ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டு, படிப்பை பாதியில் நிறுத்தி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 16 வயது சிறுமையை அவருடைய பள்ளி தோழர்கள் மற்றும் தோழிகள் 12 பேர் சேர்ந்து கண்டுபிடித்து மீண்டும் பள்ளிக்கு சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, தான் 11 வயது சிறுமியாக இருந்தபோதே, 28 வயது ஆணுடன் குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்டது. ஒரே குடும்பத்தில் பெண் கொடுத்து பெண் எடுக்கும் வழக்கத்தால், தன் அண்ணனின் மனைவியின் குடும்பத்தில் உள்ள ஆணை திருமணம் செய்ய வேண்டிய கட்டாய நிலைமைக்கு அச்சிறுமி ஆளானாள்.
16 வயது வரை தன் வீட்டிலிருந்தே பள்ளிப் படிப்பை அச்சிறுமி தொடர்ந்து வந்தாள். ஆனால், சமீபத்தில் 16 வயதை அடைந்த உடன் அவள் தன் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.
இதனால், அச்சிறுமி பள்ளிக்கு வராததால் உடன் படித்த தோழர்கள் மற்றும் தோழிகள் 12 பேர் மிகவும் வருத்தமடைந்தனர். தங்களுடைய தோழியை கண்டுபிடித்து அவளை பள்ளியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் பயணிக்க ஆரம்பித்தனர்.
தங்களுடைய தோழியை கணவர் வீட்டிற்கு அனுப்பிவிட்ட தகவலறிந்து நண்பர்கள் அனைவரும் கோபமடைந்தனர். உடனேயே, அருகே உள்ள காவல் நிலையத்தில் தோழியை மீட்டுத்தர வேண்டும் என புகார் அளித்தனர். ஆனால், காவல் துறையினர் சிறுமியின் பெற்றோரின் வற்புறுத்தலால் நண்பர்களின் புகார் குறித்து கவனிக்கவே இல்லை. பெண்கள் நல ஆணையத்தைத் தொடர்பு கொண்டும் பயனில்லாமல் போனது.
இதனால், அவர்கள் மாவட்ட ஆட்சியர் சித்தார்த் மஹாஜனின் உதவியை நாடினர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட சிறுமியை கண்டறிந்து மீட்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, காவல் துறையினர் அச்சிறுமியின் கணவர் வீட்டைக் கண்டறிந்து அங்கு சென்றனர். பின்னர் சிறுமியை மீட்டு, மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.
இப்போது அந்த சிறுமி தன் திருமணத்தை செல்லாததாக்க ஜெய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். அச்சிறுமி மற்றும் அவளுடைய நண்பர்கள் அனைவரும் மேற்கொண்டு படிப்பைத் தொடர அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
தன் தோழி பள்ளிக்கு வராவிட்டால் அதை அப்படியே விட்டு தங்களது வேலைகளை இந்த சிறுபிள்ளைகள் பார்த்திருக்கலாம். ஆனால், தாங்களும் படிக்க வேண்டும், தன் தோழியும் படிக்க வேண்டும் என்ற நோக்கம் இந்த குழந்தைகளுக்கு வந்ததால் தான், குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி தனது அடுத்தக்கட்ட படிப்பை தொடர வழிவகுத்திருக்கிறது.
இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் குழந்தை திருமண எதிர்ப்பையும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் இன்னும் இன்னும் அழுத்தமாக உரைத்திருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.