வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்காக நான், எங்க அப்பா, அம்மா கொத்தடிமையா வேலை செய்ஞ்சுட்டு இருந்தோம். 5 வயசுல கொத்தடிமையா இருந்தேன். 15 வயசுல வீட்டை விட்டு போயிட்டேன். இனி நான் கொத்தடிமை கிடையாது. எங்க செங்கல் சூளைக்கு நான் முதலாளியா இருக்கேன் என்று பூரிக்கிறார் சிறகுகள் பிரிக்ஸ் உரிமையாளர் சின்னதம்பி….
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆயிரகணக்கான கொத்தடிமைகளில் ஒருவர் தான் சின்னதம்பி. 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் அல்பி வர்கீஸ் முயற்சியால் கொத்தடிமை தொழிலாளர்களை, செங்கல் சூளை உரிமையாளர்களாக மாற்றும் ஒரு தனித்துவமான முயற்சியை தொடங்கினார்.
இதுதொடர்பாக DW Tamil யூடியூப் சேனலில் வெளியான வீடியோ…
அப்போ படிக்கும் போது எனக்கு ஒரு 7,8 வயசு இருக்கும். சூளையில கரி உடைக்கிற வேலை. ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பளம். வாரக்கணக்கு பாத்தாக்கூட சரியான கூலி கொடுக்கமாட்டாங்க. தூங்குறதுக்கு, சாப்பிடக்கூட நேரம் இருக்காது. இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்ஞ்ச செங்கல் சூளையில, ஒரு நாள் அரசு அதிகாரி மூலமா தெரிவிக்கப்பட்டு, அரசாங்கம் மூலமா நாங்க மீட்டெடுக்கப்பட்டோம்…
மீட்டெடுத்து, வீட்டுல பாதி பேர் விட்டுட்டாங்க. அப்புறம் செங்கல் சூளை வேலைய விட்டுட்டோம். வேற வேலைக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கும்போது, கலெக்டர் அய்யாகிட்ட பெட்டிஷன் கொடுத்தோம்.
எங்களுக்கு செங்கல் உற்பத்தி செய்யத் தெரியும், அந்த தொழிலுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்தா நல்லா பண்ணுவோம்’ சொன்னோம்…
எங்க மேல நம்பிக்கை வச்சு இந்த செங்கல் சூளைய ஆரம்பிச்சு கொடுத்தாங்க.. என்றார் சின்னதம்பி….
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் அல்பி வர்கீஸ் கூறுகையில், திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் வரலாற்றுரீதியா கொத்தடிமை சிஸ்டம் இங்க பெரிய பிரச்சனையா இருக்கு. கடந்த 5 ஆண்டுகளை பொறுத்தவரைக்கும் 450 தொழிலாளர்களை நாங்க மீட்டெடுத்தோம்.
அப்படி இருக்கும் போது ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு சரியான வாழ்வாதாரம் கிடைக்கல இல்ல கஷ்டங்கள் இருக்குறது எங்களுக்கு தெரிய வந்தது…
அப்படி திருத்தணி பகுதியில வீரவநல்லூர், சுத்து வட்டாரத்துல இருக்கிற கிராமங்கள்ல இருந்து கிட்டத்தட்ட 100 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிறகுகள் பிரிக்ஸ் யூனிட் அமைத்துக் கொடுத்திருக்கோம்.
இதோட வெற்றிய பார்த்து நாங்க, சிறகுகள் 2 என்ற யூனிட் ஆரம்பித்து இருக்கோம்.
ஊரக வளர்ச்சித்துறை மூலமாக கட்டக்கூடிய பிரதம மந்திரி ஆவாஸ் யோஜானா வீடுகளுக்காக, நாங்க இந்த செங்கல் வாங்கிட்டு இருக்கோம்.
மாவட்ட நிர்வாகம் சார்பாக நாங்க இதுக்கு ஒரு 5 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கோம். 15 லட்ச ரூபாய் செலவுல ஒரு ஷெட், போர்வெல், மின்சாரம் போன்ற வசதிகள் செய்ஞ்சு கொடுத்திருக்கோம்..
குறைந்த விலையில குத்தகைக்கு நிலம் வாங்கி கொடுத்திருக்கோம். இது ரொம்ப வெற்றிகரமா போகுறது எங்களுக்கு நிறைய சந்தோஷம் கொடுக்குது, என்கிறார் மனநிறைவுடன்…
சிறகுகள் பிரிக்ஸ் உரிமையாளர் மஞ்சுநாதன் கூறுகையில், கொத்தடிமையா இருக்கும் போது காலையில மூணு மணிக்கு எந்திச்சு, பகல்ல 1 மணி வரை கல் அறுப்போம். அப்புறம் சூளையில போயி வேலை செய்வோம்.
முதலாளிங்க எங்களை ரொம்ப அடிமையா வச்சாங்க. இப்போ, நாங்க ஒரு முதலாளி மாதிரி இருக்கிறோம். எங்க வேலைய நாங்களே செய்யிறோம். நாங்களே தொழிலாளி, நாங்களே முதலாளி’ என்றார்.
முதலாளிங்களுக்கு தெரியாம ஸ்கூலுக்கு போனோம். தெரிஞ்சு போனா ஏதாவது வேலை செய்யலாம்ல. உங்க பையன் ஸ்கூலுக்கு போயி அப்படி என்ன பெரிய ஆளா ஆகப்போறோன்? உங்க ஜாதி என்ன அந்தளவுக்கு படிக்கவா வைக்குது? ஒரு நாலாவது, அஞ்சாவதோ படிக்க போறோன் அவ்ளோதானே? கேட்பாங்க என்று கண் கலங்கினார் சிறகுகள் பிரிக்ஸ்ன் மற்றொரு உரிமையாளர் பாஞ்சாலை….
எப்பவுமே நம்ம கூலி வேலைய செய்ஞ்சிட்டு இப்படியேதான் போயிடுவோமா கடைசி வரைக்கும்? அவுங்களமாதிரி நம்மளால தொழில் பண்ண முடியாதா? ஓனர் ஆக மாட்டோமான்னு மனசுக்குள்ள ஒரு கஷ்டம் இருந்தது.
அப்புறம் கலெக்டர் அய்யா, அரசு அதிகாரிங்க வந்து உங்களுக்கு நாங்க செங்கல் சூளை வச்சுக் கொடுக்கிறோம். நீங்க தான் அதுக்கு ஓனருன்னு சொல்லும் போது எங்களுக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்தது, என்று உணர்ச்சி பொங்க கூறினார் பாஞ்சாலை…
இப்போ நாங்க யாரும் அடிமை கிடையாது. அடிமையாவும் வேலை செய்றதில்லை. உண்ண உணவு, இருப்பிடம் இதெல்லாம் போதுமான அளவு இருக்கு. நாங்க திருப்தியா இருக்கோம். சந்தோஷமா இருக்கோம் என்று மனநிறைவுடன் முடிக்கிறார், சிறகுகள் உரிமையாளர் சின்னதம்பி….
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.