உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் சுவிட்சர்லாந்து நாட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. ஜெர்மெட் மற்றும் கிராசென் நகரங்களை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 494 மீட்டர் நீளம் கொண்ட இந்த நடை மேம்பாலத்தில் நடந்துகொண்டே இயற்கையை ரசிப்பதற்காகவே பயண விரும்பிகள், குறிப்பாக நடைபயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் சுவிட்சர்லாந்திற்கு செல்ல வேண்டும்.
ஆனால், உயரத்தைக் கண்டாலே மயங்கிவிடுவேன் என்பவர்கள் இந்த நடை மேம்பாலத்தில் பயணம் மேற்கொள்ளுதல் அவ்வளவு நல்லதல்ல. சுவிட்சர்லாந்தின் இயற்கை எழில் கொஞ்சும் மேட்டர்ஹார்ன், ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைந்திருக்கும் வெய்ஸ் ஹார்ன் இவற்றின் மனதை மயக்கும் அழகை இந்த நடைமேம்பாலத்தில் நடந்துகொண்டே சென்று ரசிக்க வேண்டும். சுவிட்சர்லாந்தில் மிக உயரமான மலையான ‘டாம்’ மலையின் உயரத்தையும் நாம் இந்த நடைமேம்பாலம் மூலம் கண்டு களிக்கலாம்.
தலைச்சுற்றல் அடிக்கடி ஏற்படுபவர்கள் நிச்சயமாக சுவிட்சர்லாந்து நடை மேம்பாலத்திற்கு செல்ல முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1,600 மீ மற்றும் 2,200 மீட்டர் வரை சுழன்று சுவிட்சர்லாந்தின் ஆழமான வெட்டு பள்ளத்தாக்குக்கு மேலே இந்த நடை மேம்பாலம் அமைந்துள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தரையில் இருந்து சுமார் 85 மீட்டர் உயரத்தில் இந்த நடை மேம்பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் 110 மீட்டர் உயரத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் மிக உயரமான மேம்பாலம் இல்லை. ஆனால், உலகிலேயே மிக நீண்ட நடை மேம்பாலம் என்ற சிறப்பு இதற்கு உண்டு. அடுத்த முறை சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொண்டால், நிச்சயம் இந்த நடை மேம்பாலத்திற்கு சென்றுவிடுங்கள்.