கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு, மக்களின் வாழ்வாதாரம் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகும், அதைக் கட்டுப்படுத்தி இருக்கிறோமா என்றால் அதுவும் கேள்விக்குறியே. பொருளாதார வீழ்ச்சி காரணமாக பெரு நிறுவனங்களே சம்பளக் குறைப்பிலும், ஆட்குறைப்பிலும் ஈடுபட இடிந்து போயிருக்கின்றனர் நடுத்தர வர்க்கத்தினர்.
பால் பாக்கி தொடங்கி, வீட்டுக் கடன் வரை அனைத்து சுமைகளையும்,குறைக்கப்பட்ட சம்பளத்தில் சமாளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நடுத்தர வர்க்கம் தள்ளப்படுவதை வேதனையுடன் ஒரு பக்கம் சொன்னால், 'இங்க வேலையே போச்சு; சம்பளத்தை குறைச்சத பத்தி பேசுறீங்களே' என்று கலங்குபவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளை தேட வேண்டியுள்ளது.
மாதாமாதம் ஒன்றாம் தேதியானால் சம்பளம் என்ற நிலையில் இருப்போருக்கே இந்த நிலைமை இருந்தால், தான் தயாரிக்கும் பொருள் விற்றால் தான் சோறு என்ற நிலையில் இருப்பவர்களை என்னவென்று சொல்வது? அதுவும் அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் ஆடம்பரப் பொருட்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களின் நிலை.....?
ஆம்! தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் தயாரிப்பவர்களின் நிலை, சொல்லி விளக்க முடியா நிலையில் உள்ளது. ஊரடங்கிற்கு பிறகு அவர்களது வாழ்வாதாரம் எந்தளவுக்கு படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை மாநில அரசுக்கும், நடுவண் அரசுக்கும் கொண்டுச் சென்று காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
தஞ்சாவூர் என்றால் தலையாட்டி பொம்மை என்ற மேலோட்டமான எண்ணமே பலருக்கும் உள்ளது. அதாவது, போலீஸ் என்றாலே 'ஏட்டய்யா' என்பதும், பத்திரிகையில் பணிபுரிகிறார் என்றாலே 'ரிப்போர்ட்டர்' தான் என்று எண்ணுவதை போல.
தஞ்சை மண்ணில் மட்டுமே தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள் என்பது தலையாட்டி பொம்மையைத் தாண்டியும் உள்ளது. முதலில் அவை என்னென்னவென்பதை இங்கே பட்டியலிடுகிறோம்.
தஞ்சை ஓவியம்,
தஞ்சை கலைத்தட்டு,
தஞ்சை கண்ணாடித் தட்டு,
தஞ்சை வீணை,
நெட்டி வேலை,
தலையாட்டி பொம்மை,
தஞ்சை வாஞ்சையுடன் பிரசவிக்கும் இந்த கைவினைப் பொருட்கள் ஒவ்வொன்றின் சிறப்பு குறித்தும், ஊரடங்கு காலத்தில் அதன் தொழில் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, பாரம்பரியமிக்க தஞ்சாவூர் அரண்மனையில் அமைந்துள்ள 'தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழிற் சங்கத்திற்கு' நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் டீம் சென்றது.
ஒவ்வொரு குடிசைத் தொழிலாளியும் முதலீடு போட்டு உழைத்து தத்ரூபமாக உருவாக்கிய படைப்புகள் ஒவ்வொன்றும் கேட்பாரற்று இருந்ததை நம்மால் காண முடிந்தது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தஞ்சை ஸ்பெஷல் படைப்புகள் குறித்தும், அது ஊரடங்கு காலத்தில் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
தஞ்சை ஓவியம்:
தஞ்சை ஓவியம் என்பது பாரம்பரிய சிறப்புப் பெற்றது. இதன் சிறப்பை வேறு எங்கும் நீங்கள் காண முடியாது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், பலரும் வணங்கும் கிருஷ்ணர் ஓவியம் என்பது பண்டைய காலத்தில் இப்படித் தான் வரையப்பட்டது.
கிருஷ்ணரின் உருவம் முதன் முதலாக இப்படியாகத் தான் வரையப்பட்டது. அதன் பிறகே, இன்று நாம் காணும் வெவ்வேறு வடிவங்களில் கிருஷ்ணர் உருப்பெற ஆரம்பித்தார். ஆனால், பண்டைய கால கிருஷ்ணர் என்றால் இப்படித் தான் இருப்பார்.
பால கிருஷ்ணன் தங்க சிம்மாசனத்தில் கையில் வெண்ணெய் பானையுடன் அமர்ந்திருப்பார். இந்த ஓவியத்தில் நகைகள், துணி மற்றும் கிரீடம் ஆகியவை பொன்னால் செய்யப்பட்டிருக்கும்.
இன்றும் பலரும், தஞ்சை 'வெண்ணெய் தாழி கிருஷ்ணரை வரைந்து கொடுங்கள் என்று கேட்பது வழக்கம்.
இந்த ஓவியங்கள் 2 லட்சம், 3 லட்சம், 4 லட்சம் வரை கூட விற்பனை செய்யப்படுகின்றன.
தஞ்சாவூர் ஓவியங்கள் 16ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரபலமானவை. சோழப் பேரரசர்களின் காலத்தில் இவை தோன்றின. இதில் தங்கம் பயன்படுவதால் இது மிகவும் பிரபலம். தமிழ்நாட்டில் மராத்தியர்கள் படையெடுத்தபோது பல்வேறு ஓவியர்களும் கலைஞர்களும் அங்கே இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் ஆட்சியின் கீழ் இந்த ஓவிய முறை தழைத்தது.
தஞ்சாவூர் ஓவியம் முழுவதும் கைகளால் வரையப்படுவது. இதில் எந்த இயந்திரமும் பயன்படுவதில்லை.
ஒரு தஞ்சாவூர் ஓவியத்தை உருவாக்க, அதன் உருவப்படம் முதலில் ஒரு துணியில் வரையப்படும். அதன் பின்னர் இந்த துணியானது ஒரு மரச்சட்டத்தில் ஒட்டப்படும்.
வரலாற்று ரீதியாக இந்த மரச்சட்டம் பலா மரத்திலிருந்து உருவாக்கப்படும். இந்நாட்களில் மாற்றாக ப்ளைவுட் பயன்படுகிறது.
இந்த ஓவியத்தாள் மீது சுண்ணாம்புக்கல்லால் ஆன பூச்சு பூசப்படுகிறது. இது இணைக்கும் ஊடகமாக செயல்படுகிறது. காய்ந்த பிறகு, இந்த ஓவியத்தை சுற்றி அடர் பழுப்பு நிறமோ அல்லது கறுப்பு வண்ணமோ பூசப்படும். அதன் பின்னர் பிரகாசமான நிறங்களால் வண்ணம் தீட்டப்படும்.
இந்த ஓவியங்களில் நுட்பமான தூரிகையால் வளைவுகள் தீட்டப்படுவதுடன் வணங்கக்கூடிய உருவங்களும் உள்ளன. இந்த ஓவியத்தின் வாழ்விற்கும் ஆழமான தன்மைக்கும் தங்கம் உயிரூட்டுகிறது. பொதுவாக இந்த ஓவியங்களில் தங்கத் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சுத்தமான தங்கம் பயன்படுத்தப்படும்போது அந்த ஓவியம் அற்புதமான காட்சி விருந்தாக உருவாகிறது. தங்கத்தின் பயன்பாடு இந்த ஓவியத்தில் அதிகமாக இருப்பதால், இந்த ஓவியம் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது.
இந்த ஓவியத்தின் பளபளப்பு 80-100 ஆண்டுகள் வரை நீடிக்கும். ஏனெனில் சுத்தமான தங்கம் எப்போதும் மங்குவதில்லை.
கொரோனா லாக் டவுனுக்கு பிறகு, தஞ்சை ஓவியங்களின் விற்பனை முற்றிலும் சரிந்துள்ளது.
கொரானாவுக்கு முன்பு, ஆண்டுக்கு சராசரியாக 12 லட்சம் வரை தஞ்சை பெயிண்டிங் வியாபாரம் நடைபெறும். அதாவது, மாதாமாதம் குறைந்தது 1 லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும்.
மார்ச் 2020 முதல் ஜுலை.8 2020 வரை மொத்தமாகவே நடந்திருக்கும் வியாபாரம் ரூ. 44,000 மட்டுமே.
தஞ்சை கலைத்தட்டு:
தஞ்சாவூர் கலைத்தட்டு இரண்டாம் சரபோஜி மன்னரால் மராட்டியர் ஆட்சிக் காலத்தில் (1777-1832) அறிமுகப்படுத்தப்பட்டது. விழாக்களின் போது பரிசுப்பொருள் வழங்குவதற்காக வட்டமான தட்டுபோல இது 1819-ம் ஆண்டு தஞ்சையை சேர்ந்த கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த தட்டு பல்வேறு கலை நுணுக்கங்களுடன் செய்யப்பட்டது.
இந்த கலைத்தட்டு செய்ய அரக்கு, பித்தளை, செம்பு, சுத்தமான வெள்ளி போன்ற மூலப்பொருட்கள் தேவை. இந்த தட்டுகளை தயாரிக்க உளி, சிற்றுளி, கருப்பு அரங்கு ஊற்றி மரப்பலகை, உருவம் தயாரித்த ஈய அச்சு ஆகியவை தேவைப்படும். இந்த ஓவியத்தட்டின் அடித்தட்டு பகுதி 2 பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதன்மையான வடிவமைப்பு வட்டமான உலோகத்தட்டையும், அதன்பின்பு 2-வது வடிவமைப்பையும் கொண்டது. வெள்ளித்தகட்டில் சிற்பம் செதுக்கப்படுகிறது.
இந்தத்தட்டு முதலில் மயில், கோபுரம், தாமரை, நடராசர், பதஞ்சலி, தாமரைபூவின்மேல் நிற்கும் பார்வதி போன்ற வடிவங்களில் தயாரிக்கப்பட்டது. பின்னர் நாளடையில் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தலைவர்களின் முகம் பதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப தற்போது அரசியல் கட்சி தலைவர்களின் உருவம், கம்பெனி லோகோ, விளையாட்டு போட்டிகள் தொடர்பான படம் போன்றவையும் கலைத்தட்டுகளில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கலைத்தட்டுகளை விரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கலைத்தட்டுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இந்த கலைத்தட்டுகளை அரக்கு பலகை, சுத்தமான வெள்ளி, தாமிரத்தகடு போன்ற உலோகங்களை கொண்டும் செய்து வருகிறார்கள். மாமன்னனன் சரபோஜி காலத்திற்கு பிறகு அழியும் நிலையில் இருந்தது இந்த கலை. இதனை செய்து வந்தவர்கள் கூட வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த கலைக்கு தமிழக அரசு, பூம்புகார் நிறுவனம் மூலம் புத்துயிர் ஊட்டியது. முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் இந்த கலைத்தட்டுகளை செய்து வந்தனர். பின்னர் தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் சார்பில் இந்த கலைத்தட்டுகளை செய்வதற்கு என்று 1973-ம் ஆண்டு கலைக்கூடம் தயாரிக்கப்பட்டு தற்போது செய்யப்பட்டு வருகிறது. இந்த கலைக்கூடத்தில் பல்வேறு நபர்களுக்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
5 இஞ்ச் முதல் 36 இஞ்ச் வரை இந்த கலைத்தட்டுகள் தயாரிக்கப்படுகிறது. ரூ.450 முதல் ரூ.50 ஆயிரம் வரை இந்த கலைத்தட்டுகள் விற்பனை ஆகிறது. வழக்கமாக செய்யப்படும் வெள்ளிப்பொருட்களில் செம்பு போன்றவை கலப்படம் செய்யப்படும். ஆனால் கலைத்தட்டுகளில் உள்ள வெள்ளி சுத்தமான வெள்ளி ஆகும். இந்த கலைத்தட்டுகள் செய்யப்பட்டு 200 ஆண்டுகளை எட்டும் நிலையில் உள்ளது.
முன்பு வட்ட வடிவில் மட்டும் தயாரிக்கப்பட்டது. தற்போது சதுரம், முக்கோணம் வடிவிலும் கலைத்தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் கலைப்பொருளாக பயன்படுத்தப்பட்ட தட்டுகள் தற்போது தாம்பூலம், வட்ட வடிவிலான தட்டு போன்றவைகளாகவும், வீட்டு, விசேஷ நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதற்கான அலங்கார பொருளாகவும் உருமாறி வருகின்றன. முன்பு கைகளாலேயே செய்யப்பட்ட இந்த தட்டு தற்போது சில தொழில்நுட்பங்களுக்கு எந்திரங்களையும் பயன்படுத்துகின்றனர்.
கலைத்தட்டு தயாரிப்பு, பயன்பாடு குறித்து நமக்கு விளக்கிய தஞ்சை Art Plate Workers சொசைட்டியின் தலைவர் ஓம் பிரகாஷ், தற்போது தொழில் நலிவடைந்திருப்பது குறித்தும் நம்மையுடன் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.
"தஞ்சை Art Plate சொசைட்டியில் மட்டும் 247 பேர் மெம்பர்களாக உள்ளனர். கலைத்தட்டு தொழில் வியாபாரம் நன்றாகவே சென்றுக் கொண்டிருந்தது. ஆனால், கொரோனாவுக்கு பிறகு டூரிஸம் மூடப்பட்டதால், எங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. வருஷத்துக்கு 25 லட்சத்திற்கு நாங்கள் வியாபாரம் செய்வோம். கொரோனாவுக்கு பிறகு, இந்த நான்கைந்து மாதங்களில் வெறும் 17,000-க்கு தான் வியாபாரமே நடந்துள்ளது. எங்கள் சொசைட்டி மெம்பர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் எண்ணுகிறோம். ஆனால், சுத்தமாக வியாபாரம் நடக்காமல் என்ன செய்வது?
இது குறித்து அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளோம். அவர் ஏதாவது, நிதியுதவி செய்தால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
தஞ்சை கண்ணாடித் தட்டு:
கண்ணாடித் தட்டு தஞ்சையில் மட்டுமே செய்யப்படும் பொருளாகும். பூஜைக்காகவும், கல்யாண வரவேற்புக்காகவும் பயன்படுத்துவார்கள்.
இந்த கண்ணாடி கலைத்தட்டோடு சேர்ந்தது தான் 'பருப்புக் தேங்காய் கூடு' என்பது.
இது ஐயங்கார்கள் சீதனம் கொடுக்கும் போது, கடலைப் பருப்பு, வெள்ளம், எள்ளு, போன்றவற்றை இதில் அடைத்து வைத்து, இதையும் சீதனமாக கொடுப்பார்கள்.
இதன் விலை ரூ.150 தொடங்கி ரூ.800 வரை உள்ளது.
தஞ்சை வீணை:
தமிழகத்தில் தஞ்சையை தவிர, வேறு எங்கேயும் நீங்கள் வீணைத் தயாரிப்பை பார்க்க முடியாது. முழுக்க முழுக்க பிரத்யேகமாக தஞ்சையில் மட்டுமே தயாரிக்கப்படும் மதிப்பு மிக்க பொருள் இந்த வீணை.
தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கர் காலத்தில், கி.பி 1614 - 32ம் ஆண்டுகளில், தஞ்சாவூர் வீணை தயாரிப்பு துவங்கியது. அனைத்து ராகங்களையும், ஒரே வீணையில் எளிமையாக வாசிக்க, இந்த இசைக்கருவி உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் நகரம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதியில், தஞ்சாவூர் வீணை தயாரிக்கும் பணியில், 150 கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு, 2,000 வீணைகள் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணைகள், இந்தியா மட்டுமல்லாது, பிரான்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதற்கு ருத்ர வீணை, ஏகாந்த வீணை, ஒட்டு வீணை என பல பெயர்கள் உள்ளன.
17-ம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கர் (1600- 1645) காலத்தில்தான் தற்போது நாம் காணும் வடிவத்தை வீணை அடைந்தது. கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப் பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை. இதை சரஸ்வதி வீணை அல்லது ரகுநாத வீணை எனவும் கூறுவதுண்டு.
பல மாநிலங்களில் வீணை உருவாக்கப்பட்டாலும் தஞ்சாவூரில் தயாராகும் வீணை தனித்தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. எனவே, மத்திய அரசு இதற்கு 2010-ம் ஆண்டில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
தஞ்சாவூர் வீணை செய்வதற்கு 40 வயதான பலா மரத்தின் அடி மரம் பயன்படுத்தப்படுகிறது. தஞ்சாவூர் வீணையின் எடை 7 கிலோ முதல் 8 கிலோ வரைதான் இருக்கும். எடை குறைவான வீணை என்பதே இதன் தனிச் சிறப்பு. இந்த வீணையில் நடுவில் உள்ள தண்டு போன்ற பகுதி தண்டி எனப்படும். இதன் வலது பக்கம் குடமும், மற்றொரு முனையில் (இடது புறம்) யாழியின் முகமும் அமைந்திருக்கும். யாழி முகத்துக்கு அருகில் உருண்டை வடிவில் அமைந்திருப்பது சுரைக்காய் எனப்படுகிறது.
வீணையின் குடம் போன்ற பகுதியைச் செய்ய பலா மரத்தை ஒரு பானையின் தடிமன் அளவுக்கு குடைந்து கொள்வார்கள். இதன் உள்ளே வெற்றிடமாக இருக்கும். இதன் மேல் பலகையில் பல ஒலித்துளைகள் போடப்பட்டிருக்கும். வீணையின் மிக முக்கியமான பாகமே பானை போன்ற குடம்தான். கம்பிகளை மீட்டும்போது இக்குடத்தில் உள்ள துளைகள் வழியாகத்தான் இசை வெளிப்படும். குடம் மரத்தில் இருப்பதால் இசை நேர்த்தியாக வெளிப்படுகிறது.
மேலும் வீணையின் மேல் பலகையில் மாடச்சட்டம், பிரடைகள், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், மெட்டுகள், குதிரைகள், லங்கர், நாகபாசம், தந்திகள் என பல நுட்பமான பாகங்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இது ரூ.16,000 முதல் ரூ.40,000 வரை விற்கப்படுகிறது.
இங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும், ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து தஞ்சாவூர் இசைக்கருவிகள் செய்வோர் தொழில் கூட்டுறவு சங்கத் தலைவர் பி.ஸ்ரீனிவாசன் நம்மிடம் பேசுகையில், "சென்னையில் வீணை கிடைத்தாலும், பெரும்பாலானோர் தஞ்சை வந்து தான் வீணை வாங்குவார்கள். அவ்வளவு தரம் வாய்ந்தது நமது தஞ்சை வீணை தயாரிப்பு.
கொரோனா காலத்திற்கு பிறகு, இதுவரை மொத்தமாகவே ஒரேயொரு வீணை தான் விற்பனை செய்யப்பட்டுள்ளது, கடந்த நான்கைந்து மாதங்களில், ஒரேயொரு வீணையை மட்டுமே விற்றிருக்கிறோம். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள், எங்கள் வாழ்வாதாரம் எப்படி பாதிக்கப்பட்டுள்ளது என்று. அரசு தான் எங்கள் நிலையை உணர்ந்து, உதவி செய்ய வேண்டும்" என்கிறார் வருத்தத்துடன்.
தஞ்சை நெட்டி வேலை:
தஞ்சை மண்ணுக்கே உரிய ஒரு கலைதான் நெட்டிச் சிற்பக்கலை. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய, அற்புத அழகு மிளிரும் நெட்டிச்சிற்பங்கள் இன்றைக்கும் பல வீடுகளிலும் அலுவலகங்களிலும் வரவேற்பறையை அலங்கரிக்கின்றன. பிளாஸ்டிக் பொம்மைகளையும் எலெக்ட்ரானிக்ஸ் பொம்மைகளையும் பார்த்துப் பழகிய இன்றைய தலைமுறைக்கு, நெட்டிச் சிற்பங்களைப் பற்றித் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
நாம் விரும்பும் வடிவத்தைத் தந்தத்தில் செய்ததுபோல வெள்ளைச் சிற்பமாக்கி, கண்ணாடிப்பேழைக்குள் அடக்குவதுதான் நெட்டிச் சிற்பக்கலை எனலாம்.
இதுகுறித்து தஞ்சையைச் சேர்ந்த நெட்டி கைவினைப் பொருட்களுக்காக தமிழக அரசின் பூம்புகார் விருது பெற்ற ஆர்.ராதா நம்மிடம் பேசுகையில், "நெட்டி என்பது. குளத்தில் விளையும் ஒரு தாவரம். மஞ்சள் நிறப்பூவும், நெல்லி இலை மாதிரியான இலையும் இருக்கிற இந்தத் தாவரத்துக்கு, தாமரைத்தண்டு போலவே பச்சை நிறத்தில் தண்டு இருக்கும்.
தண்டில் கணுவுக்குக் கணு ரோமம் போன்ற வேர்களும் இருக்கும். தண்டின் நடுவில் சிறியதாக துவாரம் இருக்கும். நான்கிலிருந்து ஐந்தடி உயரத்துக்கு வளரும். ஜனவரி மாதத்தில் தான் இந்தத் தண்டை அறுவடை செய்ய முடியும். குளத்தில் முழங்கால் அளவுக்குத் தண்ணி இருக்கும் போது உள்ளே இறங்கி, வேர்ப்பகுதியில் கொஞ்சம் இடம் விட்டுட்டு வெட்டி வர வேண்டும். தண்டு கால் அங்குலத்திலிருந்து நான்கு அங்குலம் வரை தடிமனாக உருண்டை வடிவத்தில் இருக்கும். வெட்டும்போது பச்சை நிறத்தில் இருக்கிற தண்டு காய வைத்ததும் பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். தண்டுக்குள் இருக்கும் சக்கை வெள்ளை நிறத்தில் இருக்கும். அந்தச் சக்கையில தான் நெட்டிச்சிற்பங்கள் செய்யப்படுகிறது.
டெல்டா பாசனப் பகுதிகளில் இருக்கும் ஏரி, குளம், குட்டைகளில் விளையும் நெட்டிக்கு, கிடை, சடை, கிடச்சின்னு ஊருக்கு ஒரு பேர் இருக்கும். முன்னர் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கும்பகோணம் சுற்றுப் பகுதிகளில் அதிகமாக நெட்டி விளைந்தது. இப்போது மழை இல்லாமல் குளம், குட்டையெல்லாம் காய்ந்துவிட்டதால், அஸ்ஸாம், ஆந்திரான்னு வெளி மாநிலங்கள்ல இருந்து தான் நெட்டி வரவழைக்கிறோம். அதனால, விலையும் ரொம்ப அதிகமாயிடிச்சு. ஜனவரி மாசமே நெட்டியை வாங்கிப் பத்திரப்படுத்தி வச்சிடணும். இல்லாட்டி அடுத்த வருஷம் வரை காத்துட்டிருக்கணும்.
இரண்டாம் சிவாஜி காலத்தில், தஞ்சை அரண்மனைக்கு அவரின் தூதுவர் வந்திருக்கிறார். அப்போது, அரண்மனையில் கிளி, கரும்பு ஆகியவை நெட்டி வேலைப்பாட்டில் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, தூதுவர் இதுகுறித்த விசாரிக்க, அரண்மனையில் நெட்டி பணி குறித்து விளக்கம் அளித்திருக்கின்றனர்.
சிலப்பதிகாரத்துல நெட்டி பத்திக் குறிப்பிருக்கிறது. அதில், `உள்ளீரம் பெற்ற கிடையின் போல்’னு நெட்டி பத்தி ஒரு வரி வரும். நெட்டிக்குக் கிடைங்கிற பேர் இருக்கிறதால, சிலப்பதிகாரக் காலத்துலயே நெட்டி இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது. அதேபோல், ராஜராஜ சோழனோட அரண்மனையில நெட்டிப்பூக்கள் வச்சி அலங்கரித்திருந்ததாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும், கிட்டத்தட்ட இரண்டு, இரண்டரை லட்சம் அளவுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், கொரோனாவுக்கு பிறகு ஒரு பீஸ் கூட இதுவரை விற்பனையாகவில்லை. டோட்டலாக ஜீரோ தான். கொரோனா பயம் காரணமாக வேலையாட்கள் கூட வரமாட்டேங்குறாங்க.
அடியோடு பாதிக்கப்பட்டிருக்கும் எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க, அரசு எங்களுக்கு ஏதாவது உதவி செய்தால் அது பெரும் ஆறுதலாக இருக்கும்" என்கிறார்.
நெட்டி வேலைக்கும் தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை தலையாட்டி பொம்மை:
தஞ்சாவூர் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தான். உலகம் முழுவதும் மவுசு இருந்ததால் தலையாட்டி பொம்மை தயாரிக்கும் தொழில் முன்பு கொடிகட்டி பறந்தது. ஆனால் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த நவீன விளையாட்டு பொருட்களால், தலையாட்டி பொம்மை தயாரிப்பு தொழில் நசிந்து போனது. இதனால் பரம்பரை பரம்பரையாக நடந்து வந்த தலையாட்டி பொம்மை தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
தலையாட்டி பொம்மை தஞ்சைக்கு அருகே உள்ள மாரியம்மன் கோவில் என்கிற ஊரில் தான் தயாரிக்கப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக சில குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபடுகின்றன.
தலையாட்டி பொம்மையின் தயாரிப்பு குறித்தும், தற்போது அதன் வீழ்ச்சி குறித்தும் நம்மிடம் மண் மற்றும் காகித பொம்மை தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வரும் மாரியம்மன் கோவிலைச் சேர்ந்த எஸ். பூபதி பேசுகையில்,
தஞ்சையில் 19 ஆம் நூற்றாண்டில் இப்பொம்மைகள் உருவாக்கப்பட்டன. சரபோஜி மகாராஜாவின் காலத்தில் இப்பொம்மைகள் உருவாக்கும் கலைஞர்கள் சிறப்புடன் மதிக்கப்பட்டனர். முன்பு தஞ்சையில் மட்டும் சுமார் 150 குடும்பங்கள் தலையாட்டி பொம்மை தயாரிப்பை தொழிலாகக் கொண்டிருந்தனர். இப்போது, மொத்தமாகவே நான்கைந்து குடும்பங்கள் மட்டுமே இதனை செய்கிறோம். இனி அடுத்த 20-30 ஆண்டுகளில் இந்த தொழிலும், கலையும் இருக்குமா என்றே தெரியவில்லை. தஞ்சையின் பாரம்பரிய அடையாளத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் உள்ளது" என்று கூறியவர் பிறகு தயாரிப்பு குறித்து விளக்கினார்.
தஞ்சை தலையாட்டி பொம்மை உருவாக்கத்தில் முதலில் அடிப்பாகம் தயரிக்கப்படுகிறது.
வளைவான அடிப்பாகமுள்ள கிண்ணம் போன்ற ஒரு அமைப்பில் தூய களிமண் நிரப்பி அது இரண்டு நாட்கள் நிழலிலும் பின் இரண்டு நாடகள் வெயிலிலும் உலர வைக்கப்படுகிறது.
நிரப்பப்படும் களிமண்ணுக்கேற்பவே பொம்மைகள் செங்குத்தாக அமைகின்றன. பின் மேல்பாகம் தயாரிக்கப்பட்டு அடிப்பாகத்துடன் இணைக்கப்படுகின்றன. உப்புத்தாளால் நன்கு தேய்க்கப்பட்டு கண்கவர் வண்ணங்கள் அடிக்கப்பட்டு உலர வைக்கப்படுகின்றன.
புவிஈர்ப்பு விசை செயல்பாட்டிற்கேற்ப செங்குத்தாக இயங்கும் வகையில் இவை அமைகின்றன.
அக்காலத்தில் களிமண்கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மைகள் தற்போது ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ், காகிதக்கூழ், மரத்தூள் ஆகியவை கொண்டு செய்யப்படுகின்றன. உடல் பாகங்கள் தனித்தனியே உருவாக்கப்பட்டு அவை ஒரு கம்பியில் பொருந்தி ஆடும்படி உருவாக்கப்படுகின்றன.
கொரானாவுக்கு பிறகு, தலையாட்டி பொம்மை விற்பனை சுத்தமாக நடைபெறவில்லை. ஒரு ரூபாய்க்கு கூட போனியாகவில்லை. வட்டிக்கு வாங்கி தான் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்களும் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக இருக்கிற நகைகளை அடமானம் வைத்து காலம் தள்ளி வருகிறோம். எங்களுக்கு வேறு தொழிலும் தெரியாது, வருமானமும் கிடையாது.
கடந்த ஆண்டு, 4-5 லட்சத்திற்கு வருமானம் கிடைத்தது. ஆனால், இந்தாண்டு இதுவரை ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.
என்னைப் போன்ற பல்வேறு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு குறைந்தபட்சம் குடும்பத்தை நடத்தும் அளவுக்காவது அரசு ஏதாவது நிதியுதவி அளித்தால் நன்றாக இருக்கும். அரசு மட்டுமல்ல, எங்கள் மேல் கருணை கொள்ளும் தனியார் அமைப்புகளும் உதவி செய்தால் நன்றாக இருக்கும். எங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நலிவடைந்த தொழிலாளர்களுக்கும் உதவி புரிந்தால் நன்றாக இருக்கும்" என்று முடித்தார்.
இதுகுறித்து தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய அரச குடும்பத்தின் சம்பாஜி ராஜா போன்ஸ்லே-வை அவரது அரண்மனையிலேயே சந்தித்தோம். இவர் தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழிற் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
நம்மிடம் பேசிய ராஜா சம்பாஜி, "அனைத்துத் துறைகளும் இந்த கொரோனா வைரஸால் வீழ்ச்சி அடைந்துள்ளன. அரசாங்கத்திடம் போதுமான நிதி இருந்தால் தான், இதுபோன்று வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிக்க முடியும். அரசே இப்போது நிதிச்சிக்கலில் இருப்பது எங்களுக்கு தெரியாமல் இல்லை.
வேறு எந்தத் தொழிலும் தெரியாத எங்கள் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கு, இந்த காலக்கட்டம் மிகவும் கொடுமையானதாகும். அவர்கள் அனைவருக்கும் நான் தனிப்பட்ட ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், எவ்வளவு நாட்களுக்கு அதுபோன்றே செய்ய முடியும்? இந்த கொரோனா பரவல் எப்போது முடியும் என்றே தெரியாத போது, மாதாமாதம் நூற்றுக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்று தெரியவில்லை.
அரண்மனையில் பணிபுரியும் அனைவரையும், கொரோனா பயம் காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டோம். அதையும் மீறி, தினம் இவர் மட்டும் வந்து செல்வார்.
எச்சரிக்கையை மீறியும் வருகிறார் என்பதால், தினம் அவருக்கென்று ஏதாவது ஒரு தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இதுபோல் எத்தனை பேருக்கு கொடுக்க முடியும்?
ஆகையால், முற்றிலும் கையறு நிலைக்குச் சென்ற கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் அரசு ஏதாவது முயற்சி எடுத்து உதவி செய்ய வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன்" என்றார்.
தஞ்சை புகழ் கைவினைப் பொருட்களை நீங்கள் தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்தும் வாங்கலாம். அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 04362 271586 மற்றும் 88706 84159
(அனைத்து தகவல்கள் மற்றும் விற்பனை விபரங்களின் ஆதாரம்: தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு குடிசைத் தொழிற் சங்கம் மற்றும் தஞ்சாவூர் கலைத்தட்டு தொழிலாளர்கள் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கம்)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.