பாகுபலி படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிந்தாலும், இன்னமும் அதன் மீதான ஈர்ப்பு அப்படியே இருக்கிறது. படத்தின் பிரமாண்டத்தில் இருந்து ரசிகர்கள் யாரும் மீளவில்லை. படம் ரூ.1000 கோடியை தாண்டி வசூலித்து சாதனைப் படைத்து வருகிறது. இன்னமும் பாகுபலியின் வேட்டை தொடர்கிறது.
எஸ் எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் பாகுபலி கேரக்டரின் மீது தற்போது மக்களுக்கு அலாதி பிரியம் வந்துவிட்டது. திரைப்படத்தில் பாகுபலி... பாகுபலி.... என ஒரு சேர மக்கள் கூச்சலிடும் சில காட்சிகளை பாக்கும் போது பெரும்பாலானோருக்கு மெய்சிலிர்த்துவிடும். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ‘பாகுபலி... பாகுபலி’ என கூப்பிட மக்கள் தயாராகிவிட்டனர். ஆனால் அது தமிழ்நாட்டில் அல்ல, ஓடிஸாவில். அட ஆமாங்க, ஓடிஸா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் இப்ப பாகுபலி சத்தம் நீக்கமற நிறைந்திருக்கிறது.
புவனேஸ்வரில் மிகவும் பிரபலமான நந்தன்கனன் மிருகக்காட்சி சாலை. இங்கு பிறந்து 13-மாதங்களான புலிக்குட்டிக்கு பாகுபலின்னு பெயர் வச்சிருக்காங்க. கடந்த 10-ம் தேதி தான் தான் பெயர் சூட்டுவிழா நடந்தது. பெயர் வைத்தது அந்த மாநில வனத்துறை அமைச்சர் பைஜெயஸ்ரீ ரோட்ரே.
கடந்த ஏப்ரல் மாதம் அந்த புலிக்குட்டிக்கு நந்தன் என பெயர் வச்சாங்களாம். காட்டுப்புலிக்கு பிறந்த குட்டி என்பதால் பாகுபலி என்று பெயர் வைக்குமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்ததாம். மக்கள் விருப்பபடியே அமைச்சரும் பெயரை சூட்டியிருக்கார்.
ஏற்கனவே பாகுபலி சேலைகளை பெண்கள் விரும்பி அணிந்து வருகின்றனர். பேஷன் உலகில் அது பிரபலமாகி வருகிறது. பாகுபலி என்பது ஒரு மந்திர சொல்லாக மாறி வருகிறது, இளைஞர்கள் மத்தியில்.