தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தனது சொந்த ஊரான திருவாரூர் சென்றார். அப்போது திருவாரூர் மேற்கு வீதியில் அமைந்திருக்கிற கமலாலயம் குளத்துக்குச் சென்றார். குளத்துக்கு நடுவில் அமைந்திருக்கிற நாகநாத சுவாமி கோயிலுக்கு படகில் சென்ற ஸ்டாலின் அங்கு நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.
அப்போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் அதில், “கலைஞர் வளர்ந்த திருவாரூரிலுள்ள கமலாலயம், கடல் போலத் தோற்றமளிக்கும். ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.
இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர்!” என பதிவிட்டிருந்தார்.
திருவாரூரில் உள்ள கமலாலயம் குளம் மிகவும் பிரபலமானது, கருணாநிதி எப்போதும் திருவாரூர் சென்றாலும் அந்த இடத்தை பார்க்காமல் செல்ல மாட்டார். ஆனால் எத்தனையோ முறை திருவாரூர் வந்திருக்கிற ஸ்டாலின் இதுவரை கமலாலயம் குளத்துக்குள் சென்றதே இல்லை. இந்த முறை கமலாலயம் குளத்துக்குச் சென்றவர் படகு மூலம் குளத்தைச் சுற்றிப் பார்த்திருக்கிறார்.
தியாகராஜர் கோயில்
சைவ சமயங்களில் தலைமை பீடமாக விளங்க கூடியது திருவாரூர் தியாகராஜர் கோயில். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்த வனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என இந்த ஆலயம் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

இத்திருக்கோயிலின் மேற்கு பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கமலாலயம் குளம். காவேரி ஆற்றில் வரும் நீர் தானாக குளத்தில் நிரம்பும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளம் தஞ்சை நாயக்கர் காலத்தில் வெட்டப்பட்டது. இப்போதும் இந்த குளத்தின் நில உரிமை மன்னர்களின் வம்சாவளியினரிடமே உள்ளது என்கின்றனர்.
மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ள கமலாலய திருக்குளத்தின் நடுவே நாகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் சர்வ தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டதாக கூறப்படுகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாத தாய்மார்கள் திருக்கோயிலுக்கு வந்து இங்கு நடைபெறும் யாகத்தில் பங்கேற்று யோகாம்பாளுக்கு படைத்த தயிர் பிரசாதத்தினை 16 நாட்கள் உண்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இக்கோயிலுக்கு படகின் மூலம் மட்டுமே செல்ல முடியும். தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை இப்படகு இயக்கப்படும். இதில் சென்றால் இந்த கமலாலய குளத்தில் அமைந்துள்ள நாகநாதர் சன்னதிக்கு சென்று இறைவனை வழிபடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“