழகத்தில் செஞ்சி, வேலூர், உள்ளிட்ட பல இடங்களில் மன்னர்கள் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட கோட்டைகள் தமிழக தொல்லியல் துறையால் பாதுகாப்பப்பட்டு தமிழரின் பாரம்பரியம் வாழ்க்கைமுறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தியாகதுருகம் மலைக்கோட்டையும் தமிழக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தானிய கிடங்கு

கோட்டையின் வரலாறு

கி.பி 16-ம் நூற்றாண்டில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 18-ம் நூற்றாண்டில் இருந்து ராணுவ தளமாக செயல்பட்டு வந்த இந்த கோட்டையை அதன்பிறகு பிரஞ்சு படை கைப்பற்றியுள்ளது. அடுத்து சில ஆண்டுகள் கழித்து கி.பி.1756-ம் ஆண்டு பிரஞ்சு படைகளுடன் போரிட்ட ஹைதர் அலி 1760-ம் ஆண்டு இந்த கோட்டையை கைப்பற்றி தனது ராணுவதளமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிப்பகுதி அதிகரித்து வந்த நிலையில், ஹைதர் அலி ராணுவதளமாக செயல்பட்டு வந்த தியாகதுருகம் மலைக்கோட்டையும் ஆங்கிலேயர் வசம் சென்றது. இந்த கோட்டையை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றும் நோக்கில் அவர்களுடன் போட்டி ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் 1790-ம் ஆண்டு இந்த கோட்டையை கைப்பற்றி மீண்டும் ராணுவ தளமாக மாற்றினார்.

Thiyagadurugam2
பீரங்கி

ஆனால் அதன்பிறகு சில ஆண்டுகளில் இந்தியாவில் ஆங்கிலேயாரின் ஆதிக்கம் பெருமளவு உயர்ந்ததை தொடர்ந்து திப்பு சுல்தான் வசம் இருந்த தியாகதுருகம் கோட்டை மீண்டும் ஆங்கிலேயர் வசம் சென்றது. அவர்களின் ஆட்சியிலும் இந்த கோட்டை ராணுவ தளமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த கோட்டையை ஹைதர் அலி கைப்பற்றுவதற்கு முன்பாக ராணி தியாகவள்ளி என்பவர் ஆட்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பீரங்கி

கோட்டை அமைவிடம்

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த தியாகதுருகம் கடந்த 2019-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிந்தபோது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் இருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தியாகதுருகம் பேரூராட்சியில் மத்தியில் அமைந்துள்ள இந்த கோட்டைகடல்மட்டத்தில் இருந்து 400 அடி உயரம் கொண்டது.

கோட்டை சுற்றுச்சுவர் மழைநீர் தேக்கம்

இந்திய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த இந்த கோட்டையில் சூரியன் பார்க்காத கிணறு, தாமரைக்குளம், யானை மற்றும் குதிரைகள் தங்குவதற்கான இடம் ஆகியவை இன்றும் நாம் தெளிவாக பார்க்கக்கூடிய வகையில் இருக்கிறது. மேலும் கோட்டையின் பாதுகாப்பிற்காக எதிரிகளை தாக்கும் பீரங்கி குண்டுகள் இந்த கோட்டையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக 2 பீரங்கிகள் கோட்டையில் உள்ளன.

அதேபோல் கோட்டையின் பின்புறம் மலையம்மன் என்ற குகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 10-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், மலையம்மன் சன்னதியும், விநாயகர் உபசன்னதியும் உள்ளது. மேலும் இந்த கோவிலின் அருகில் பழங்கால குளம் ஒன்று அமைந்துள்ளது.

கோட்டை குகை

கோட்டையின் மர்மங்கள்

இந்த கோட்டையில் பீரங்கி குண்டுகள், தாமரை குளம், யானை மற்றும் குதிரைகள் தங்கும் இருக்கும் அதேவேளையில், 2 ரகசிய அறைகள் உள்ளது. இந்த ரகசிய அறைகளுக்கு அருகில் தான் இந்த சூரியன் பார்க்காத கிணறு அமைந்துள்ளது. சூரிய ஒளி கிணற்றில் தெரிந்தாலும், சூரியன் நேரடியாக இந்த கிணற்றை பார்க்க முடியாது. அதேபோல் அரசர்கள் காலத்தில் விலைமதிக்க முடியாத பொருட்களை வைப்பதற்காக ரகசிய அறைகள் கட்டப்பட்டுள்ளது.

கோட்டை மீது ஏறி சென்றாலும் இந்த ரகசிய அறைக்கு தவழ்ந்துதான் செல்ல முடியும். குகைக்குள் கட்டப்பட்டுள்ள இந்த பாதாள அறை பட்டபகலிலும் இருள் சூழ்ந்த நிலையில் தான் உள்ளது. செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு பாறையில் கட்டப்பட்டுள்ள இந்த அறையில் திப்பு சுல்தான் பல பொங்கிஷங்களை வைத்து பாதுகாத்து வந்ததாக கூறப்படுகிறது. இன்றும் அந்த பொங்கிஷங்கள் அங்கு இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த பொங்கிஷங்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு சென்ற சிலர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும், ஆவி அந்த புதையலை பாதுகாத்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தாமரைக்குளம்

அதேபோல் மழைகாலத்தில் மலையில் இருந்து வரும் நீரில் அக்காலத்து காசுகள் வந்ததாகவும், இந்த காசுகளை எடுக்க வெளியூரில் இருந்து மக்கள் வருவார்கள் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆடு மேய்க்க மலைப்பகுதிக்கு சென்ற ஒரு சிலருக்கு முத்துமலை கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். மேலும் புதையல் பற்றிய ரகசியத்தை திப்புசுல்தான் ஒரு கல்வெட்டில் எழுதி வைத்திருப்பதாகவும், இதை நம்பி பலர் புதையலை எடுக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ராணி தியாகவள்ளி?

ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக இந்த கோட்டையை ஆண்ட ராணி தியாகவள்ளி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் உறவினர்கள் அவரை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மத்திக்க வைத்துள்ளனர். திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு பலரும் மரணமடைந்துள்ளனர்.

குளத்தின் சுற்றுச்சுவர்

இதனால் ராணி தியாகவள்ளியின் திருமணம் நின்றது. இந்த சம்பவத்தில் மரணமடைந்த பலரும் இன்றும் அக்கோட்டையில் ஆவியாக உலாவி வருவதாகவும் கூறப்படும் நிலையில், தியாகவள்ளியின் திருமண ஏக்கம் காரணமாக இப்போதும் அக்கோட்டையில் மேள தாள சத்தங்கள் கேட்பதாக அப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளனர். பல மர்மங்கள் உள்ளதாக கூறப்படும் இந்த கோட்டையில் இப்போதும் கூட யாருமே வருவதில்லை. ஆடு மாடு மேய்க்கும் அப்பகுதி மக்களை தவிர வேறு யாரும் அப்பகுதிக்கு செல்லாததால் கோட்டை ஆள் அரவமற்று கிடக்கிறது. ஆனால் நாம் இந்த கோட்டை பகுதிக்கு சென்றபோது மர்மங்கள் போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu kallaikkurichu thiyagadurgam fort history update in tamil

Best of Express