தொடக்கக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பு அண்மையில் ஒரு கள ஆய்வை நடத்தியது. அதில், ‘பள்ளிக்குழந்தைகளில் 68 சதவீதம் பேர் கொண்டுபோன குடுவைத்தண்ணீரை அப்படியே முழுவதுமாக வீட்டுக்குக் கொண்டுவருகின்றனர்; பள்ளிகளில் அவர்கள் தண்ணீர் குடிப்பதே இல்லை’ என்பது கண்டறியப்பட்டது.
தினமும் எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்று மழலைப்பருவம் முதலே நம்முடைய மனதிற்குள் பொதியப்பட்டுள்ளது. உயிரைக்காக்கும் இந்த வழிமுறையைக் கடைப்பிடிப்பது, அன்றாடம் செய்யவேண்டியவை பட்டியலிலும் தவறாமல் இடம்பிடித்திருக்கிறது. திறன்வாய்ந்த புதுப்புது குடிநீர் சாதனங்களின் வருகையை அடுத்து, தண்ணீர் குடிப்பதன் அளவை அதிகரிப்பதை, செயல்படுத்துவதைவிட சொல்வது இன்னும் எளிதாகி இருக்கிறது. பெரியவர்களான நாம் இத்தகைய அலட்சியத்தால் பாதிக்கப்பட்டிருக்கையில், எப்போதாவது திடீரென, உங்கள் குழந்தை பள்ளியில் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்கிறதா என நினைத்துப்பார்த்தது உண்டா?
உங்கள் குழந்தையின் தண்ணீர்க் குடுவையை நிரப்பித்தருகிறீர்களா, எனில், ஆறு மணி நேரம் கழித்து அதைத் தொட்டுக்கூடப்பார்க்காமல் வீட்டுக்குக் கொண்டுவரவா அப்படி செய்கிறீர்கள்? தண்ணீருக்காக மணியை ஒலியுங்கள் என்கிற பரப்புரையை மேற்கொண்ட, ’தொடக்கக்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின்’ கள ஆய்வில், 68 சதவீதப் பள்ளிக் குழந்தைகள் தண்ணீர்க் குடுவையை அப்படியே வீட்டுக்குக் கொண்டுவருகின்றனர்; அதாவது, பள்ளியில் அவர்கள் தண்ணீரைக் குடிப்பதே இல்லை என்பது கண்டறியப்பட்டது.
ஐந்து முதல் எட்டு வயதுவரையிலான குழந்தைகள் அன்றாடம் ஐந்து டம்ளர் தண்ணீராவது குடிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளபோதும், யதார்த்த நிலை கொஞ்சம் மாறுபட்டதாகவே இருக்கிறது. பள்ளி நேரத்தில் குழந்தைகளுக்கு நீர்த்தன்மைக் குறைவதால், அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வருவது, தலைசுற்றல், சோர்ந்துவிழுவது ஆகியற்றுடன் உடல்திறன் குறைபாடும் ஏற்படுகிறது.
இவை இப்போதைக்கு இலேசான நீரிழப்பின் சாதாரண அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால், அடுத்தகட்டமாக சிறுநீர்த்தாரைத் தொற்று, சிறுநீரகக் கற்கள் போன்ற நீடித்த நலப்பிரச்னைகளாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளது.
உடலின் வெப்பநிலையை தண்ணீர் ஒழுங்குபடுத்துகிறது; செல் கட்டமைப்பைத் தக்கவைக்கிறது; ஊட்டச்சத்துகளை உடலில் சேரவைக்கிறது என்பதால், எப்போதுமே உங்கள் குழந்தை நீர்த்தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தை தாகமாக இருப்பதாக உணரும்போது, அதற்கு முன்னரே அது நீரிழப்பால் 2 சதவீத எடையை இழந்திருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் நம்புகின்றனர்.
உங்கள் குழந்தை தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க சில குறிப்புகள்
ஒரு பெற்றோராக உங்கள் குழந்தை தண்ணீர்குடிப்பதை அதிகரிப்பதற்காகப் போராடுகிறீர்கள் என்றால், அவர்கள் ஆரோக்கியமாகவும் நீர்த்தன்மையுடனும் இருப்பார்கள். அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்?
1. நீங்களே எடுத்துக்காட்டாக அமைவதன் மூலம் இதைத் தொடங்கமுடியும். அதை வழக்கமாகவும் ஆக்கிக்கொள்ளமுடியும். இதை நீங்கள் உணர்கிறீர்களோ இல்லையோ உங்கள் குழந்தை உங்களிடமிருந்து ஒவ்வொன்றையும் எடுத்துக்கொள்ளும். எனவே, தண்ணீர் குடிப்பதை உங்கள் குடும்பத்தின் வழக்கமாக ஆக்குங்கள்.
2. நீர்த்தன்மையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர்களிடம் பேசுங்கள். ஒரு முறை அவர்கள் உங்களைப் புரிந்துகொண்டுவிட்டால் அவர்களின் குடிநீரில் மூலிகைகளைச் சேர்த்தால் அவர்களின் சுவைமொட்டுகள் மெய்யாகவே கொண்டாட்டம்போடும்.
3. ஒரு பெற்றோராக, தண்ணீர் தொடர்பாக உற்சாகத்தை ஊட்டும்போது, அவர்கள் நாள் முழுவதும் முன்னைவிடக் கூடுதலாக பருக விரும்புவார்கள். அவர்களுக்குப் பிடித்தமான கேலிச்சித்திரம் தண்ணீர்க் குடுவையின் மீது இருந்தால், அவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை ஊக்குவிப்பதாக இருக்கும். சுமார் 18 சதவீதம் பெற்றோர் தங்களின் குழந்தைகள் ஆரோக்கியமாக நீர்த்தன்மையுடன் இருக்கச்செய்ய பல தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் பிரபலமாகும் தண்ணீர் மணியொலி முனைப்பு
பள்ளியில் மாணவர் கூடுகைக்காகவும் அவ்வப்போதான இடைவெளிக்காகவும் மணி ஒலிப்பதை இதுவரை கேள்விப்பட்டிருப்போம். இப்போது, சில பள்ளிகளில் தனித்துவமாக தண்ணீருக்கான மணி ஒலிக்கப்படுகிறது.
அது என்ன என நீங்கள் கேட்கலாம்? பகல் வேளையில் குழந்தைகள் நீர்த்தன்மையுடன் இருப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீர் குடிப்பதற்கான புதிய முயற்சிதான் இது. கேரளத்த்தின் தொடர்ச்சியாக, இதுவரை, டெல்லி, பூனா, பெங்களூரு ஆகிய இடங்களில் 53 பள்ளிகளில் இம்முறை செயல்படுத்தப்படுகிறது.
ஒரு முறை பள்ளிக் கூட்டத்தில் நீரிழப்பால் குழந்தைகளுக்கு ஏற்படும் நலப்பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஒரு நாளைக்கு மூன்று முறை ’தண்ணீர் குடிக்கவேண்டிய தேவை உள்ளது’ என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த, தண்ணீருக்கான மணி ஒலிக்கப்படும். எவ்வளவு குடிக்கவேண்டும் என்பது குறிப்பிடப்படாவிட்டாலும், வகுப்பிலுள்ள ஒவ்வொருவரும் தண்ணீர் குடிப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்துவார்கள்.
இளமைக்காகக் கற்பியுங்கள்
ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பான குடிநீரை அருத்தும்நிலை இருக்கவேண்டும் எனும் ஐ.நா.வின் வழிகாட்டுதலின்படி தண்ணீருக்கான மணியொலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அசுத்தமாக இருக்கும் கழிப்பிடங்களைத் தவிர்ப்பதற்காக ஏராளமான குழந்தைகள் தண்ணீர் குடிப்பதையே தவிர்க்கின்றனர். இது, இன்னும் பள்ளிகளில் உரிய சுகாதாரம் பேணப்படுவதன் தேவையை அதிகப்படுத்துகிறது.
ஒரு பெற்றோராக, குழந்தைகள் இளமையாக இருப்பது குறித்து அவர்களுக்குக் கற்பிக்கவேண்டியது முக்கியம் ஆகும். அவர்களின் கற்றலையும் கவனத்தையும் மேம்படுத்துவதற்கு தண்ணீர் மணியொலியைக் கடைப்பிடிக்குமாறு அவர்களுக்கு மீண்டும் அழுத்தம்தரவேண்டும். ஆரோக்கியம் குறித்து செயல்படுத்திக்காட்டுவது, பாதிப்புகளை குணப்படுத்துவதைவிட சிறந்தது.
எழுத்தாளர், கேம்பிரிட்ஜில் உள்ள தாகூர் சர்வதேசப் பள்ளியின் முதல்வர்.
தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.