Advertisment

திருப்புமுனை தந்த கன்னியாகுமரி எழுத்தாளர்; உயிர் பெறும் தோல்பாவை கூத்து: 'கலைமாமணி' முத்து சந்திரன்

"தஞ்சாவூரிலிருந்து நாடோடிகளாக கிளம்பிய சாமி ராவ் என்பவர்தான் எனது முதல் தலைமுறை. அவரைத்தொடர்ந்து கிருஷ்ணா ராவ், கோபால் ராவ், சுப்பாராவ் ( எனது தாத்தா), பாலகிருஷ்ணன் ராவ் ( எனது அப்பா), தற்போது நான் என்று கிட்டதட்ட 6 தலைமுறைகளாக தோல்பாவை கூத்து கலையை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்" - முத்து சந்திரன்

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
'கலைமாமணி' முத்து சந்திரன்

கலைமாமணி விருது பெற்ற தோல்பாவை கூத்து கலைஞர் பா. முத்து சந்திரனை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக சந்தித்தோம். 6வது தலைமுறையாக தோல்பாவை கூத்து கலையை நிகழ்த்தி வரும் அவர், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் வசித்து வருகிறார். இந்த நேர்காணல் மூலம் தோல்பாவை கூத்து கலை தொடர்பான ஆழமான பார்வையை நமக்கு தருகிறார்.

Advertisment

தோல்பாவை கூத்து கலையை எப்போது கற்றுக்கொண்டீர்கள் ? உங்கள் முன்னோர்கள் பற்றி சொல்லுங்கள்?

”நான் நாடோடியாகத்தான் பிறந்தேன். எங்களது மூதாதையர்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். 18 தலைமுறைகளுக்கு முன்பாக மராட்டிய மன்னன் சரபோஜி தஞ்சாவூரை ஆட்சி செய்தார். அப்போது தோல்பாவைக் கூத்து உள்ளிட்ட கலைகளை நிகழ்த்துவதற்காக கலைஞர்களை இங்கே அழைத்துக்கொண்டார். அப்படி ஒரு இடப் பெயர்வில்தான் நாங்கள் இங்கே வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சரபோஜி மன்னனின் மறைவுக்கு பிறகு,தோல்பாவை கூத்து கலைஞர்கள் நாடோடிகளாக பயணத்தை தொடங்கினர்.

 ராமாயணத்தின் 10 பகுதிகளை தோல்பாவைக் கூத்து மூலம் நிகழ்த்தி காட்டுவது, நல்லதங்காள் கதை மற்றும் ஹரிச்சந்திரன் கதையை தோல்பாவைக் கூத்து மூலம் நிகழ்த்திகாட்டுவதை, வைத்து வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டனர். ஒரு கிராமத்திற்கு செல்லும் தோல்பாவை கூத்து கலைஞர்கள், 10 நாட்கள் அந்த ஊரில் தங்கி, தொடர்ந்து தோல்பாவை கூத்து நிகழ்சியை நடத்துவார்கள். தொடர்ந்து அவர்கள் வேறு கிராமத்திற்கு கிளம்பிச் செல்வார்கள். எனது தாத்தா சுப்பாராவ் மூலமாகத்தான் தோல்பாவை கூத்து கலையை நான் கற்றுக்கொண்டேன்.

publive-image

தஞ்சாவூரிலிருந்து  நாடோடிகளாக கிளம்பிய சாமி ராவ் என்பவர்தான் எனது முதல் தலைமுறை. அவரைத்தொடர்ந்து  கிருஷ்ணா ராவ், கோபால் ராவ், சுப்பாராவ் ( எனது தாத்தா), பாலகிருஷ்ணன் ராவ் ( எனது அப்பா), தற்போது நான் என்று கிட்டதட்ட 6 தலைமுறைகளாக தோல்பாவை கூத்து கலையை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம். எனது இளமைப் பருவம் வரை எங்களுக்கு வீடு என்று ஒன்று கிடையாது. அந்த காலத்தில் கூண்டு வண்டி என்று அழைக்கப்படும் ஒரு குதிரையால் இயங்கும் வண்டிதான் எங்களுக்கு வீடு. அந்த வண்டியில் ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கே கூடாரம் அமைத்து தோல்பாவை கூத்தை நிகழ்த்துவோம். எனது 19 வயதுவரை நான் நாடோடியாகத்தான் வாழ்ந்தேன்.

publive-image

நாடோடியாக வாழ்ந்ததால் நான் பள்ளிக்கு சென்றது கிடையாது. எந்த தேதியில் பிறந்தேன் என்பதுகூட எனக்கு தெரியாது. எனது 19 வயதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமலை என்ற கிராமத்தில் வீடு அமைத்து வாழத் தொடங்கினோம். 21 வயதில் எனக்கு திருமணம் ஆனது. தொடர்ந்து அப்பாவின் மரணம் நிகழ்ந்ததால், 2 வருடங்கள் தோல்பாவை கூத்து கலையை நான் நிகழ்த்துவதை விட்டுவிட்டேன். பலூன் வியாபாரம் செய்தேன். அதிலிருந்து போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் தோல்பாவை கூத்து கலையை தொடர்ந்து செய்யத்தொடங்கினேன். எனது 19 வயது வரை ரேஷன் அட்டை இல்லாமல்தான் வாழ்ந்திருக்கிறேன்.

தோல்பாவை கூத்து குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படுகிறதா?

கணிக்கர் சாதியில் 12 உட்பிரிவுகள் இருக்கிறது. இந்த உட்பிரிவுகளில் ஒன்றான மண்டிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் தோல்பாவை கூத்து கலையை நிகழ்த்துகிறார்கள். ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து இந்த கலையை நிகழ்த்துவோம்.  தோல்பாவை கூத்து நிகழ்த்தும்போது, எனது அப்பா எப்படி கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரலை மாற்றுவார்,  படங்களை அசைப்பார் என்பதை சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்ததால், இயல்பாகவே எனக்கு இந்த கலை பழகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் ஒட்டுமொத்த தோல்பாவை கூத்து கலையை நிகழ்த்தினால், அவரது மனைவி பக்கவாத்தியங்களை இசைப்பார். மகன் அல்லது மகள் ஸ்ருதி பெட்டியை கவனித்துக்கொள்வார்கள். இப்படித்தான் இந்த கலையை எங்கள் முன்னோர்கள் நிகழ்த்தி வந்திருகின்றனர். வில்லு பாட்டு, கணியான் கூத்து, மேளம் ஆகிய கலைகள் கோயில்களில் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் தோல்பாவை கூத்து அப்படிபட்டதல்ல. இது மக்களின் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கலை.

publive-image

சமந்தபட்ட கிராமங்களுக்கு தோல்பாவை கூத்து கலைஞர்கள், குதிரை வண்டியில் கிளம்புவார்கள். கிராமத்தின் தலையாரியை பார்த்து, எவ்வளவு நாட்கள் கூத்து நடைபெறும் என்பதை கூறுவார்கள். எனது தாத்தா கூத்து நிகழ்த்திய காலத்தில் டிக்கெட் கட்டணம் வசூலித்து தோல்பாவை கூத்து நடைபெற்றது. சினிமா உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததே தோல்பாவை கூத்துதான்.

தோல்பாவை கூத்து தொடர்பான வரலாற்றுப் பதிவு பற்றியும், தற்போது அந்த கலையில் நிகழ்ந்த மாற்றத்தை பற்றியும் பகிர்ந்துகொள்ள முடியுமா?

திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, மதுரை மாவட்டங்களில் உள்ள எல்லா தோல்பாவை கூத்து கலைஞர்களை பற்றிய ஆய்வை  ஏ.கே. பெருமாள் என்ற ஆய்வாளர் மேற்கொண்டார். எங்கள் 5 தலைமுறை பற்றியும் அவர் முழு ஆய்வு செய்து அதை பத்திரிக்கைகளில் வெளியிட்டுள்ளார். 2007-ம் ஆண்டு என்னிடம் அவர் பேசியபோது “ தோல்பாவை கூத்தை நவீனப்படுத்த வேண்டும் ‘ என்று கூறினார். அதற்கான சில குறிப்புகளை என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போதுதான் நான் கதைகளில் மாற்றம் செய்யத் தொடங்கினேன். ‘எச்.ஐ.வி விழிப்புணர்வு, கல்வியின் தேவை, கருவிலேயே பெண் சிசுக்களை கொல்வதற்கு எதிரான விழிப்புணர்வு, சுற்றுப்புறச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட சமூக கருத்துக்களை முன்னிறுத்தி தோல்பாவை கூத்து நிகழ்வை நடத்த தொடங்கினோம். தோல்பாவை  கூத்தின் வரலாறு தொடர்பாக 700 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை ஏ.கே. பெருமாள் எழுதினார். அதில் என்னை பற்றியும் எனது முன்னோர்கள் பற்றி முழுத் தகவல் உள்ளது.

உங்களுக்கு கிடைத்த பாராட்டு மற்றும் விருதகள் பற்றி சொல்லுங்கள்?

பள்ளிகளில் தோல்பாவை கூத்தை நிகழ்த்தியபோது, மாவட்ட ஆட்சியர் என்னை அழைத்து கலைவளர்மணி விருது வழங்கினார். இது ஒரு உத்வேகத்தை எனக்கு வழங்கியது.  2010-ம் ஆண்டு, சென்னை சங்கமம் கலை நிகழ்வில், தோல்பாவை கூத்தை 8 இடங்களில் நிகழ்த்தி காட்டியபோதுதான், மக்களுக்கு இதுபோன்ற ஒரு கலை இருக்கிறது என்றே தெரிய வந்தது. 2018-ம் ஆண்டில் தமிழக அரசு எனக்கு கலைமாமணி விருது வழங்கியது. அமெரிக்கா, கலிபோர்னியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் தமிழ் சங்கம் நடத்திய விழாவில், தோல்பாவை கூத்து கலையை நிகழ்த்தி இருக்கிறேன்.

publive-image

தற்போது இந்த கலையை தேடி ரசிக்கும் நபர்கள் வந்துவிட்டதால், அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் கலையை மீண்டும் உயிர்பிக்க முடிகிறது. குறிப்பாக எனக்கு நெருக்கமான கலைஞர்கள்  தோல்பாவைக் கூத்தை நிகழ்த்தப்போவதில்லை என்று முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது, மீண்டும் தோல்பாவை கூத்து கலைக்கு இவர்கள் திரும்பி உள்ளனர்.

தோல்பாவை கூத்தின் கலை நுட்பங்கள் குறித்தும், அதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் பகிர்ந்து கொள்ளுங்கள்?

எனது தாத்தா காலத்தில் தோல்பாவை கூத்து நிகழ்த்த பயன்படுத்தும்  தோலால் செய்யப்பட்ட படங்களுக்கு வண்ணங்கள் தீட்ட இயற்கையாக கிடைக்கும் தாவரங்களை பயன்படுத்தினார்கள். வாடாச்சி இலையை பயன்படுத்தி பச்சை நிறம் உருவாக்கப்பட்டது, சிவப்பு நிறத்திற்கு சப்பாத்தி கள்ளியை பயன்படுத்தி உள்ளனர். மஞ்சளை உரசி எடுத்தும், பூவரச மொட்டையும் மஞ்சள் நிறம் கிடைக்க பயன்படுத்தி உள்ளனர். மண்ணெண்ணெய் விளக்கிற்கு மேல் பானையை வைத்தால், கிடைக்கும் கரியை கருப்பு நிறத்திற்காக பயன்படுத்தி உள்ளனர்.

ஆனால் இப்போது வாடாச்சி இலை, சப்பாத்தி கள்ளி கிடைப்பதில்லை. இதனால் படங்களுக்கு வண்ணங்களை தீட்ட, சாயங்களை பயன்படுத்துகிறோம். அதுபோல  இயற்கையாக உள்ள பொருட்களிலிருந்து கிடைக்கும் நிறங்களை பயன்படுத்துகிறோம்.

தோல்பாவை கூத்தின் போது பயன்படுத்தும் படங்களை ஆட்டுத் தோலில் செய்கிறோம். எனது பூட்டன், தாத்தா காலத்தில்,  கிட்டதட்ட 100 வருடங்களுக்கு முன்பு  பயன்படுத்திய படங்களை இப்போதும் வைத்திருக்கிறேன். ஆட்டுத்தோலில் இருக்கும் ஜவ்வை நாங்கள் நீக்கிவிடுவோம். இந்தத் தோலில் தேவையான வடிவத்தில் படங்களை செய்வோம். இப்படி ஆட்டுத் தோலில் செய்வதால் படங்கள் கிழியாமல் பல ஆண்டுகள் அப்படியே இருக்கும் . தோல்பாவை கூத்துக்கு பயன்படுத்தும் திரைக்கு, 8 முழம் வேஷ்டி போதுமானது.

தோல்பாவை கூத்தை காண டிகெட் வசூலித்த காலத்தில்( சுமார் 20 வருடங்களுக்கு முன்பு )  எங்களில் ஒருவர் கிராமம் முழுவதும் கொட்டு அடித்துக் கொண்டு செல்வோம். அப்படித்தான்  தோல் பாவை கூத்து நடைபெறும் விவரத்தை மக்களுக்கு அறிவிப்போம். அதுபோல வரைந்த போஸ்டர்களை கையில் எடுத்து செல்வோம்.

publive-image

கூத்து நடைபெறும்போது, படங்களை அசைத்துக்கொண்டே அதற்கு குரல் கொடுப்பேன். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு குரலை மாற்ற வேண்டும். உதாரணமாக குழந்தை கதாபாத்திரத்திற்கு குழந்தைபோலவும், நடுத்தர வயது ஆண் என்றால் அவரது குரல் போலவும், வயதான பாட்டியின் குரலை போல கிட்டதட்ட 30 வகையான குரல்களில் பேசி கூத்தை நடத்துவேன்.

நான் சிறு வயதாக இருக்கும்போது, பெட்டர் மாஸ் லைட் வெளிச்சத்தில் தோல்பாவை கூத்து நடத்தப்பட்டது, அதற்கு முன்பாக பின்னங் கொட்டை எண்ணெய்யில் திரி தூண்டி எரியும் விளக்கின் வெளிச்சத்தில் தோல்பாவை கூத்து நடைபெற்றது.

கேரளாவில் நடைபெறும் தோல்பாவைக் கூத்தில் எண்ணெய்யில் எரியும் விளக்குகளை வைத்துதான் இன்றும் கூத்து நடைபெறுகிறது.  25 சிறிய விளக்குகளை வைத்து தோல்பாவை கூத்து அங்கு நடைபெறும்.

தமிழகத்தில் நடைபெறும் தோல்பாவை கூத்தில் பெட்டர் மாஸ் லைட்டுக்கு பிறகு வெளிச்சத்திற்காக குண்டு பல்பு பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஹாலோஜன் பல்பும், தற்போது எல்.இ.டி பல்பும் பயன்படுத்தப்படுகிறது.

பயிற்சி வகுப்புகளை நடத்துகிறீர்களா? இதில் போதிய வருமானம் கிடைக்கிறதா?

என்னிடம் தோல்பாவை கூத்தை கற்றுக்கொண்ட விருதுநகரைச் சேர்ந்த மாணவி மாநில அளவில் விருது வாங்கி உள்ளார். இந்தக் கலையை  கற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னை அணுகும் நபர்களுக்கு , பயிற்சி அளிக்கிறேன்.

இந்த கலையை நம்பிதான் எனது ஒட்டுமொத்த குடும்பமும் வாழ்கிறது. இதன் மூலம் நிலையான வருமானம் வருவதில்லை. நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதைதான் நான் பெற்றுக்கொள்கிறேன். எனது முதல் மகன் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுகிறார். இரண்டாம் மகன் மனவளர்ச்சி குன்றியவர். கடைசி மகன் படித்துக்கொண்டிருக்கிறார். 12 பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் எங்களுடையது.  அனைவருமே இந்த வருமானத்தை நம்பித்தான் இருக்கிறோம்.  சொந்த வீடு கூட எங்களால் இதுவரை கட்ட முடியவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment