மகன் தாய்க்காற்றும் உதவி; பெண்ணாக மாறி தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தும் மகன்

“நான் இவ்வாறு செய்வதால் என்னுடைய அம்மா மகிழ்ச்சி அடைகிறார். அதனால் தான் தொடர்ந்து இதனை செய்து வருகிறேன். என்னிடம் எந்த ஆண் உடைகளும் இல்லை.”

நம்மை பெற்று வளர்த்த தாய்க்கு எதை செய்தும் நாம் ஒருபோதும் நன்றிக்கடன் செலுத்திவிட முடியாது. ஆனால், அவளுடைய கடினமான காலக்கட்டங்களில் அவரை விட்டு அகன்றுவிடாமல் உடன் இருப்பதே நாம் செய்யும் ஆகப்பெரும் நன்றிக்கடன்.

தன்னை வளர்த்த தாயின் அன்புக்கு இணையாக கடந்த 20 வருடங்களாக தன்னுடைய வெளித்தோற்றத்தை பெண் போல மாற்றி, அவருடைய அனைத்து கடின காலங்களிலும் உடன் உற்ற துணையாகி இருக்கிறார் சீனாவை சேர்ந்த ஒருவர்.

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள குய்லி எனுமிடத்தை சேர்ந்தவர்தான் அந்த அன்பின் மகன். கடந்த 20 வருடங்களுக்கு முன் அவரது தங்கை இறந்துவிடுகிறார். அதற்குப்பின், மகள் இறந்த சோகத்தில் அவருடைய தாய் மனநலம் பாதிக்கப்பட்டு அவருடைய செயல்கள் மாற ஆரம்பிக்கின்றன.

அன்றிலிருந்து தன் தாயின் மனநலம் மற்றும் உடல்நலத்தைப் பேணிகாக்க இறந்த தன் தங்கையை போல் தோற்றத்தை மாற்றிக் கொள்கிறார். சீனாவின் பாரம்பரிய உடையான சியோங் சம் உடையை அணிந்துகொண்டு, பெண்ணை போலவே தன் சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்டார். தன் தாயை தினமும் அவர்தான் கவனித்துக் கொள்கிறார். உணவு ஊட்டுகிறார். எங்கு சென்றாலும் வயது முதிர்ந்த தாயை தன்னுடைய ஆட்டோ ரிக்‌ஷாவில் அமர்த்திக்கொண்டு அழைத்து செல்கிறார்.

பிபிசி-க்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நான் இவ்வாறு செய்வதால் என்னுடைய அம்மா மகிழ்ச்சி அடைகிறார். அதனால் தான் தொடர்ந்து இதனை செய்து வருகிறேன். என்னிடம் எந்த ஆண் உடைகளும் இல்லை. நான் ஏன் என்னைப் பார்த்து மற்றவர்கள் சிரிப்பதைக் கண்டு பயப்பட வேண்டும்?”, என கூறியுள்ளார்.

அவருடைய தாயும் தன் மகனை மகளாகவே ஏற்றுக்கொண்டார். “என்னுடைய ஒரு மகள் இறந்துவிட்டாள். அன்றிலிருந்து இவள் என்னுடைய மகளாக மாறிவிட்டாள்”, என்று சொல்கிறார் அவருடைய தாயார்.

நிபந்தனையற்ற அன்பிற்கு முன் யாருடைய கேலிகளும் அவரை ஒன்றும் செய்யவில்லை. பெண் போல் தன் தோற்றத்தை மாற்றியதால் அவர் இழந்தது நிறைய இருக்கலாம். ஆனால், ஒரு மகன் தன் தாய்க்கு ஆற்றும் கடமையை அவர் செவ்வனே செய்துவருகிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close